2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

நீதிமன்ற கட்டளையை மீறி புலனாய்வாளர்கள் அச்சுறுத்துகின்றனர்

George   / 2017 மார்ச் 31 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நீதிமன்ற கட்டளையை மீறியும் இராணுவத்தினரதும் இராணுவ புலனாய்வார்களினதும் இடையூறுகள் தொடர்வதாக, தமது நிலங்களை விடுவிக்கக்கோரி 30ஆவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில், படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி, கடந்த முதலாம் திகதி முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், 30ஆவது  நாளாக நேற்று தமது கவனயீர்ப்புப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்நிலையில், தொடர்ந்தும் நீதிமன்ற கட்டளையைமீறி படையினரினதும் இராணுவப் புலனாய்வாளர்களதும் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி கேப்பாப்புலவு பகுதியில் நடைபெற்றுவரும் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் இராணுவத்தினரும் முள்ளியவளைப் பொலிஸாரும் இணைந்து தடை உத்தரவைக்கோரி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 16ஆம் திகதி குறித்த வழக்கு விளக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நாட்டின் அரசியலமைப்பின் படி பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது அவர்களது உரிமை பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் கட்டளை எதனையும் நீதிமன்றம் பிறப்பிக்காது என சுட்டிக்காட்டிய முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.எம்.சம்சுதீன், கேப்பாப்புலவு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தனர்.

அத்துடன், தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக்கோரியே கேப்பாப்புலவு மக்கள் குடியேற்றப்பட்டுள்ள மாதிரிக்கிராமத்தின் அருகிலேயே குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் இந்நிலையில், படையினரும் இராணுவப் புலனாய்வாளர்களும் புகைப்படங்களை எடுத்தும் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என கேப்பாபபுலவு மக்கள் தமது தரப்பு சட்டத்தரணி வி.திருக்குமரன் அவர்கள் மூலம் மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மன்றில் ஆஜராகியிருந்த முள்ளியவளை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மற்றும் கேப்பாப்புலவு இராணுவமுகாம் பொறுப்பதிகாரி ஆகியோர் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நீதிமன்ற கட்டளைகளை மீறியும் கேப்பாப்புலவு மக்களின் போராடடத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தினமும் வரும் பொது அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்களையும் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

இதனைவிட போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள இராணுவத்தினரின் உணவகம் அருகில் உள்ள பஸ் தரிப்பிடம் ஆகியவற்றில் இரவு பகலாக சிவில் உடைகளில் உள்ள இராணுவத்தினரும் இராணுவப்புலனாய்வாளர்களும் அலைபேசி ஊடாக புகைப்படங்களை எடுத்தும் ஒலிப்புதிவுகளையும் செய்து வருகின்றனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிலரை இரகசியமாக அழைத்து அங்கு வருபவர்களின் விவரங்களை கேட்டறிய முனைகின்றனர். அமைதியான முறையில் தாங்கள் தமது நிலமீட்புப்போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், இவ்வாறு நீதிமன்ற கட்டளைகளைமீறியும் படையினர் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர் என கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .