2025 ஜூலை 16, புதன்கிழமை

தெங்குபயிர் செய்கை சபையின் நடவடிக்கையை ஆராய குழு நியமிக்கப்படும்

Niroshini   / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பளை கரந்தாய் பகுதியில், தெங்குபயிர் செய்கை சபை மக்களை அடாத்தாக வெளியேற்றி காணிகளை அபகரித்துள்ளமைக்கு தீர்வுகாணும் பொருட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டு அதன் மூலம் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெங்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

கமத்தொழில் காணி பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் 12ஆவது கூட்டத்தொடர் நேற்று (07) நாடாளுமன்றத்தின் குழுஅறை இலக்கம் 1இல் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சிறிதரன், கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கரந்தாய் பகுதியில் 1972ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் வாழ்ந்து வந்த காணிகளில் அத்துமீறி மக்களை வெளியேற்றி அவர்களது வீடுகள் கிணறுகள் கட்டுமானங்கள் என்பவற்றை கனரகவாகனங்களை கொண்டு அகற்றி அவர்களது காணிகளை ஆக்கிரமித்துள்ளது.

கடந்த ஏழு வருடங்களாக இந்தக் காணிகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றிணைந்து நடத்தி இதற்கான முடிவுகளை எடுக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் இதுவரை எந்தவிதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தான் இதனை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த காணி விடயம் தொடர்பில் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பல தடவைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் அதன் தலைவர் சமுகமளிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த காணி விடயம் தொடர்பில் இடம்பெற்ற கடும் வாக்கு வாதத்தையடுத்து, எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து அதன்படி விசேட குழு ஒன்றினை நியமித்து அதன்மூலம் தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தெங்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வட்டக்கச்சி ஒருங்கிணைந்த விவசாயப்பண்ணைக்கு உரிய காணி தொடர்பிலும் இதனைவிடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில் குறித்த வட்டக்கச்சி விவசாயப்பண்ணைக்குரிய காணியானது இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டில் இருப்பதனால் இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X