2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வன்னியின் வளம் அழிந்துவிடும் அபாயம்

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வன்னியின் வளங்கள் அழிக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்கமுடியாத” என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “வன்னி பிரதேசத்தின் முல்லைத்தீவு, நிறைவான கால்நடைகளைக் கொண்ட ஒரு பிரதேசமாக காணப்பட்டது. யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்தமையால் பெருந்தொகையான கால்நடைகள் கைவிடப்பட்டன.

 தற்சமயம் இலட்சக்கணக்கான மாடுகளுக்கு என்ன நடந்தது என தெரியாத வகையில் அழிக்கப்பட்டு விட்டன. இதனை நாம் ஒரு சட்டவரையறைக்குள் கொண்டு வரவில்லையெனில் எமது வன்னிப் பிரதேசத்தின் கால்நடை வளம் முற்று முழுதாக அழிந்து விடும்.

வன்னிப் பிரதேசத்தில் பெரியதொரு மாபியா கும்பல் ஊடுருவி இங்குள்ள கால்நடை வளங்களை வகைதொகையின்றி அழிப்பதுடன், கடத்தியும் வருகின்றது. ஒருவருக்கு சொந்தமான இரண்டு காளை மாடுகளும் மூன்று பசு மாடுகளும் ஒரே இரவில் அழிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக முல்லைத்தீவு, வவுனியா என பல பகுதிகளிலும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதாக எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்துக்கு முதல், முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவில் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும், அவை எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கால்நடை தொடர்பில் யாழ். மாவட்டத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படுகின்றது. ஒரு ஆட்டைக் கூட வெளிப்பிரதேசத்துக்கு  கொண்டு செல்ல முடியாது. ஆனால் அத்தகைய நடைமுறைகள் வன்னிப் பிரதேசத்தில் ஏன் பின்பற்றப்படவில்லை என, வடமாகாண விவசாய மற்றும் கால்நடை அமைச்சர் ஐங்கரநேசனிடம் கேட்கின்றேன்.

களவு போகும் மாடுகள், வவுனியா மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு, வெட்டப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகிறன். எந்தவித சுகாதார நடைமுறைகள் கடைப் பிடிக்காமலும், அனுமதி பெறாமல் இவை முன்னெடுக்கப்படுகின்றன.

வட மாகாண முதலமைச்சர் இது தொடர்பான சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து அந்தந்த பிரதேசத்திற்குரிய கொள்கலன்களில் அப் பிரதேசத்துக்கு மாடுகளையே  வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்குள்ள மாடுகளை இறைச்சியாக்கி ,வேறு பிரதேசத்துகு கொண்டு செல்வதென்பதை ஏற்கமுடியாது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .