2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஒமிக்ரான் திரிபுடையவர்களை கண்டறிய பரிசோதனை

Niroshini   / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக, வடக்கில், ஒமிக்ரான் திரிவுடையவர்கள் உள்ளார்களா என்பதை கண்டறிய பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று  (8) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில், நேற்றைய தினம் (7), புதிதாக மேலும் 46 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.

இவர்களில் 29 பேர் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் தங்கி இருந்து அயலில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற மாணவர்களாகவும், பல்கலைக்கழக மாணவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும், அவர் கூறினார்.

தற்போது பண்டிகைக் காலம் என்பதால், மக்கள் அதிகமாக நடமாடி திரிகின்ற நிலையில், மக்கள் சுகாதார வழி முறைகளை மிகவும் இறுக்கமாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக,  ஒமிக்ரான் திரிவு இலங்கையிலும் ஒருவருக்கு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த திரிவு இலங்கையிலும் பரவக்கூடிய சூழ்நிலையில், மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் நடமாடுமாறும், அவர் வலியுறுத்தினார்.

"மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக, வடக்கில், ஒமிக்ரான் திரிவுடையவர்கள் உள்ளார்களா என்பதை கண்டறிய, இன்று (8) தொடக்கம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

"அதன் முடிவுகளில் இருந்து, புதிதாக ஒமிக்ரான் திரிபுடைய தொற்றாளர்கள் இருக்கின்றார்களா என்பது தொடர்பில்  கண்டறிய முடியும்" எனவும், அவர் தெரிவித்தார்.

இதேவேளை,  பனங்கட்டுகொட்டு, பெரியகடை, சின்னக்கடை, மூர்வீதி, மற்றும் பேசாலை ஆகிய பகுதிகளில் அதிகளவில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 83 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X