2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

’வடுக்களால் பாதிக்கப்பட்டுள்ள மடு’

Yuganthini   / 2017 ஜூலை 02 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“யுத்தம் முடிவடைந்த போதும், அதன் வடுக்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டு இன்னும் தலைதூக்க முடியாத பிரதேசங்களில் ஒன்றாக இருக்கும் மடு பிரதேசத்தை, முன்னேற்ற வேண்டிய கடப்பாடும் பொறுப்பும், நமக்கு உண்டு” என, வர்த்தகம் மற்றும் வாணிபக் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார், மடுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கீரிசுட்டான் கிராமத்தின் தேவைகளை இனங்கண்டு தீர்த்துவைப்பது தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

“மடு பிரதேசத்தின் கல்வி வளர்ச்சி, பின்னடைந்திருந்தது. கடந்த காலங்களில், யாழ்ப்பாணத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து, இந்தப் பிரதேசத்தின் கல்வியை ஊக்கப்படுத்தினோம். அரச அதிகாரிகளும் அலுவலர்களும், ஆசிரியர்களும் இந்தப் பகுதியில் பணிபுரிவதற்கு தயக்கம் காட்டிய ஒருகாலகட்டம் இருந்தது. அந்நிலை இப்போது மாறிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த வகையில், இப்பரதேசத்தின் கல்வி வளர்ச்சியும், தற்போது முன்னேற்றம் கண்டுவருகின்றது.

“கீரிசுட்டான், சின்னஞ்சிறிய கிராமமாயினும், பென்னம் பெரிய தேவைகளைக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது. கல்வி, சுகாதாரம், விவசாயம், வீதிகள் போன்ற விடயங்களில், இந்த மக்கள் பல்வேறு கஸ்டங்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

“வீதி அபிவிருத்தி அமைச்சரின் உதவியைப் பெற்று, இக்கிராமத்துக்கான வீதிகளைப் புனரமைப்பதற்காக நடவடிக்கை எடுப்பேன். தேவை ஏற்படின், அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றையும் சமர்ப்பிப்பேன். இந்தக் கிராமத்தின் மருத்துவ வசதி கருதி, ஆரம்ப மருத்துவப் பிரிவொன்றை அமைக்கும் வகையில், 2018ஆம் ஆண்டுக்குள் அந்தத் திட்டத்தை உள்வாங்குமாறு மாகாணச் சுகாதாரப் பணிப்பாளரை கோரியுள்ளேன்.

“அத்துடன், இந்தப் பிரதேசத்தில் அமைந்துள்ள குளத்தைப் புனரமைப்பதற்கான மதிப்பீட்டை தந்துதவுமாறு, நீர்ப்பாசனத் திணைக்கள உதவி ஆணையாளரிடம் கேட்டிருக்கின்றேன். இந்தக் கிராமத்தில் உற்பத்தியாகின்ற விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கும் வெளியில் கொண்டுசென்று விற்பனை செய்வதற்கும் உள்ள தடைகள் நிவர்த்தி செய்யப்படும்” என, அமைச்சர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .