2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

கிராம அபிவிருத்திச் சங்கங்களை உருவாக்க எதிர்ப்பு

Kogilavani   / 2017 ஜூன் 28 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சவேரியார்புரம் கிராம அலுவலகர் பிரிவில், இரண்டு கிராம அபிவிருத்திச் சங்கங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சவேரியார்புரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக, வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு, அச்சங்கத்தினரால் அவசர கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சவேரியார் புரம் கிராம அலுவலகர் பிரிவில் இரண்டு கிராம அபிவிருத்திச் சங்கங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வளவு காலமும் எமது கிராமத்தில் உள்ள மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தார்கள். மக்களுக்குள் பொது, சமூக, மத வேறுபாடுகள் என்றும் இருந்ததில்லை. ஆனால் தற்போது, முசலி பிரதேசத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர், ஒரு கிராமத்தில் இரண்டு கிராம அபிவிருத்திச் சங்கங்களை உருவாக்கக் கூறியதால், இரு மதங்களுக்கிடையில் முருகல் நிலை ஏற்பட்டுள்ளது.

“புதிதாக அமைக்கப்பட்டுள்ள சங்கத்தில், ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களை மாத்திரம் இணைத்துக்கொண்டு புதிய சங்கம் உருவாக்கும் ஆரம்பக் கூட்டமும் கூட்டப்பட்டுள்ளது. அதில், சிலாபத்துறை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள ஒரே மதத்தைச் சேர்ந்த சகோதரர்களையும் இணைத்துக்கொண்டுள்ளனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள சங்கத்தில் உள்ளவர்களில் சிலர், எமது கிராமத்தில் உள்ள ஏனைய சங்கங்களின் உறுப்பினர்களாகவும் உள்ளனர். அவற்றில் அவர்கள், கடன் உதவிகளையும் பெற்றுள்ளனர்.

எனவே புதிதாக எமது கிராமத்தில் உருவாக்கப்படவுள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் ஏற்படவுள்ள முரண்பாடுகளை நிறுத்தி, மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் புதிதாக அமைக்கப்படவுள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்” என, அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .