2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’புராதான இந்து இடங்களில் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கவும்’

Niroshini   / 2021 ஜனவரி 24 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

புராதான இந்து இடங்களில் வழிபாடு செய்வதற்கு, ஜனாதிபதியும்  பிரதமரும், அனுமதி தர வேண்டுமென்று, சிவசேனை அமைப்பின் வன்னி மாவட்ட தலைவர் அ. மாதவன் தெரிவித்தார்.

வவுனியா - நொச்சிமோட்டையில் அமைந்துள்ள அபிராமி அம்மன் கோவிலில், இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், புராதான இடங்களுக்குச் செல்லும் தொல்லியல் திணைக்களம், அங்கு பூசை வழிபாடுகளை செய்வதற்கு தடைவிதித்து வருகின்றதென்றார்.

தாங்கள் வெறுமனவே கோவில்களை மட்டும் வழிபட்டு வராமல், இங்குள்ள புராதான இடங்களையும் வழிபட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அத்தோடு நாட்டிலே சுமூகமான உறவை மேம்படுத்தி இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோமெனவும் கூறினார்.

குறிப்பாக இராமாயணம், மகாபாராதம் போன்ற தங்களது இதிகாசங்கள் வாழ்வியல் முறைகளை எடுத்துக்காட்டுகின்றதெனத் தெரிவித்த அவர், வடமாகாணத்தில் உள்ள குறிப்பாக புராதான இடமான வெடுக்குநாரி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் கைது மிகவும் கண்டிக்கத்தக்கதாக இருக்கிறதெனவும் கூறினார்.

தொல்லியல் திணைக்களமானது கொடுப்பனவை பெற்றுக்கொண்டு செயற்படுகின்றதெனக் குற்றஞ்சாட்டிய அவர், ஆனால் தாங்கள் மண்ணை, மரத்தை, வழிபட்டு வருவதோடு, குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக வழிபட்டு வருவதன் மூலமாக தாங்கள் எந்தவித கொடுப்பனவும் இல்லாமல், இந்தப் புராதான இடங்களை பாதுகாத்து வருவதாகவும் கூறினார்.

குறுந்தூர்மலையிலே ஆதிகாலம் தொட்டு ஆதிலிங்கேஸ்வரர் வழிபாடு முறைகள் இருந்து வருகின்றதெனவும் ஆனால், தொல்பொருள் திணைக்களம் அங்கு சென்று வழிபாட்டு முறைகளிலே இருக்கக்கூடிய தங்களது வழிபாட்டு சின்னங்களை சிதைத்து இருப்பதை கூட காணக்கூடியதாக இருக்கிறதெனவும், அவர் சாடினார்.

ஆகவே, ஜனாதிபதியும் பிரதமரும் நேரடியாக கவனித்து, தங்களது வழிபாட்டு முறைகளை அறிந்த நீங்கள,; தங்களது வழிபாட்டுக்காக, அனைத்து கோவில்களிலும் சென்று வழிபடுவதற்கு அனைவருக்கும் சமத்துவமான சமவுரிமையை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோமெனவும், மாதவன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .