2025 ஜூலை 05, சனிக்கிழமை

நிலஅளவீட்டை எதிர்த்து நடுவீதியில் அமர்ந்திருந்த மக்கள்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, முள்ளிவாய்கால் கிழக்கில் நிலஅளவை மேற்கொள்ளவதற்கு சென்ற நிலஅளவையாளர்கள், மக்களின் எதிர்ப்பை அடுத்து திரும்பிச்சென்ற சம்பவமொன்று, நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் கிழக்கில், பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை, கடற்படையினருக்கு வழங்குவதாகத்  தெரிவித்து, நிலஅளவை மேற்கொள்வதற்காக நில அளவையாளர்கள் சிலர், நேற்றுக் காலை அப்பகுதிக்குச் சென்றிருந்தனர்.

அதன்போது, வட்டுவாகல் பாலத்தை அண்மித்தப் பகுதியில், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, நிலஅளவையாளர்களை திரும்பிச் செல்லுமாறும், இது தமது பூர்விக நிலமெனவும் கோரியதற்கமைய, நில அளவைப் பணிகள் கைவிடப்பட்டன.

'இனிமேல் காணி அளவீடு மேற்கொள்ள அனுமதி வழங்கப் போவதில்லை என உறுதி மொழி தரவேண்டும்' என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததுடன், வீதியின் நடுவே அமர்ந்து கொண்டனர். அதன்காரணமாக, குறித்த பகுதியினூடான போக்குவரத்து, சுமார் இரண்டு மணித்தியாலங்களாகத் தடைப்பட்டிருந்தது.

மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று, மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாக தெரிவித்தனர். அத்துடன், மக்களிடமிருந்துப் பெற்றுக்கொண்ட மகஜரை, மாவட்டச் செயலாளரிடம் சமர்ப்பித்து, அவரூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக, அவ்வதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் கலைந்துச் சென்றனர்.

'அரச அதிகாரிகளே இராணுவ ஆக்கிரமிப்புக்கு துணைபோகாதீர்கள், எமது உரிமைகள் எமக்கு வேண்டும், பறிப்பதற்கு ஒருபோதும் இடமளியோம், பறிக்கப்பட்ட மண்ணும் உரிமையும் எமக்கு வேண்டும், நமது மண் நமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதாதைகளை ஏந்தியவாறு, அர்ப்பாட்டக்காரர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்,  வடமாகாணசபை உறுப்பினர்களான அன்டனி ஜெகநாதன், துரைராசா ரவிகரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .