2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தவும்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரணைமடு குள அபிவிருத்தி காரணமாக, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள, நன்னீர்  மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மக்களின் நலன்கருதி அவர்களால் தங்களது தொழிலை மீண்டும் ஆரம்பிக்கும் வரையில் ஏதேனும் நிவாரணம் வழங்க, ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்தே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 5,200 மில்லியன் ரூபாய் செலவில் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இதன் பணிகள் 2017ஆம் வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிய வருகிறது. இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதானது எமது மக்களுக்கு பாரிய பயனுள்ளதாக அமையும். அதே நேரம், இத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர், இரணைமடுக் குளத்தால் பயனடைகின்ற அனைத்து மக்களதும் கருத்துக்கள் கோரப்பட்டு, அதற்கமைய இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிய வரவில்லை.

குறிப்பாக, இக்குளத்தின் மூலமான வாழ்வாதாரத்தைக் கொண்டிருக்கும் கமக்கார மக்களது கருத்துக்கள் அறியப்பட்ட அளவில், நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மக்களது கருத்துக்கள் அறியப்பட்டு, அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் எதுவும் திட்டமிடப்பட்டதாகத் தெரியவரவில்லை.

இரணைமடு மேற்குக் கரை பகுதியில் சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 132 குடும்பங்களும், கிழக்குக் கரைப் பகுதியில் 85 குடும்பங்களும், மேலும், சுமார் 35 வரையிலான பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், சுமார் 45 வரையிலான மீன் வர்த்தகர்களும் இந்த குளத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் பலர் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக மேற்படித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் நிலையில், வேறு மாற்றுத் தொழில் முறைகளுக்குப் பழக்கப்படாதும் இருக்கின்றனர். இந்த நிலையில் 2017ஆம் வருட இறுதியில் இக்குளத்தின் அபிவிருத்திப் பணிகள் முடிவுறும் எனக் கூறப்பட்டாலும்,  அதன் பின்னர் நீர் சேமிக்கப்பட்டு, மீன் குஞ்சுகள் இடப்பட்டு, அவை வளரும் வரையில் இவர்களால் தொழில் செய்ய இயலாத நிலையே உருவாகியுள்ளது.

அதுவரையில் இம்மக்களது வாழ்வாதாரம் கருதி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன், இக் குளத்தின் நீர் அடிக்கடி திறந்துவிடப்படுவதால், தேங்கியிருக்கும் மீன் குஞ்சுகள் குளத்தைவிட்டு வெளியேறுகின்ற நிலை தொடர்வதால், அதற்குரிய பாதுகாப்பு வலைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .