2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’போரின் வடுக்களிலிருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை’

Niroshini   / 2021 ஜூன் 22 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

போரின் வடுக்களிலிருந்து மீண்ட சமுதாயமாக இன்னும் நாங்கள் மாறவில்லையென, வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜோசப் ஜெயகெனடி தெரிவித்தார்.

அத்தடன், போரின் வடுவிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இன்னும்; அந்த அவலத்தைச் சந்தித்து கொண்டிருக்கின்றார்கள் என்றும், அவர் சட்டிக்காட்டினார்.

வடக்கு - கிழக்கில் உள்ள சிறுவர்களின் தற்போதைய நிலை தொடர்பில் வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், அன்று வடமுனையில், போராளிகளாக சிறுவர்கள் நிற்கின்றார்கள் என்று விமர்சித்த சர்வதேச அரங்கு, இன்று, சிறுவர்கள் பல்வேறுபட்ட ரீதியில் துன்பப்படுகின்ற, வேதனைப்படுகின்ற அவலங்களை கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகுமென்றார்.
இருப்பினும், வடக்கு - கிழக்கில் எடுக்கப்பட்ட தகவல்களின்படி, உண்மையிலேயே சிறுவர் தொழிலாளிகள் என்ற தகவல்கள் சரியாக இல்லாவிட்டாலும், தந்தையை இழந்த சிறுவர்கள் அதிகமாக இருக்கின்றனரென்றும், அவர் கூறினார்.

அதேபோல், தந்தையை இழந்து, தொழில் தேடி வெளிநாடுகளுக்குச் சென்ற தாய்மார்கள் உள்ள குடும்பம்  அதிகமாக இருக்கின்ற இந்த நிலைமையில், சிறுவர்கள் வேலைக்கு சென்று தான் தமது குடும்பங்களை பார்க்க வேண்டிய ஓர் அவலத்துக்குள் தள்ளப்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றதெனவும், அவர் தெரிவித்தார்.


'கடைகளிலும் சரி, வாகனங்கள் பழுதுபார்க்கும் இடங்களிலும் சரி, தெரு ஓரங்களிலும் சரி பல சிறுவர்கள் ஊதுபத்தி விற்கின்றார்கள். அச் சிறுவர்களை நாங்கள் துரத்தி பிடித்து வேதனைப்படுத்துகின்ற சம்பவங்கள் அதிகமாகவே இருக்கின்றன. அவர்களை வினவுகின்ற போது, 'அப்பா இல்லை, அம்மா வெளிநாடு போயிட்டா, அல்லது அம்மா மறுமணம் செய்து விட்டா, நான் அம்மம்மாவுடன் இருக்கின்றேன்' என்று சொல்கின்ற துன்பமான செய்தியாகத்தான் அவர்களிடம் கேட்க கூடியதாக இருக்கின்றது. எனவே, இதை மாற்றி அமைப்பதற்கு நாங்கள் ஆக்கபூர்வமான பல பணிகளை செய்தாக வேண்டி இருக்கிறது' என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .