Editorial / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
மகாவலித் திட்டத்தின் நன்மை, தீமைகள், சவால்கள் மற்றும் சிக்கல் தன்மைகளைக் கருத்திற் கொண்டு, முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மகாவலித் திட்டச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு, மகாவலி எதிர்ப்புத் தமிழர் மரபுரிமைப் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், வடக்கின் ஏனைய பகுதிகளிலும் மகாவலித் திட்டத்தின் கீழ் விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகளையும் கைவிடுமாறு, அப்பேரவை வலியுறுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில், மகாவலி அதிகாரசபையால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிராக முல்லைத்தீவில் இன்று (28) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, மகாவலி எதிர்ப்புத் தமிழர் மரபுரிமைப் பேரவையால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கும் முகமாக, மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்ட மகஜரிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,போருக்குப் பின்னர் மகாவலி ''L'' வலயத்தின் கீழ்,மணலாறு பிரதேச செயலாளர் பிரிவில் 6,000 பெரும்பான்மையினக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் இக்குடியேற்றங்களுக்காக,
1984ஆம் ஆண்டு பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் காணிகளும் மேலும் பல ஆயிரம் ஏக்கர் காணிகளும் பெரும்பான்மையின மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு, காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும் அப்பேரவை தெரிவித்துள்ளது.
மணலாறு பிரதேசச் செயலாளர் பிரிவோடு தனது செயற்பாடுகளை மட்டுப்படுத்தியிருந்த மகாவலி அதிகார சபையானது, தற்போது கரைதுறைப்பற்றுப் பிரதேசச் செயலகப் பிரிவினுள் தனது காணி அதிகாரத்தைப் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளதாகவும் அப்பேரவைக் குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன், நந்திக் கடல் மற்றும் நாயாறுக் களப்புகள் என்பன மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு இயற்கைப் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையானது, அப்பகுதி மீனவர்களின் வருவாயையும் உழைப்பையும் வாழ்வாதாரத்தையும் மோசமாகப் பாதிக்கும் செயற்பாடாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொக்கிளாய், கொக்கத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கெணி ஆகிய கடற்கரையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பெரும்பான்மையின மீனவர்களுக்கு மகாவலி அதிகார சபையால் வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக மீளப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன், நீதிக்குப் புறம்பாகப் பெரும்பான்மை மக்களுக்குப் பிரித்து வழங்கப்பட்ட 2,000 காணிகளை தமிழ் மக்களுக்கு மீள வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், தன்னிச்சையாகச் செயற்படும் தொல்பொருள் திணைக்களத்தின் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள அப்பேரவை, வடக்கு- கிழக்கு எல்லைக் கிராமங்களில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உடன் நிறுத்தத் தவறும் பட்டசத்தில், அது இன நல்லிணக்கத்தை பாதிக்குமெனவும் தெரிவித்துள்ளது.இதேவேளை, இயற்கைப் பாதுகாப்பு வலயங்களாகப்பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நந்திக்கடல் மற்றும் நாயாற்றுக் களப்புக்களில், மீண்டும் சட்ட ரீதியாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டுமென, அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
21 minute ago
32 minute ago
39 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
32 minute ago
39 minute ago
58 minute ago