2024 மே 02, வியாழக்கிழமை

பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்

Freelancer   / 2023 டிசெம்பர் 28 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு போகும் செயற்றிட்டம் ஆரம்பிக்கவுள்ளதை வரவேற்கின்றோம். ஆனால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளது நலனுக்கு எதுவித பாதகமும் நீண்ட கால அடிப்படையில் நிகழக்கூடாது என்பதே எமது வேண்டுகோள் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து நீர் வழங்கல் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இன்றைய தினம்(28) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

  பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு போகும் செயற்றிட்டம் ஆரம்பிக்கவுள்ளதை வரவேற்கின்றோம். ஆனால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளது நலனுக்கு எதுவித பாதகமும் நீண்ட கால அடிப்படையில் நிகழக்கூடாது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார்ந்த திணைக் களங்களுடனும் விவசாயிகளுடனும் தீர்க்கமான உரையாடல் மேற்கொள்ளப்படவில்லை. 358 ஹெக்டேயருக்கு மட்டுமே நீர்பாசனம் வழங்குவதாக தங்கள் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 513 ஹெக்டேயர் பயிர் செய்யப்படுவதாக கமநல சேவை திணைக்கள தகவல் தெரிவிக்கின்றன.  

தற்போது எட்டுக்குளங்கள் காலபோகம், சிறுபோகம் செய்கைக்கு பாலியாற்றில் இருந்து நீர் பெறுகின்றன.அதிலும் சிறு போகத்திற்கு ஏழு தொடக்கம், ஒன்பது தடவைகள் நீர் நிரப்ப வேண்டும். மழை குறைந்த காலத்தில் தாங்கள் அமைக்க இருக்கும் நீர்த்தேக்கத்திலிருந்து எப்படி நீரை விடுவிப்பீர்கள். குடிநீருக்கா? அல்லது விவசாயத்திற்கா? முதன்மைப்படுத்துவது எனும் நிலை உருவாகும்.

இவ்வருட சிறுபோகத்தில் கடம்பன்குளம் விவசாயிகளுக்கும் காரையன்கண்ணாடி விவசாயிகளுக்கும் பாலியாற்று நீர்ப் பகிர்வில் பெரும் பிரச்சினை உருவாகியது. இது மாத்திரமன்றி கோடை காலத்தில் பாலியாற்று நீர் வராவிட்டால் நிலத்தடி நீர் குறைவடையும். அதனால் பாலியாற்றுக்கரையின் இருபுறமும் உள்ள மேட்டுநில செய்கை விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும். 

அதனால் அவர்களுக்கு பெரும் வாழ்வாதார இழப்பு ஏற்படும் என அஞ்சுவதாக எம்மிடம் கூறுகின்றனர். 

தற்போது உள்ள வயல் காணியை விட மேலும் சில ஆண்டுகளில் ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலம் அதிகரிப்பதற்கான ஏது நிலை காணப்படுவதாகவும் அதற்கு நீர் பெறுவது எவ்வகையில் என்று  கேள்வி எழுப்புகின்றனர்

. பாலியாற்றில் மழை காலத்தில் கடலுக்குள் கலக்கும் உபரி நீரை யாழிற்கான குடிநீர் திட்டம் உருவாக்குகிறோம். எனும் போர்வையில் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு விடுமோ என அந்தப் பகுதி விவசாயிகள் அஞ்சுகின்றனர்.      

   எனவே இத் திட்டம் தொடங்குவதற்கு முன்னதாக துறைசார்ந்த திணைக்களங்கள் விவசாய அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோருடன் அராங்க அதிபர் தலைமையில்  கலந்துரையாடல் மேற்கொண்டு இவற்றுக்கு தீர்வு காணுதல் அவசியமாகும்.

 இதற்கு மாறாக அதிகாரிகள் தான் தோன்றித்தனமாக செயற்படுத்த முனைந்தால் அதன் விளைவு விபரிதமாகும். என்பதுடன் இரணைமடு குடிநீர் விவகாரம் போல் நிகழலாம்.  என்பதையும் முன்னெச்சரிக்கையுடன் அறியத்தருகின்றோம்.  என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதியின் செயலாளர்  ஜனாதிபதி செயலகம் கொழும்பு  ,  அரசாங்க அதிபர் மன்னார்,உதவி ஆணையாளர் கமநல சேவைகள் திணைக்களம் ,தலைவர் கமக்காரர் அமைப்பு   வெள்ளாங்குளம்,பாலியாறு.      ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .