2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

கைத்தொழில் பேட்டைக்கு அருகாமையில் மண்டையோடு மீட்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 ஜூலை 05 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு அருகாமையில் காணப்பட்ட கழிவு நீர் செல்லும் மதகினுள் இருந்து, மனித மண்டையோடு ஒன்று, மன்னார் நீதவான் ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில், இன்று (05) மாலை மீட்கப்பட்டது.

குறித்த மதகினுள் மனித மண்டையோடு காணப்படுவதாக, மன்னார் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த இடத்துக்கு, கடந்த திங்கட்கிழமை (03) மாலை சென்று பார்வையிட்ட மன்னார் பொலிஸார், மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில், விசேட சட்ட வைத்திய அதிகாரி டபில்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ,மன்னார் சட்ட வைத்திய அதிகாரி எம்.யு.எம்.சப்வான் ஆகியோரின் பங்களிப்புடன் அடையாளம் காணப்பட்ட மண்டையோடு அகழ்வு செய்யும் பணி, இன்று மாலை 2.45 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது, மன்னார் பொலிஸார், விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில், மன்னார் நீதவான் முன்னிலையில், கழிவுநீர் செல்லும் மதகினுள் இருந்து குறித்த மனித மண்டையோடு மீட்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, வெற்று இளநீர் கோம்பைகள், இரண்டு முழுமையாக மீட்கப்பட்டபோதும், வேறு எவ்வித தடயங்களும் மீட்கப்படவில்லை.

மீட்கப்பட்ட மனித மண்டையோடு, மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், மேலதிக விசாரணைகளை, மன்னார் பொலிஸார், விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மனித மண்டையோடு மீட்கப்பட்ட இடத்தில் இருந்து, மன்னார் நோக்கி,  சுமார் 100 மீற்றர் தொலைவில், மன்னார் பொது மயானம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .