2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஈழத்தமிழரின் ஆடற்கலையைக் கண்டுபிடிக்கவேண்டும்

Administrator   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
 ஈழத்தமிழர்களாகிய நாம் இந்த நாட்டில் ஒரு தனித்துவ தேசிய இனமாக இருக்கின்றோம். எப்படியாக சிங்கள மக்களுக்கென தனித்துவமான ஓர் நடன வடிவமாக கண்டி நடனம் உள்ளது. அதேபோன்று ஈழத்தமிழர்களாகிய எமக்கென்றும் ஒரு தனித்துவமான இனத்துவ அடையாளத்துடன்கூடிய ஓர் ஆடற்கலைவடிவம் வேண்டுமென, அருட்தந்தை தமிழ்நேசன் அடிகளார் தெரிவித்தனர்.

மன்னார் நகர மண்டபத்தில், வடமாகாணப் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு, நேற்று வெள்ளிக்கிழமை(23) உரையாற்றும் போது உரையாற்றினார்.  

மேலும் அவர் உரையாற்றுகையில், கூத்து என்னும் நமது மரபு வேருக்குள்ளே சென்றே நாங்கள் இதைக் கண்டுபிடிக்க வேண்டும். பரதத்தினை நம்முடைய நடனம் என்று சொல்லமுடியாது. அது இந்தியாவில் இருந்து வந்தது. எனவே, தனித்துவமாக விளங்கும் ஈழத்தமிழருடைய கலை, கலாசார, பண்பாட்டுக்கு ஏற்ற வகையில் தனித்துவமான ஓர் ஆடல் வடிவத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இந்த ஈழத் தமிழருக்கென தனித்துவமான ஓர் ஆடற் கலைவடிவம் இல்லையா? என்ற கேள்வி தமிழர் அல்லாத ஏனைய அறிஞர்களால், கலைஞர்களால் பன்னெடுங்காலமாக எழுப்பப்பட்டு வந்துள்ளது.
ஈழத்தமிழருக்கான ஆடற்கலை வடிவம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில், ஆடற்கலை கலைஞரான வேல் ஆனந்தன் போன்றோர் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர். அத்துடன் இவ்விடயம் தொடர்பில், பல்கலைக்கழகங்களும் ஆய்வுகள் பலவற்றை மேற்கொண்ட வண்ணம் உள்ளன.

  சிங்கள மக்களின் ஆடற்கலை வடிவமாக இன்று கருதப்படும் கண்டி நடனம் என்பது அவர்களுடைய பாரம்பரிய ஆடல் வடிவங்களில் இருந்து மீளுருவாக்கம் செய்யப்பட்ட ஒன்று. கண்டி நடனம் என்பது பல்வேறு ஆடல் வடிவங்களின் கலப்பாகும். பஞ்சாப் மாநிலத்தில் ஆடப்படும் „பங்காரா ஆடல...; வடிவமும் அதன் அடித்தளங்களில் ஒன்று எனச் சொல்லப்படுகின்றது. மன்னார் கூத்துக்களின் சில ஆடல் வடிவங்களும் கண்டி நடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சரத் சந்திரா போன்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

கண்டி நடனம் இன்று சிங்கள மக்களின் பாரம்பரிய ஆடல் வடிவமாக சர்வதேச மட்டத்தில் அறியப்பட்டுள்ளது.  எனவே வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இது தொடர்பில் தீவிரமாக சிந்திக்கவேண்டும். இவ்விடயத்தோடு தொடர்புடைய அறிஞர்கள், கலைஞர்களை ஒன்றுகூட்டி இத்தகையதொரு ஆடல் வடிவத்தைக் கண்டுபிடிக்க, உருவாக்க ஆவன செய்ய வேண்டும்.

 இந்தியாவில் இருந்து இங்கு வந்த கர்னாடக இசையையும், பரதநாட்டியத்தையும் நம்முடைய பாரம்பரரிய இசை வடிவம் என்றோ, கலை வடிவம் என்றோ நாம் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது.

நமக்கான ஓர் இசையை, ஓர் ஆடல் வடிவத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும். நமது கூத்து மரபுக்குள் இருந்து இவற்றை நாம் கண்டுபிடிக்க முடியும் இதற்கான முயற்சிகள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .