2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வங்காலையில் கரையொதுங்கும் மருத்துவ கழிவுப்பொருள்கள்

Niroshini   / 2021 ஜூன் 17 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையோரத்தில், இன்று (17) காலை, மருத்துவ கழிவுப்பொருள்கள் சில கரையொதுங்கியுள்ளன.

கிரீம்கள், சிறிய குழாய்கள் (ட்யூப்கள்), மாத்திரை பக்கெற்றுகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுப்பொருள்களே, இவ்வாறு கரையொதுங்கியுள்ளன.

இவற்றை அவதானித்த அப்பகுதி மீனவர்கள் அவற்றை சேகரித்ததோடு, இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு கரையொதுங்கிய மருத்துவ கழிவுப் பொருள்களுக்கும் கொழும்பில் மூழ்கடிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று, மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மன்னார் மாவட்டக் கடற்றொழில் பரிசோதகர் என்.பவநிதியிடம் தொடர்பு கொண்டு வினவியபோது, இந்த மருத்துவ கழிவுப்பொருள்களுக்கும் கொழும்பில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்து வெளிவரும் கழிவுப்பொருள்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என பதிலளித்தார்.

குறித்த மருத்துவ கழிவுப்பொருள்களை, கடற்கரை தூய்மையாக்கள் பிரிவினர் சென்று பார்வையிட்டுள்ளனர் என்றும், அவர் கூறினார்.

'இவை, இந்தியாவின் மருத்துவ கழிவுப்பொருள்கள் ஆகும். தற்போது தமிழ்நாடு - கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருவதால், இவ்வாறான கழிவுப்பொருள்கள் மன்னார் மாவட்டக் கடற்கரையோரங்களில் கரையொதுங்குகின்றன. இதனால், மீனவர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை' என,  என்.பவநிதி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .