2025 ஜூலை 16, புதன்கிழமை

பஸ் விபத்தில் ஒருவர் பலி: ஆயுதங்களுடன் பொலிஸார் குவிப்பு

George   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, புதுமுறிப்பில் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் மற்றும் கிளிநொச்சியிலிருந்து அக்கராயன்குளம் நோக்கி பயணித்த சிறியரக மோட்டார் சைக்கிள் என்பன மோதி விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்தில் படுகாயமடைந்த கோணாவில் வீதி, அக்கராயன்குளம் பகுதியைச்சேர்ந்த இராமச்சந்திரன் ஆறுமுகம் (வயது 67) என்பவர் படுகாயமடைந்து, வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

“குறித்த பஸ்ஸின் தடை (பிறேக்)  ஒழுங்காக செயற்படாமையே இந்த விபத்துக்கு காரணம். இந்த பஸ், மரம் ஒன்றுடன் சனிக்கிழமை (08) மோதியதுடன், ஒரு வருடத்துக்கு முன்னர், ஸ்கந்தபுரம் பகுதியில் இதே பஸ், ஒருவரை மோதியதில் அவரும் சம்பவ இடத்தில் பலியானார்” என, பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்தில்  ஒன்று திரண்ட  பிரதேச இளைஞர்கள், “டிப்போ முகாமையாளர் சம்பவ இடத்துக்கு வந்து, குறித்த பஸ்ஸை இனி சேவையில் ஈடுபடுத்தமாட்டோம் என கடிதம் மூலம் உறுதிமொழி வழங்கிய பின்னரே,  சம்பவ இடத்திலிருந்து பஸ்ஸை எடுத்துச் செல்ல அனுமதிப்போம்” என தெரிவித்து எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், இளைஞர்களுடன் கலந்துரையாடி சமரசப்படுத்த முயற்சித்த​போதும், அதற்கு இளைஞர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. பின்னர், நொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சர் றொசான் ராஜபக்ஷ அங்கு வந்து, இளைஞர்களுடன் கலந்துரையாடி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

இதற்கிடையில், கலகம் அடக்கும் மற்றும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X