2025 மே 09, வெள்ளிக்கிழமை

’வீதியை புனரமைக்காவிடின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்’

Niroshini   / 2021 ஜூலை 21 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முக்கொம்பன் வழியான பஸ் சேவை இடம்பெறாமைக்கு அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமே பொறுப்பேற்க வேண்டும் என, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி தயாபரன் தெரிவித்தார்.  

அத்துடன், ஸ்கந்தபுரத்தில் இருந்து முக்கொம்பன் செல்லும் வீதியை புனரமைக்காவிடின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோமெனவும், அவர் எச்சரித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,   கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் ஸ்கந்தபுரத்தில் இருந்து முக்கொம்பன் செல்லும் வீதியினை புனரமையுங்கள் என தொடர்ச்சியாக நானும் இப்பகுதி பொது அமைப்புகளும் முறைப்பாடுகளை செய்து வந்திருக்கின்றோம் என்றார்.

அரசியல்வாதிகள் கறித்த வீதியை வந்து பார்த்தார்கள், புனரமைப்போம் என வாக்குறுதிகளை வழங்கினார்கள் எனத் தெரிவித்த அவர், ஆனால் வீதிப் புனரமைப்புகள் இடம்பெறவில்லை என சாடினார்.

"பத்தாண்டுகளாக இலங்கை போக்குவரத்து சபை மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது சேவையை வழங்கி வந்திருக்கின்றது. தற்போது வீதி மோசமாக சேதமடைந்திருப்பதன் காரணமாக போக்குவரத்தும் இடைநிறுத்தப்பட்டு இருக்கின்றது. பத்தாண்டுகளில் ஒரு நான்கு கிலோமீற்றர் வீதியை புனரமைக்க முடியாத நிலையில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இருப்பது கவலைக்குரியது. 

"பின்தங்கிய கிராமங்களை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புறக்கணிக்கின்றார்கள் என்பதற்கு ஸ்கந்தபுரம் முக்கொம்பன் வீதி உதாரணமாக உள்ளது.  பஸ் சேவை நடைபெறுவதற்கு முதற்கட்டமாக இயந்திரம் மூலம் தற்காலிக புனரமைப்பை ஒரு நாளில் மேற்கொள்ள முடியும்.  அவ்வாறு இடம்பெற்றால் பஸ் சேவை நடத்த முடியும். 

"பஸ் சேவை பாதிப்புகள் மட்டுமல்ல, குறித்த வீதியால் அறுவடை இயந்திரங்களை வயலுக்குக் கொண்டு செல்ல முடியாதுள்ளது.  நெல் மூடைகளை வீடுகளுக்கு எடுத்து வர முடியாதுள்ளது. இந்நிலையில் வீதியின் புனரமைப்பு தற்போது இடம்பெறும் என்ற நம்பிக்கை எம்மிடம் இல்லை.  

" எனவே, வீதியை புனரமையுங்கள் என வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. விவசாயிகளையும் பொது மக்களையும் இணைத்து ஆர்ப்பாட்டத்தின் மூலம் மக்களின் நெருக்கடியை அனைவருக்கும் வெளிப்படுத்தவுள்ளோம்" எனவும் சுந்தரமூர்த்தி தயாபரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X