2025 ஜூலை 05, சனிக்கிழமை

முல்லைத்தீவில் பட்டனிச்சாவு ஏற்படும்?

Menaka Mookandi   / 2016 ஜூன் 26 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கடற்பரப்பில், பிற மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் வெளிச்சம் பாய்ச்சி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக, கடற்றொழில் அமைச்சரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

'முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிச்சம் பாய்ச்சி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி, முற்றாக நிறுத்தப்படவேண்டும். கடற்றொழில் அமைச்சர், கடந்த பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அச்சந்திப்பில், வெளிச்சம் பாய்ச்சி மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை முன்வைத்திருந்தோம். அமைச்சரும் வெளிச்சத்தினைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருந்தார். அதற்கமைய, உரிய நடவடிக்கையினை, கடற்றொழில் திணைக்களம் எடுக்கவேண்டும்.

மேலும், வெளிச்சம் பாய்ச்சி தொழிலில் ஈடுபடுவோரை கடற்படை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். ஆனால், கடற்றொழில் பணிப்பாளர், முல்லைத்தீவு உதவிக் கடற்றொழில் பணிப்பாளருக்கு இருபது கிலோமீற்றருக்கு அப்பால் கடலில் வெளிச்சம் பாய்ச்சித் தொழில் செய்யலாமென்று கடிதம் அனுப்புகின்றார். வர்த்தமானியில் தடை என்று பிரசுரிக்கப்பட்ட விடயத்தினை, கடற்றொழில் பணிப்பாளருக்கு எவ்வாறு சரியான விடயமாக அமைந்தது என்று தெரியவில்லை.

இது தொடர்பாக கடந்த வாரம் கடற்றொழில் அமைச்சரிடம் நடைபெற்ற கலந்துரையாடலில் விளக்கமளித்திருந்தோம். செம்மலை தொடக்கம் நாயாறு , கொக்கிளாய் வரை, தற்போது வெளிச்சம் பாய்ச்சி சட்டவிரோத மீன்பிடி நடைபெறுகின்றது.

முல்லைத்தீவு கடல்மீன்கள் வெளிச்சத்தினை நோக்கிச் செல்வதினால், முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். போர்க் காலத்தில் இல்லாத பட்டினியினை முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். இதனால், பட்டினிச் சாவு கூட முல்லைத்தீவில் ஏற்படலாம்' என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .