2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மன்னாரில் தடுப்பூசியை பெறவந்த பலருக்கு ஏமாற்றம்

Niroshini   / 2021 ஜூலை 12 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகர் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இரண்டு பாடசாலைகளில், இன்றும் (12) நேற்றும் (11); மேற்கொள்ளப்பட்ட பைசர் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளின் போது, பல மணி நேரம் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு ,குறித்த தடுப்பூசி வழங்கப்படவில்லை என, பாதிக்கப்பட்டவர்கள்  தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு, முன்னுரிமை வழங்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை (09) தலைமன்னாரில் முதல் கட்டமாக 'பைசர்' கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் தாழ்வுபாடு, பட்டித்தோட்டம், எழுத்தூர், எமில் நகர், சாவற்கட்டு, பனங்கட்டுக்கொட்டு மேற்கு, பனங்கட்டுக் கொட்டு கிழக்கு, சின்னக்கடை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும், மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் பெரியகடை, மூர்வீதி, உப்புக்குளம் வடக்கு, உப்புக்குளம் தெற்கு, பள்ளிமுனை கிழக்கு, பள்ளிமுனை மேற்கு, சௌத்பார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் கடந்த 2 தினங்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்தல்களை வழங்கி இருந்தனர்.

குறித்த அறிவித்தல்களுக்கு அமைவாக குறித்த கிராமங்களை சேர்ந்த மக்கள் தமக்கு உரிய நிலையங்களுக்கு, ஞாயிற்றுக்கிழமை (11) காலை சென்று, நீண்ட வரிசையில் நின்று தமக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள், தமக்கு உரிய நிலையங்களுக்கு இன்று (12) காலையே சென்றுள்ளனர்.

நீண்ட வரிசையில் பல மணிநேரம் நின்ற அவர்களை, தடுப்பூசி முடிந்துவிட்டதாக கூறி, அங்கிருந்த அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதனிடம் வினவிய போது,

மன்னார் மாவட்டத்துக்கென வழங்கப்பட்ட 20 ஆயிரம் பைசர் கொரோனா தடுப்பூசிகளில் உயிலங்குளம் மற்றும் முருங்கன் ஆகிய பகுதிகளில் உள்ள வயோதிபர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அவற்றில் சுமார் 300 தடுப்பூசிகளே தற்போது எஞ்சியுள்ளன என்று பதிலளித்தார்.

மேலும் 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குறித்த தடுப்பூசிகள் கிடைத்தவுடன் விடுபட்ட 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .