2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிரதேசவாதம் வேண்டாம்: மலையக தமிழர்கள் கோரிக்கை

George   / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

'ஏனைய மக்களைப் போல் எமது பொருளாதாரத்தையும், கலாசாரத்தையும், அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பேணிப் பாதுகாத்து வாழும் வகையில் வழிமுறைகள் உருவாக்கப்படவேண்டும். உருவாக்கப்படுகின்ற நல்லிணக்க பொறிமுறையில் பிரதேச வாதங்கள் கடந்த, இனங்களுக்குள்ளேயேயும் நல்லிணக்கம் ஏற்படுத்தும் வகையில் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்' என வவுனியா வாழ் மலையக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா பிரதேச செயலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற  நல்லிணக்க பொறிமுறை செயலணி குழுவின்  மக்கள் கருத்தறியும் அமர்வின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்து அறிக்கையொன்றையும் கையளித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் வாழ்ந்து வரும் மலையக தமிழர்களாகிய நாம், ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து சம உரிமையை அனுபவிக்கும் ஒரு சமூகமாக வாழ விரும்புகின்றோம். நல்லிணக்கத்துக்கான முயற்சிகளின் போது, நாம் முகம் கொடுத்துவரும் ஒதுக்குதலை நீக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வவுனியா மாவட்டத்தில் 42சதவீதமான மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். வவுனியா தெற்கு சிங்கள செயலக பிரிவு தவிர்ந்த ஏனைய மூன்று பிரதேச செயலக பிரிவுகளிலும் அநேகமான புரங்கள் என பெயரிடப்பட்ட கிராமங்களில்  மலையக மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சமூக பொருளாதார கலாசார உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கையின் போது இம் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.  

1958ஆம் ஆண்டுமுதல் தொடர்ச்சியாக இடம்பெற்ற இனக் கலவரங்களினால் பெரும் இழப்புகளுக்கு முகம் கொடுத்து மலையக மக்கள் இம்மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து இங்கும் யுத்தக்காலத்தில் பெரம் இழப்புகளை சந்தித்தனர்.

இந்நிலையில், எமது சமூகம் ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர். எமது மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. இதனால் எமக்கு அபிவிருத்தித் திட்டங்கள் கிடைப்பதில்லை. எனவே உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் எமது பிரதநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும்.

1958 தொடக்கம் அரசாங்கத்தால் பகிரந்தளிக்கப்பட்ட மற்றும் நாங்களாவே குடியமர்ந்துக்கொண்ட காணிகளுக்கு உரிய உறுதிப்பத்திரம் இல்லை. ஏனையவருக்கு வழங்குவதுபோல் எமக்கும் காணி உறுதி வழங்க வேண்டும். எமது காணிகளில் விவசாயத்தை மேற்கொள்ள முடியாதுள்ளதோடு, காட்டுவிலங்குகளின் தொல்லைகளும் காணப்படுவதால் பொருளாதாரத்தில்  முன்னேற முடியாதுள்ளது' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .