2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

ஏ-32 போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

Editorial   / 2017 ஜூன் 23 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன் 

பூநகரி இரணைதீவு மக்கள் ஏ-32 வீதியை மறித்து இன்று (23) காலை முதல் மேற்கொண்டு வந்த போராட்டம், பூநகரி பிரதேச செயலர் எஸ்.கிருஸ்ணேந்திரனின் கோரிக்கையை அடுத்து கைவிடப்பட்டது.

இதேவேளை, வழமை போன்று கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என, இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள், தமது பூர்வீக நிலத்தினை விடுவிக்கக் கோரி மே மாதம் 1 ஆம் திகதி முதல் முழங்காவில் இரணைமாதா நகரில் தொடர்ச்சியாக நடாத்திய கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அரசாங்கத்திடமிருந்து தீர்வுகள் எவையும் கிடைக்காத நிலையில், காலை ஏ-32 வீதியை வழிமறித்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, அவ்விடத்துக்கு வந்த பூநகரி பொலிஸ் அத்தியட்சகர், அவ்விடத்திலிருந்து மக்களை அகலுமாறு தெரிவித்ததுடன், வீதி மறிப்பில் ஈடுபடுவதற்கான கிளிநொச்சி நீதிமன்றின் தடையுத்தவையும் காண்பித்து அகன்று செல்லுமாறு கோரினார். அத்துடன் இரணைதீவு பங்குத்தந்தையையும் ஏசினார்.

இதனால் குழப்பமடைந்த மக்கள் அங்கிருந்து அகன்று செல்லமாட்டோம் என தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அகன்று செல்லா விட்டால் கண்ணீர்ப் புகைக்குண்டு, தடியடி நடாத்திக் கலைக்க வேண்டி வரும் என, பொலிஸ் அத்தியட்சகர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், குறித்த இடத்துக்கு விரைந்த பூநகரி பிரதேச செயலர் எஸ்.கிருஸ்ணேந்திரன், எதிர்வரும் புதன்கிழமை (28) பாதுகாப்பு அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் நானும் கலந்து கொள்வேன். கலந்துரையாடலில் இரணைதீவு தொடர்பாக தெரிவிப்பேன். அப்போது பாதுகாப்பு அமைச்சு கூட்டத்தில் தெரிவிக்கின்ற முடிவை உங்களிடம் தெரிவிக்கின்றேன். அதுவரை அமைதி காக்கவும் என தெரிவித்தார்.

இதனையடுத்து வீதிமறியல் போராட்டத்தை கைவிட்ட மக்கள், தாம் வழமை போன்று இரணைமாதா நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து அகன்ற சென்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .