2025 மே 02, வெள்ளிக்கிழமை

’எடுக்கப்படும் தீர்மானம் புதியவையாக இருக்க வேண்டும்’

Niroshini   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம்  புதிய தீர்மானமாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த  நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன், அது ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக்கொள்வதாக இருக்க வேண்டும் என்கின்ற பொதுவான நிலைப்பாடு ஒன்று இருக்கின்றதெனவும் கூறினார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயஙகள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று, இன்று (29) நடைபெற்றத. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வு இடம்பெறுகின்றபோது, இலங்கை விடயத்தில் ஏற்கெனவே அமுலில் உள்ள 40.1 என்ற தீர்மானம் முடிவுக்கு வர இருக்கிறது எனவும் அது மார்ச் மாதம் 2021ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதாக இருந்தாலும், இந்த வருட ஆரம்பத்திலேயே இலங்கை அரசாங்கம் இந்த விடயங்களுக்கு ஒத்துழைக்க மாட்டோம் வெளியேறுகின்றோம் என்று அறிவித்தல் கொடுத்திருக்கின்றார்களெனவும் கூறினார்.

'மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்விலே தமிழர் தரப்பிலே ஒன்றிணைந்த ஒற்றுமையான கோரிக்கையில் எதை நாங்கள் வைக்க வேண்டும் என்பது சம்பந்தமாகதான் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

'இதுவரை மூன்று தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்தின அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 301 என்ற தீர்மானம், 2017 மார்சிலே  34.1 என்கின்ற தீர்மானம் 2019 மார்ச்சிலே 40.1 என்கின்ற தீர்மானம் என்பனவாகும்.

'இனிமேல் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும். அது ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக்கொள்வதாக இருக்க வேண்டும் என்கின்ற பொதுவான நிலைப்பாடு ஒன்று இருக்கின்றது. ஆனாலும் இந்த மூன்று தீர்மானங்களும் எமது மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதிலே வெற்றி காணவில்லை. ஆகையாலேயே இதைவிட வீரியமான செயற்பாடு திறண் உள்ள தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்கின்ற கருத்தும் எல்லோரிடமும் இருக்கின்றது' எனவும், சுமந்திரன் தெரிவித்தார்.

அதற்கு மாறாக இன்னுமொரு கருத்தும் நிலவியதெனவும் ஜெனிவா பேரவையில் இந்த விவகாரம் இருக்குமளவும் இதை இன்னெரு தளத்ததுக்கு கொண்டு செல்வது கஷ்டமாக இருக்குமெனவும் தெரிவித்த அவர், ஆகையால், ஜெனிவாவிலிருந்து இந்த விவகாரத்தை கைவிட்டுவிட வேண்டும், சர்வதேவ நீதிமன்ற பொறிமுறை போன்றவற்றுக்குள் புhவதற்கான பொறிமுறைஎடுக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றதெனவும் கூறினார்.

'எது எப்படியாக இருந்தாலும் அனைத்து தரப்பினுடைய கருத்துக்களையும் செவி மடுத்து விசேடமாக பாதிக்கப்பட்டவர்களுடைய கருத்துக்களுக்கு விசேடமாக செவிமடுத்து இதை அணுகுகின்ற முறை எப்படியானது என்பதை குறித்து தீர்மானங்களை எடுப்பதற்கும், சேர்ந்த கலந்துரையாடுவதற்கும் ஒரு சிறிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது.
'அந்த குழு தாமதமாகாமல் வரப்போகும் ஓரிரு நாள்களுக்குள் சந்தித்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க இருக்கிறது' எனவுட், அவர் கூறினார்.

'இம்முறை ஜெனிவா அமர்வுக்கு பொதுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள். கடந்த காலங்களில் தனித்தனியாக சென்றமை பலவீனமானதாக காணப்பட்டதாக கருதலாமா?' என, சுமந்திரனிடம் ஊடகவியலாளர் வினவினார்.

அதற்கு பதிலளித்த சுமந்திரன், 'அது பலவீனமானதற்கு அப்பால், இன்றைக்கு இலங்கையில் உள்ள அராங்கம் மிக பலம் பொருந்திய நிலையில் உள்ள அரசாங்கம். எங்களுக்கு நீதியை மறுப்பதிலே முனைப்பாக இருக்கின்ற அரசாங்கம்.

'ஆகையால் அப்படியான அரசாங்கத்தை கொண்டிருக்கின்ற நாங்கள் எண்ணிக்கையிலும் சிறுபான்மையினராக இருக்கின்றோம், பலத்திலும் குறைவானவர்களாக இருக்கின்றோம்.
'குறைந்தது நாங்கள் ஒன்றாக நின்றாலாவது எங்களுக்கு உள்ளே பலத்தை கூட்டிக்கொள்ளலாம் என்கின்ற நம்பிக்கையிலேதான் இன்றைக்கு இந்த சந்திப்பு நடந்திருக்கின்றது' என்றார்.

இன்றைய கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்துகொள்ளாமை தொடர்பிலும் அவரிடம் வினவப்பட்டது,

'இன்றைய கூட்டத்தைப் புறக்கணித்ததாக சொல்லப்படவில்லை. வரவிருந்தவருக்கு வேறு வேலை இருந்ததாகதான் சொல்லப்பட்டிருந்தது. ஆகவே, அந்த கட்சியில் ஒருவரைத்தவிர கூடுதலான ஆட்கள் இருக்கிறதாகதான் நம்புகிறேன்.
'ஒருவர் வரமுடியாவிட்டாலும் இன்னொருவரையாவது அனுப்பியிருக்கலாம். ஆனாலும் அடுத்த கூட்டத்துக்கு வருவார்கள் என்று நம்புகின்றோம். அனைவரோடும் பயணிப்பதுதான் நல்லது. அடுத்தடுத்த கட்டங்களில் பேசி தீர்மானிப்போம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .