2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மருந்தக உரிமையாளர்கள் போராட்டத்தில் குதிப்பர்

Editorial   / 2018 ஜூன் 24 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மருந்தகங்கள் சிலவற்றின் மீது, பிராந்திய சுகாதார பணிமனையினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால், நாளை (25) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மருந்தக உரிமையாளர்களே, இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், நான்கு மருந்தகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், இதனால், குறித்த நான்கு மருந்தகங்களும் மருந்து வழங்கும் நடவடிக்கையை, கடந்த 20ஆம் திகதி முதல் நிறுத்தியுள்ளன எனவும், மருந்த உரிமையாளர்களால் குறிப்பிடப்படுகிறது.

சட்டரீதியான பதிவுகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருந்தகம், புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு மருந்தகம், முல்லைத்தீவு நகரில் இரண்டு மருந்தகங்கள் ஆகியவற்றுக்கு, பிராந்திய சுகாதாரப் பணிமனையினரால் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மருந்தகங்களின் உரிமையாளர்கள், கடந்த காலங்களில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும், பிராந்திய சுகாதார பணிமனையினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், தங்கள் பதிவு நடவடிக்கைக்கு இழுத்தடிப்புச் செய்து, தமது மருந்தகங்களைப் பதிவுசெய்யவில்லை என, மருந்தக உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

இந்த மருந்தகங்களின் பதிவு நடவடிக்கைக்கு, பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உரிமையாளர்கள், "அவ்வாறு பணம் கொடுத்து பதிவு செய்வதாயின், ஏன் அரச அலுவலகங்கள் இங்கு இருக்கின்றன?" எனவும் கேள்வியெழுப்பினர்.

இந்நிலையில், மாவட்ட செயலகத்தில், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று (25) நடைபெறவுள்ளது. இதன்போது வருகை தரும் வட மாகாண முதலமைச்சருக்கும் அரசியல்வாதிகளுக்கும், தமது பக்க நியாயத்தை எடுத்துக்காட்டியும், பிராந்திய சுகாதார பணிமனையின் அசமந்தப் போக்கான நடவடிக்கையை கண்டித்தும், கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதென, அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X