2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகஜர்

Yuganthini   / 2017 ஜூன் 29 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்

 

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள், காட்டுமிராண்டித் தனமாக நடத்தப்படுகின்றனர் என்று கூறி, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சட்டதரணிகள், நீதியமைச்சருக்கு, நேற்று  (28) மகஜரொன்றைக் கையளித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, படுகொலைச் செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் ஐந்தாவது சந்தேக நபரை, அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து, சிறைக்காவலர்கள் தாக்கியதாகக் கூறப்பட்டது.

இதன்பின்னரே, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சட்டதரணிகள், குறித்த மனுவை,  நீதியமைச்சருக்குக் கையளித்துள்ளனர்.

குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்துக்குரிய கைதிகளைத் தடுத்து வைக்கும் சிறைச்சாலையானது, வவுனியா சிறைச்சாலையிலே இயங்கி வருகின்றது.

மேற்படி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள,  நீதவான் நீதிமன்ற கைதிகள் மீதான சிறைச்சாலை உத்தியோகத்தர்களின், நேரடியானதும், தம்மால் நியமிக்கப்படும் நபர்கள் மூலமானதுமான மிலேச்சத்தனமான, மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், எவ்வித காரணங்களற்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் ஒரு கைதி தொடர்பில், சிறைச்சாலை அத்தியகட்சருக்கு நீதிமன்றத்தினால் கட்டளை பிறப்பிக்கப்படும் பட்சத்தில், குறித்தக் கைதியை உரிய முறையில் பாதுகாத்து, உரிய தவணையில் மன்றில் ஆஜர்வடுத்துவது, சிறைச்சாலை அத்தியட்சரின் கடமையாகும். எந்தவித காரணமுமன்றி, கைதிகள் தாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கப்படத்தக்கது.

மேலும், வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பல சம்பவங்கள், ஏற்கெனவே இடம்பெற்றுள்ள நிலையில், அண்மையில்,  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதியொருவர், படுகொலை செய்யப்பட்டார். அதுமட்டுமன்றி, 21.06.2017 அன்று, பிணையில் விடுவிக்கப்படட் 22.06.2017 அன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட, வழக்கின்  முதலாவது சந்தேக நபர்,  சிறைச்சாலை அலுவலகரால் தாக்கப்பட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பில், ஏற்கெனவே கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் விளக்கம் கேட்கப்பட்டும், உரிய பதில் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், 28.06.2017 அன்று ஆஜர்படுத்தப்பட்ட வழக்கின் 5ஆவது சந்தேகநபர், சிறைச்சாலை உத்தியோகத்தரால், கடுமையாக தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே, நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளமையால், கைதிகளுக்கு உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலை  காணப்படுகின்றது” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி விடையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து நாளையதினம் எமது அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்க்கொள்கின்றோம்.

01. குறித்த தாக்குதல்களை மேற்க்கொண்ட சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரனைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு உரிய விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

02.குறித்த குற்ற செயல்களுடன் தொடர்புடைய அலுவலர்கள் விசாரணை முடியும் வரை சாட்சிகளின் தலையீடு செய்யாத வகையில் பதவி இடை நீக்கல் செய்யப்பட வேண்டும்.

03.கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும் கண்காணிப்புக்கும் உட்பட்ட பகுதியில் கிளிநொச்சி நீதிமன்ற கைதிகளுக்கு விளக்கமறியல் சிறைச்சாலை ஒன்றை அமைக்க ஆணை செய்தல்.

ஆகிய விடயங்கள் இவ் மகஜரில்  குறிப்பிடப்பட்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .