2025 மே 01, வியாழக்கிழமை

நெற்பயிர் களையைக் கட்டுப்படுத்த ’றெட் லீப் றைஸ்’ அறிமுகம்

Niroshini   / 2021 ஜனவரி 10 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செ.கீதாஞ்சன்

வடக்கு மாகாணத்தில், குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்செய்கைக்குள் வளரும் பன்றி நெல்லு மற்றும் களையைக் கட்டுப்படுத்துவதற்கு, 'றெட் லீப் றைஸ்' வகை நெல்லினம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலைய பண்ணை முகாமையாளர் கி.கீர்த்திகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இந்த நெல் இனம், இந்தியாவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டதெனவும் இது, மூன்று மாத வயதுடைய நெல் வர்க்கமாகுமெனவும் கூறினார்.

இந்த நெல் வர்க்கமானது முளைத்து 14 - 21 நாள்களின் பின்னர், அவற்றின் தாள், பச்சை நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாற்றமடைந்து காணப்படுமெனத் தெரிவித்த அவர், இதன் விளைச்சலானது ஹெக்டயருக்கு 3,500 கிலோகிராம் தொடக்கம் 4,000 கிலோகிராம் வரையில் கிடைக்குமெனவும் கூறினார்.

இதன் அரிசி வெள்ளைநாடு நெல் அரிசியை ஒத்தது எனத் தெரிவித்த கீர்த்திகன், தற்போது இந்த நெல்லினம், அதிகளவில்  கிளிநொச்சி மாவட்டத்தில், முரசுமோட்டைப் பகுதியிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியிலும், சிறிய அளவில் ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்திலும் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது எனவும் கூறினார்.

இதன் தாள், சிவப்பு நிறமாக காணப்படுவதால், இலகுவாக வேறுபிரித்து அறிந்து, பன்றி நெல்லைக் களத்தில் இருந்து அகற்றலாமெனவும் அத்துடன், சாதாரண நெல் வர்க்கங்களை விட ஒப்பீட்டளவில் நோய், பீடைத் தாக்கங்கள் இந்த நெல்லினத்துக்கு குறைவாகும் எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .