2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

கமெராவை கண்டு கிலி: கையை தூக்கி சரணடைந்த சிறுமி

Gavitha   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அணுவைக் கொண்டு ஆக்கல், அழித்தல் என்ற இரண்டு வேலைகளையும் செய்வது போலத்தான் தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியும் காணப்படுகின்றது. ஆக்கமா... அழிவா... என்பது நாம் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது.

இது போலதான் சமூக வலைத்தளங்களும் இன்றைய சமூகச் சீர்கேடுகளுக்கு முக்கியமான காரணமாக சமூகவலைத்தளங்கள் காணப்பட்டாலும். அதனூடாக நாட்டில் பல பாகங்களில் நடக்கும் சிறியதொரு விடயத்தையும் உலகம் முழுவதும் ஒரு நொடியில் பரவசெய்துவிடலாம் என்ற கூறினால் மிகையாகாது.

அந்த வகையில், சிரியாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் கமெராவைப்  பார்த்து துப்பாக்கி என நினைத்து பயத்தில் கை தூக்கி நிற்கும் பரிதாபகரமான புகைப்படம் டுவிட்டர் மற்றும் முகநூலில் பகிரப்பட்டுள்ளது.

உள்நாட்டு போரால் சீர்குலைந்து போயுள்ள சிரியாவைச் சேர்ந்த 4 வயதுடைய ஆதி ஹூதியா எனும் சிறுமியை, உஸ்மான் சாகிர்லி என்ற புகைப்படக் கலைஞர், கடந்த 2012ஆம் ஆண்டு பார்த்துள்ளதுடன் அவரை புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.

சிறுமியை புகைப்படம் எடுக்க கமெராவை எடுத்த போது தான் அந்த பரிதாபமான காட்சி அவரது கண்ணில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. உஸ்மான் சாகிர்லியின் கையிலுள்ள கமெராவைப் பார்த்த சிறுமி, அதனை துப்பாக்கி என்று நினைத்து பயத்தில் நடுங்கி கைகளை மேலே தூக்கி சரண் அடைந்து நின்றுவிட்டாராம்.

இந்த புகைப்படத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த புகைப்பட பத்திரிக்கையாளர் நாதிய அபு ஷபான் என்பவர் தனது டுவிட்டர்  சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கமெராவை ஆயுதம் என்று நினைத்தே, அந்த குழந்தை கைகளை தூக்கி சரணடைந்திருப்பார் என்று நாதியா, தனது டுவிட்டரில் கூறிப்பிட்டுள்ளார்.

இந்த டுவீட்டை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளதுடன் மேலும் பலர் இந்த புகைப்படத்தை முகநூலிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். பயந்து நடுங்கி நிற்கும் சிறுமியின் புகைப்படம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

'யுத்தம்' என்ற ஒரு சொல் பலரையும் மனதளவில் அங்கவீனமுற்றவர்களாகக்கூட மாற்றிவிடும். இதற்கு இந்த சிறுமி மட்டும் விதிவிலக்கா என்ன?


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X