2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நீதவானுக்கு கொலை மிரட்டல்: சந்தேக நபர்களுக்கு மறியல்

Editorial   / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும், எதிர்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும், திருகோணமலை, மூதூர் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு நேற்று  (25) சென்றிருந்த இவ்விருவரும், நீதிமன்றப் பதிவாளரிடம் சென்று, திருகோணமலை, மூதூர் நீதவான் நீதிமன்றத்திலிருந்து தாங்கள் வருகைதந்துள்ளதாகவும், மன்னார் நீதவானைச் சந்திக்கவேண்டுமெனக் கோரி, ஆவணங்கள் சிலவற்றைக் காண்பித்துள்ளனர்.

தங்கள் இருவருக்கும் நீதவானுக்கும் இடையில், நட்பு ரீதியான உறவு உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர்கள், நீதிச் சேவை ஆணைக்குழுவால் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆவணங்களையும், அடையாள அட்டையையும்  பயன்படுத்தியே மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளரை, அவ்விருவரும் தொடர்புகொண்டுள்ளனர்.

இதேவேளை, மன்னார் நீதவான் ரீ.சரவணராஜாவின் மெய்ப்பாதுகாவலருடன் அவ்விருவரும் உரையாடியுள்ளனர். நீதவானை சந்திப்பதற்கு இடமளிக்காமையை அடுத்து, நீதவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், மெய்ப்பாதுகாவலருடன் உரையாடியுள்ளனர். அதன் பின்னர், அவ்விருவரும் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.

இந்த நிலையில், அவ்விருவர் மீதும் சந்தேகம் கொண்ட நீதிமன்றப் பதிவாளரும் நீதவானின் மெய்பாதுகாவலர்களும்,  மன்னார் நீதிமன்ற பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். அதுதொடர்பில், மன்னார் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, அவ்வருவரும், நேற்று முன்தினம் இரவே கைதுசெய்யப்பட்டனர்.  

அவ்விருவரும், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவர் தனது தீய நடத்தையின் காரணமாக, நீதிச் சேவை ஆணைக்குழுவால் சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளவரெனத் தெரிய வருகின்றது.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, தாங்கள் மேற்​கொண்டு வருவதாக, மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .