Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2016 ஜூன் 24 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
புழுதியாற்று ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தில் விவசாய நடவடிக்கையில் ஆர்வம் இல்லாமல் உள்ள விவசாயிகளின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விவசாயத்தில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 32 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்ட புழுதியாற்றிலிருந்து கிளிநொச்சி மாயவனூர் பகுதிக்கான ஏற்றுநீர்ப்பாசனத் திட்டம், விவசாயிகள் விவசாயம் செய்யாமல் இருப்பதால் செயலற்று இருக்கின்றது.
இதனை மீண்டும் செயற்படவைப்பது தொடர்பிலான கூட்டம் மாயவனூர் பொதுநோக்கு மண்டபத்தில் புதன்கிழமை (22) நடைபெற்றது.
இதில், வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் வே.பிறேம்குமார், கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எம்.சுதாகரன், இரணைமடு நீர்ப்பான பொறியியலாளர் என்.செந்தூரன், மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செவ்வராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மீண்டும் ஏற்றுநீர்ப்பாசனத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இறுக்கமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் இந்த ஏற்றுநீர்ப்பாசனத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இந்த ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தில் விவசாயம் செய்ய இங்குள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. 100 ஏக்கர் நிலப்பரப்பில் 115 விவசாயிகள் விவசாயம் செய்யும் நோக்குடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இங்கு 14 விவசாயிகள் மாத்திரம் விவசாயம் செய்கின்றனர்.
ஏற்றுநீர்ப்பாசன வயல்களுக்கு நீர்பாய்ச்சுவதற்கு 1 மணித்தியாலத்துக்கு 10 லீற்றர் எரிபொருள் செலவாகின்றது. அனைத்து விவசாயிகளும் விவசாயம் செய்தால் இது பயனுடையதாக அமையும். இருந்தும், குறைந்த விவசாயிகள் செய்வதால், இதன் நட்டத்தன்மையைக் கருத்திற்கொண்டு, கடந்த 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடக்கம் ஏற்றுநீர்ப்பாசனம் கைவிடப்பட்டது.
இந்த ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் விவசாயம் செய்ய வேண்டும். பற்றை மண்டியுள்ள வயல் நிலங்கள் துப்பரவு செய்யப்பட்டு, விவசாய நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.
அதற்கு காலஅவகாசம் வழங்கப்படும். அதற்குள் விவசாயம் செய்யாத விவசாயிகளின் நிலங்கள், பிரதேச செயலர் ஊடாக பறிமுதல் செய்யப்பட்டு, விவசாயம் செய்ய ஆர்வமாகவுள்ள வேறு இடங்களின் விவசாயிகளுக்கு எவ்வித குத்தகைகளும் பெறப்படாமல் வழங்கப்படும் என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025