2024 ஜூன் 17, திங்கட்கிழமை

பழம்பெரும் நடிகர் ராஜேஷ் கண்ணா மரணம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 18 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையைப் பெற்ற பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான ராஜேஷ் கண்ணா, தனது 69ஆவது வயதில் இன்று புதன்கிழமை காலமானார்.

சுகவீனமுற்றிருந்த ராஜேஷ் கண்ணா, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையிலேயே இன்று பிற்பகலில் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மறைந்த ராஜேஷ் கண்ணா, பிரபல நடிகை டிம்பிள் கபாடியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு டிம்பிள் கண்ணா, ரிங்கி கண்ணா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களும் நடிகைகள் ஆவர். பிரபல இந்தி நடிகர் அக்ஷ்ய் குமார், ராஜேஷ் கண்ணாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ராஜேஷ் கண்ணாவுக்கு பொலிவூட் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

29 டிசம்பர் 1942ஆம் ஆண்டு பிறந்த ஜதின் கண்ணா என்ற ராஜேஷ் கண்ணா, 1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். இதுவரை 180 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றில் 22 திரைப்படங்களில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களை தயாரித்தும், சில பாடல்கள் பாடியும் உள்ளார்.

மூன்று முறை பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ள இவரது பெயர் பதினான்கு முறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிலிம்பேர் வாழ்நாள் விருது இவருக்கு 2005இல் வழக்கப்பட்டது.

மிகக் குறுகிய காலத்தில் வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்து புகழேணியின் உச்சக்கட்டத்திற்கு சென்ற இவரே இந்தித் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார் என அறியப்படுகிறார். இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக ஆராதனா, அமர்பிரேம், ஆனந்த், கத்தி பதங், ராஸ், பகாரோங் கே சப்னே, இத்தெஃபாக், சச்சா ஜூதா, ராஜா ராணி, பவார்ச்சி ஆகியன அமைந்தன.

ராஜேஷ் கண்ணா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1992இல் நடந்த இடைத்தேர்தலில் புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1996இல் நடந்த பொதுத்தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றியை தக்க வைத்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X