2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கணேசபுரம் வீதி விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா - மன்னார் வீதியில் அமைந்துள்ள கணேசபுரம் பிரதேசத்தில் வீதி விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு குறித்த பிரதேசத்திலிருந்து 90களில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துச் சென்ற மக்கள், தற்போது மீளக்குடியமர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த பிரதேசத்தில் இரவு வேளைகளில் யானைகளின் நடமாட்டம் இருப்பதாக  வட மாகாண சுகாதார அமைச்சர் டொக்டர். ப.சத்தியலிங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து, அமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட நிதியுதவியுடன் பிரதான வீதிக்கு மின்விளக்குகள் பொருத்தும் ஆரம்ப நிகழ்வு, கணேசபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் திங்கட்கிழமை மாலை  நடைபெற்றது.

கணேசபுரம் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் உறுப்பினர் ராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச சபையின் செயலாளர் விஜயதாஸ், கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் நடேசன், மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
 
இந்த நிகழ்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய வட மாகாண சுகாதார அமைச்சர்,  தனது அமைச்சு மீள்குடியேற்ற கிராமங்களின் அபிவிருத்தியில் கூடிய அக்கறை செலுத்துவதாகவும் அதனடிப்படையில்தான் 10 மில்லியன் ரூபாய் செலவில் கிராமிய வைத்தியசாலையொன்று கணேசபுரத்தில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒரு கிராமத்தின் அபிவிருத்தியில் கல்வி, சுகாதார துறைகளின் அபிவிருத்தி மிக முக்கியமானதென்றும் அவற்றை படிப்படியாக பூர்த்திசெய்ய வடக்கு மாகாணசபை அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .