Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகிலுள்ள அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக, பெண்களும் சாதனை படைத்தே வருகின்றனர். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்ற நிலைப்பாடு, எப்போதோ ஏற்பட்டுவிட்டது. பெண்கள் கால்தடம் பதிக்காத துறையெதுவும் இல்லை என்றே கூறலாம். ஆனால், தாங்கள் கால்தடம் பதித்தத் துறைகளில், உயர்ந்த நிலையை அடைவதற்காக, பெண்கள் பல போராட்டங்களை எதிர்கொள்ளவே செய்கின்றனர்.
அந்த வகையில், ஒரு பெண், தான் பணியாற்றும் அலுவலகத்திலிருந்து, வருடமொன்றுக்கு 17 தடவைகள் இராஜினாமா செய்ய முனைவதாக, ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனமொன்று, இது தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனமானது, சுமார் 2,000 பெண்களைக் கொண்டு, இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் அனைவரும், முழு நேர பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், பல பெண்கள் தமது வாழ்க்கை மற்றும் வேலைத்தளங்களில் சமநிலையைப் பேண முடியாது, தமது தொழிலை இராஜினாமா செய்ய முயன்றுள்ளமை தெரியவந்துள்ளது.
தான் பணியாற்றும் வேலைத்தளத்தில் நிலவும் நெருக்கடியான சூழல், மேலதிக வேலைப்பளு, போட்டித் தன்மை போன்ற காரணிகளைத் தாண்டி, குடும்ப வாழ்வையும் தொழிலையும் சமநிலைப்படுத்திக்கொள்வதில் உள்ள சிக்கல் நிலைகளே, இதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.
ஒரு தொழிலை மிக நேர்த்தியாக, அதிக அர்ப்பணிப்புடன் செய்து முடிக்கும் திறன், பெண்களிடமே இருப்பதாகவும் இதன் காரணமாகவே, பல நிறுவனங்கள் பெண் தொழிலாளர்களை அதிகமாக உள்வாங்குவதாகவும் ஆய்வுகளில் கூறப்பட்டிருந்தது.
ஒரு நிறுவனத்தில், ஆண்களுக்கு வழங்கப்படும் ஊதியம், பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. குறைந்த ஊதியத்தில் அதிக வேலைகளைச் செய்யக்கூடியவர்களாக, பெண்களே இதுவரை சித்திரிக்கப்பட்டு வருகின்றார்கள். பல்வேறு போராட்டங்களின் பின்னர், பெண்களின் வாழ்வியலில், மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும்கூட, ஊதியம், தொழில் விடயத்தில், ஆண், பெண் என்ற பாகுபாடு காட்டப்படுவது இன்னும் தொடர்கதையாகவே உள்ளது.
ஒரு விடயத்தை, பொறுப்புடன், அக்கறையுடன் செய்து முடிக்கக்கூடியவர்கள் பெண்கள் என்பதால், அவர்களுக்கு அதிகமான வேலைப் பணி சுமத்தப்படுகிறது. இதனால், தான் பணியாற்றும் நிறுவனத்தில் அதிக உழைப்பை இடும் பெண்கள், குடும்ப வாழ்வில் தோற்றுப் போகின்றனர். குடும்ப வாழ்வில் அதிக அக்கறை செலுத்தும் பெண்கள், தொழிற்றுறையில் தோற்றுப்போகின்றனர். எனவே இங்கு, பெண்கள் இரு துறைகளிலும் சமநிலையைப் பேண முடியாது தோற்றுப்போகின்றனர். இரு துறைகளிலும் சமநிலையைப் பேணி, மேலெழுந்த பெண்கள் ஒருசிலரே உள்ளனர். இது, நூற்றில் 10 சதவீதம் என்றுகூட கூறலாம்.
தொழிற்றுறைகளை எடுத்துக்கொண்டால், மேலதிகாரிகளாக அநேகமாக ஆண்களே இருப்பதால், பெண்களின் நிலைமைகளைப் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர் எனக் கூறலாம். நூற்றுக்கு 10 சதவீதமான ஆண்களே, பெண்களின் நிலைமைகளைப் புரிந்துகொண்டு அனுசரித்துப்போகின்றனர். மீதமுள்ள 90 சதவீதமான ஆண் அதிகாரிகள், தனது நிறுவனத்தில் பணியாற்றும் சக ஊழியராகப் பெண்களைக் கருத்திற்கொள்வதில்லை.
பெண்களின் மீது திணிக்கும் வேலைப்பளு, உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்காமை, பாராட்டின்மை, பெண் என்ற பாகுபாடு, குடும்ப வாழ்வில் இணைந்துவிட்ட பெண்களுக்குக் காட்டும் பாகுபாடு, குழந்தைகளைப் பெற்ற பெண்களுக்குக் காட்டும் பாகுபாடு, நெருக்கடிகளை ஏற்படுத்துதல், வசைபாடுதல், பாலியல் துன்புறுத்தல்கள், ஒப்பீட்டு அணுகுமுறை போன்ற காரணிகளாலேயே, பெண்கள் தங்களது வேலைகளை இராஜினாமா செய்யத் துடிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஓர் ஆணைவிட பல மடங்கு உழைப்பை இடும் பெண் ஊழியருக்குப் பாராட்டுதல்களும் பரிசில்களும் கிடைப்பதில்லை. மேலெழுந்தவாரியாகச் செயற்படும் ஆண்களுக்குப் பாராட்டுதல்கள் குவியும். பதவி உயர்வுகளும் கிடைக்கும், உழைப்புக்கு அதிகமான ஊதியத்தையும் பெறுவர். இவற்றை ஒப்பிடும் பெண் ஊழியர்கள், தனது அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் சன்மானம் கிடைக்கவில்லை என்ற வெறுப்பில், இராஜினாமா செய்வதையே, முதல் முடிவாகக் கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இவ்வாறான பெண்கள், வெகுவிரைவில் நோயாளிகளாகவும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகின்றனர். சில பெண்கள், தற்கொலைகளுக்கும் முயலுகின்றனர். திருமணம் முடித்த பல பெண்களின் விவாகரத்துக்கு, அலுவலக நெருக்கடியே பிரதான காரணமாக அமைந்துள்ளது.
அலுவலகங்களில் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகளானது, குடும்ப வாழ்விலும் தாக்கம் செலுத்துவதால், குடும்ப உறவுகளுடன் நெருக்கமான நிலையைப் பேண முடியாது தோற்றுப் போகும் பெண்கள் இறுதியில் விவாகரத்தை எதிர்கொள்கின்றனர்.
இதன் காரணமாகவே பல பெண்கள், திருமணம் முடித்தவுடன் தனது தொழிலை இராஜினாமா செய்துவிடுகிறார்கள். தமக்கேயான கனவுகளைத் தொலைத்துவிட்டு குடும்ப வாழ்வுக்குள் கட்டுண்டு விடுகின்றனர்.
எனவே, பெண்கள் அலுவலக நெருக்கடியிலிருந்து விடுபடுவது ஆண் அதிகாரிகளின் கைகளிலேயே உள்ளது. ஆண் ஊழியர்களுக்குக் கொடுக்கும் சம அந்தஸ்த்து, சம கௌரவத்தை பெண்களுக்கும் வழங்கினால், பெண்கள், குடும்ப வாழ்விலும் தொழிற்றுறையிலும் சமநிலையைப் பேணி, தமக்கேயான தடத்தைப் பதிப்பர். இதை , தொழிலுக்குச் செல்லும் பெண்களை மணந்துள்ள கணவன்மார்களும் கருத்தில் கொள்ளவேண்டும்.
29 minute ago
50 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
50 minute ago
4 hours ago
7 hours ago