2025 ஜூலை 16, புதன்கிழமை

பாட்டுக்கு ஆடிய நால்வருக்கு வலைவீச்சு

George   / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், கி.பகவான்

அல்லாரை கிராம அலுவலரை கடமை செய்ய விடாமல் தடுத்ததுடன் அவரை தாக்கிய நால்வர் இதுவரை கைது செய்யப்படாமையை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் சாவகச்சேரி பிரதேச செயலக ஊழியர்களால் புதன்கிழமை  (19) கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அல்லாரை கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் உள்ளவர்கள், புதுவருட தினத்தில் இருந்து 3 நாட்களாக,  ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலித்ததுடன்,  இரவு- பகலாக தாமும் பாடி அயலவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியுள்ளனர். இதுதொடர்பில் அல்லாரைப் பகுதி மக்கள், கிராம அலுவலருக்கு அறிவித்துள்ளனர்.

அப்பகுதிக்கு விரைந்த கிராம அலுவலரான மோ.பிரகாஸ், வீட்டு உரிமையாளரைச் சந்தித்து  அயலவர்களின் முறைப்பாட்டினை தெரிவித்துள்ளார். அதனையடுத்து வீட்டு உரிமையாளர், ஒலிபெருக்கியை நிறுத்தியுள்ளார்.

போதையுடன் பாடலைக் கேட்டு ஆடிக் கொண்டிருந்த  அங்கிருந்த மூவர், பாடலை நிறுத்தக் காரணமாக இருந்த  கிராம அலுவலரைத் தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த அலைபேசியை பறித்து உடைத்துள்ளனர்.

இதனையடுத்து கிராம அலுவலர், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் அங்கு சென்றபோது வீட்டு உரிமையாளரும் கிளிநொச்சி மற்றும் கச்சாய் பகுதிகளைச் சேர்ந்தவர்களெனக் கருதப்படும், கிராம சேவையாளரைத் தாக்கிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து, கிராம அலுவலரை தாக்கிய நால்வரைத் தேடி கொடிகாமம் பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நால்வரையும் கைது செய்ய வலியுறுத்தி இக்கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X