2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சோபாலபுளியங்குளம் காணியை அடாத்தாகப் பிடிக்க முற்பட்ட மக்கள்

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

தமக்கு வயற்காணி வேண்டும் என்று கோரி, வவுனியா - சோபாலபுளியங்குளம் பகுதியில் உள்ள அரச காணியை, அப்பகுதி மக்கள், நேற்று (02) அடத்தாகப் பிடிக்க முற்பட்டதால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

சோபாலபுளியங்குளம் கிராமத்தில், நிரந்தரமாக வசித்துவந்த மக்கள், தமது கிராமத்துக்கு முன்பகுதியில் உள்ள 40 ஏக்கர் அரச காணியை, விவசாயம் செய்வதற்குப் பயன்படுத்துவதற்கு வழங்குமாறு கோரி, பல வருடங்களாகப் போராடி வந்தனர்.

இந்நிலையில், தமது போராட்டங்களுக்குத் தீர்வு கிடைக்காத நிலையில், கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, குறித்த அரசகாணியை விவசாயத்துக்குப் பயன்படுத்துவதற்காக, நேற்று முன்தினம் (02), உழவு இயந்திரத்தின் மூலம் வரம்பு அமைத்து, அக்காணிகளைப் பகிர்ந்துகொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன்போது, குறித்த காணி தங்களுடையது என உரிமை கோரி வந்த மூவர், காணி அபிவிருத்தி வேலையை உடனடியாக நிறுத்துமாறு கூறி, கிராம மக்களுடன் முரண்பட்டுள்ளனர்.

இருப்பினும் அதைப் பொருட்படுத்தாது காணி அபிவிருத்தி வேலைகளில் மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, கிராம சேவையாளர் சம்பவ இடத்துக்கு வருகைதந்து, காணி அபிவிருத்தி வேலைகளை நிறுத்துமாறு கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கிராமசேவையாளருடன் முரண்பட்டனர்.

இந்நிலையில், ஒரு வார கால அவகாசத்துக்குள், குறித்த காணிப் பிரச்சினை தொடர்பாக தீர்வு வழங்குவதாக, கிராமசேவையாளர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, காணி அபிவிருத்தி வேலைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X