2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம்:வவுனியா தெற்கு வலயத்தினர் புறக்கணிப்பு?

Yuganthini   / 2017 ஜூலை 02 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

 

தம்மை ஓரங்கட்டுவதற்கு முயல்வதாக, தேர்வாளர்கள் மீது, நேர்முகத் தேர்வில் பங்கேற்ற வவுனியா தெற்கு வலய தொண்டர் ஆசிரியர்கள் பலர், விசனம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த பல வருடங்களாக, தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக, கடந்த 28ஆம் திகதி முதல் தொடர்ந்து மூன்று தினங்கள், யாழ். பொதுநூலக மண்டபத்தில், நேர்முகத் தேர்வு நடைபெற்று வந்தது.

இதற்காக அங்கு பிரசன்னமாகியிருந்த நேர்முகத் தேர்வு அதிகாரிகள், வவுனியா தெற்கு வலயப் பாடசாலைகளில் கடமையாற்றிய தொண்டர் ஆசிரியர்களை, நிரந்தர நியமனத்தில் உள்வாங்கக்கூடாது என்ற அடிப்படையில் கடும் போக்குடன் செயற்பட்டதாக, தொண்டர் ஆசிரியர்கள் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

தொண்டர் ஆசிரியர்களாக தாம் பாடசாலைகளில் இணைந்தபோது பதிவு செய்யப்பட்ட பாடசாலை சம்பவத் திரட்டுப் புத்தகத்தின் (லொக் புக்) பிரதியை, பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரால் உறுதிப்படுத்திக்கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தமைக்க அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும், அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் உறுதிப்படுத்தல்களை மீறி, அச்சம்பவத் திரட்டு புத்தகப் பதிவில் இடைச்செருகல் உள்ளது எனக்கூறி, நிரந்தர நியமனத்தில் பலரை உள்வாங்க முடியாத வகையில், தேர்வாளர்கள் செயற்பட்டதாக, தொண்டர் ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

இதனால், கடந்த பல வருடங்களாக கற்பித்த தொண்டர் ஆசிரியர்கள் பலரும், நிரந்தர நியமனத்தில் உள்வாங்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட செயற்பாடெனவும், அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன், இது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .