2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

’பாதுகாப்புப் படையினர் இருப்பதில் ஆட்சேபனை இல்லை’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஜூலை 06 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இரணைதீவில், கடற்படையினரும் இராணுவத்தினரும் இருப்பதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரணைதீவை விடுவிக்குமாறு கோரி, இரணைதீவு மக்கள், இவ்வாண்டு மே மாதம் 1ஆம் திகதி தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்களுக்கு உரிய பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

“இரணைதீவு விடுவிக்கப்பட்டால், சர்வதேச குற்றச் செயல்கள், போதைப்பொருட் கடத்தல்களுக்கு கேந்திர நிலையமாக இரணைதீவு காணப்படும் என தெரிவிக்கப்பட்டே இரணைதீவு விடுவிக்கப்படவில்லை. இலங்கை இந்திய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் எமது இரணைதீவு உள்ளது. எனவே, நவீன ராடர்களை இங்கு பொருத்தி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே தான் எம்மை எமது தீவினுள் அனுமதிக்கின்றார்கள் இல்லை.

ஆனால், இலங்கையில், அதிகமாக, வட பகுதியில், இவ்வாறான சிறிய தீவுகளில் இராணுவத்தினர், பொலிஸார் அவர்களுக்கான முகாம்கள் அமைத்துள்ளதுடன் அத்தீவுகளில் மக்களும் வசிக்கின்றார்கள். அவ்வாறு இராணுவத்தினர் வாழுகின்ற பகுதிகளில், மக்களையும் அனுமதித்து மக்கள் தமது சொந்த இடங்களில் வாழ்கின்ற போது, ஏன், எம்முடைய தீவை அவ்வாறு விடுவிக்க முடியாது. எமது தீவில் இராணுவத்தினர், பொலிஸார், ராடர் கருவிகள் உள்ளமை தொடர்பில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எம்மை எமது தீவில் அனுமதிக்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சு, இரண்டு வார காலத்துக்குள் பதில் தருவதாக கூறியிருந்தனர். ஆனால், எமக்கான பதில்கள் கிடைக்கவில்லை.

எமது தீவை விடுவித்தால், போதைப்பொருள் கேந்திர நிலையமாக, எமது தீவு மாறும் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், நாங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டவர்கள். இதுவரை, இரணைதீவைச்சேர்ந்த எவரும் போதைக் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டதாக வரலாறு இல்லை. இனியும் அவ்வாறே இருப்போம். ஏனெனில் எமது இடத்தை நாங்கள் மதிக்கின்றோம்” எனத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .