2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கி சூடு நடத்தப்பட்டன் மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது

Niroshini   / 2016 மே 30 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, கேப்பாபிலவில் துப்பாக்கி சூடு நடத்தியமை அவரின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, கேப்பாவிலவில் இளைஞன் மீது சூடு நடத்த முயற்சிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் வசித்துவரும் வி.திலீபன் என்பவரது வீட்டுக்குள் கடந்த 28.05.2016 அன்று சிவில் உடையில் நுழைந்த இருவர் தம்மை பொலிஸார் என்று அடையாளப்படுத்திக்கொண்டு குறித்த இளைஞரை கைதுசெய்ய வந்துள்ளதாகவும், அதற்குரிய நீதிமன்ற பிடியாணை தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் அந்த நீதிமன்ற பிடியாணையை தனக்கு காட்டுமாறு கோரியபோது காட்ட மறுத்தவர்கள், நீதிமன்ற பிடியாணையை காட்டாவிட்டால் வரமாட்டேன் என்று எதிர்ப்பு தெரிவித்த இளைஞன் மீது துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அதிஸ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்துக்கு வன்னி மாவட்ட மக்களின் சார்பாக எனது கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.

குறித்த சந்தேக நபர் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்றதற்காக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருவதாகவும், அவர் ஒவ்வொரு வழக்குக்கும் தவறாமல் சமுகமளித்து வருவதாகவும், இன்று (30.05.2016) வழக்கு தவணை ஒன்று இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் தொடர்ச்சியாக நீதிமன்ற விசாரணைக்கு சமுகமளித்துவருவதாக கூறப்படும் அவரை கைதுசெய்யுமாறு அழைப்பாணை அனுப்பியது யார்? அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸார் அதனை காட்ட மறுத்தது ஏன்? தப்பிச்செல்ல எத்தனிக்காத, பொலிஸாரை தாக்க முற்படாத குறித்த சந்தேக நபர் மீது அதுவும் வீட்டுக்குள் வைத்து பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பொலிஸாருக்கு தேவை என்ன இருந்தது? என்ற கேள்விகளும் எழுகின்றன.
இந்த இடத்தில் குறித்த சந்தேக நபரினுடைய அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது. அத்துமீறி அவர் மீது துப்பாக்கிச்சூடு பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் தான் இவ்வாறான சட்டவிரோத சூடுகளும், கொலைகளும், கடத்தல்களும், காணாமல் ஆக்கப்படுதல்களும் மலிந்து காணப்பட்டன. தற்போதைய ஆட்சியில் அத்தகைய நிலைமைகள் இல்லை என்று ஜனாதிபதியும், பிரதமரும் கூறிவரும் நிலையிலேயே கேப்பாப்பிலவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களை கிள்ளுக்கீரைகளாக, புல் பூண்டு பூச்சிகளாக கருதியே நடத்தி வருகின்றது என்பதற்கு ஓர் உதாரணமாகும். கையில் துப்பாக்கி உள்ளது என்ற தைரியத்தில் எதையும் செய்ய துணிபவர்களிடம் எவ்வாறு நியாயத்தை எதிர்பார்ப்பது?

ஆகவே, இந்த சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை நடத்தியவர்கள் மீது பக்கச்சார்பற்ற பகிரங்க விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .