2024 ஜூன் 14, வெள்ளிக்கிழமை

ஃபோர்மியுலா வன் (Formula 1) பற்றி ஓர் அறிமுகப் பார்வை

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 28 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகத்தில் அதிகளவு செலவீனங்களை கொண்ட விளையாட்டுக்களில் ஒன்றாக ஃபோர்மியுலா வன் திகழ்கிறது. மோட்டார் கார் பந்தையமான இந்த விளையாட்டு, வருடாந்தம் உலகின் பல முன்னணி கார் தயாரிப்பாளர்களின் பங்களிப்புடன் இடம்பெறுகிறது.

இந்த விளையாட்டுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட கார், ஓடு பாதை, டயர்கள், விதிமுறைகள் என பல விசேட அம்சங்கள் இந்த போட்டித்தொடரில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த போட்டி விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதோடு, இந்த விதிமுறைகளை பொறுத்து ஒவ்வொரு கார் தயாரிப்பாளர் நிறுவனத்தினதும் மொத்த செலவீனம் தீர்மானிக்கப்படுகிறது.

இலங்கையில் கிரிக்கெட், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் அதிகளவில் புகழ்பெற்றுக் காணப்படுகின்றன. இந்த விளையாட்டுக்கள் குறித்து அதிகளவில் பேசப்படுவதும் பொதுவான விடயமாக உள்ளது. ஆயினும் இந்த ஃபோர்மியுலா வன் போட்டித்தொடர் மற்றும் இந்த விளையாட்டு தொடர்பான ஆர்வம் போன்றன குறைவாகவே காணப்படுவதற்கு, இந்த விளையாட்டு இலங்கையில் ஒளிபரப்புவதற்கான நடவடிக்கைகள் உள்நாட்டு அலைவரிசைகளின் மூலம் மேற்கொள்ளப்படாமை, மற்றும் இந்த போட்டிகள் உள்நாட்டில் பிரபல்யமடையாமையும் காரணங்களாக அமைந்துள்ளன. மேலும் பலர், ஃபோர்மியுலா வன் செல்வந்தர்களின் விளையாட்டு என கருதுபவர்களாகவும் உள்ளனர்.

இந்த விளையாட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டு விளங்குகிறது. ஒற்றை வீரர் பங்குபற்றும் கார்பந்தையங்களில் மிகவும் உயர்ந்த நிலையில் காணப்படும் விளையாட்டாகவும் இது அமைந்துள்ளது. கார்பந்தைய திடலில் உலகில் காணப்படும் மிகவும் வேகமான கார்கள் எனவும் இவை வர்ணிக்கப்படுகின்றன. மணிக்கு சுமார் 350 கிலோமீற்றர் வேகம் எனும் அளவில் செல்லக்கூடிய இந்த கார்கள், 1947 முதல் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. இந்த விளையாட்டுக்கு ஃபோர்மியுலா என பெயரின் அர்த்தம், இந்த விளையாட்டில் உள்ளடங்கும் அனைத்து வீரர்கள் மற்றும் அணிகள் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்குள் உள்ளடங்குவது என பொருள்படுகிறது.

1950ஆம் ஆண்டு முதலாவது உலக சாம்பியன்சிப் போட்டிகள் பிரித்தானியாவின் சில்வர்ஸ்டோன் நகரில் அமைந்துள்ள விளையாட்டரங்கில் இடம்பெற்றிருந்தது. போட்டியில் பங்குபற்றும் அணிகளுக்கான புள்ளி வழங்கும் முறை 1956ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த விளையாட்டில் ஒவ்வொரு அணியிலும் தலா இரு வீரர்கள் வீதம் உள்ளடங்கப்பட்டுள்ளதுடன், கார் தயாரிப்பதற்கான விதிமுறைகள், பந்தையம் ஆரம்பிப்பதற்கு முன்னர் செயற்பட வேண்டிய விதிகள், பந்தையத்தின் போதான விதிமுறைகள், வீரர்களுக்கான ஒழுக்கக்கோவைகள், முறைப்பாடுகள் போன்ற அனைத்துவிதமான விதிகளையும் FIA என அழைக்கப்படும் வானங்களுக்கான சர்வதேச சம்மேளனம் மேற்பார்வை செய்கிறது. ஒவ்வொரு பந்தையம் இடம்பெறும் போதும், இந்த அமைப்பைச் சேர்ந்த குழுவினர் நடுவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் செயற்படுவது வழமை.


போட்டி விபரங்கள்
2013ஆம் ஆண்டுக்கான பருவகாலப்பகுதிக்காக தற்போது மொத்தமாக 20 சுற்றுப் போட்டிகள் இடம்பெறும் என ஃபோர்மியுலா வன் ஐஎன்சி நிறுவனத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது சுற்று போட்டி எதிர்வரும் மார்ச் 15 – 17ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலும், ஏப்ரல் மாதத்தில் சீனாவின் ஷாங்ஹாய் நகரிலும், பஹரெய்னின் சாகிர் நகரிலும் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. மே மாதம் ஸ்பெயின் நாட்டின் கட்டலூன்யா மற்றும் மொனாக்கோ நாட்டின் மொனடேகார்லோ ஆகிய நகரங்களில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. ஜூன் மாதத்துக்கான போட்டிகள் கனடாவின் மொன்ரியல் நகரிலும், பிரித்தானியாவின் சில்வர்ஸ்டோன் நகரிலும் இடம்பெறவுள்ளன. ஜூலை மாதத்துக்காக மூன்று போட்டிகள் பட்டியலிடப்பட்டிருந்த போதிலும், ஒரு போட்டி எங்கு நடைபெறவுள்ளது என்பது இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், ஏனைய இரு போட்டிகள் டச்லாந்தின் நேர்பக்கிரிங் மற்றும் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரிலும் இடம்பெறவுள்ளன. ஒரு மாத விடுமுறைகாலப்பகுதியை தொடர்ந்து, ஓகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும் போட்டியாக பெல்ஜியம் நாட்டின் ஸ்பா நகரில் இடம்பெறவுள்ள போட்டி அமையவுள்ளது. செப்டெம்பர் மாதம் இத்தாலி நாட்டின் மொன்சா நகரிலும், சிங்கப்பூரின் போட்டியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சிங்கப்பூர் போட்டி, முதலாவது முழு இரவு நேர போட்டியாக அமைந்துள்ளமை விசேட அம்சமாகும். அத்துடன், இந்த போட்டிக்காகவும் ஏனைய சில போட்டிகளுக்காகவும் சாலை போக்குவரத்து நடவடிக்கைகள் சில வார காலத்துக்கு முன்னராகவே இடைநிறுத்தப்பட்டு, இந்த போட்டிகளுக்கென விசேடமாக தயார்ப்படுத்தப்படும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஒக்டோபர் மாதத்துக்கான போட்டிகள் கொரியாவின் யெயோன்கம் நகரிலும், ஜப்பானின் சுசுகா நகரிலும் இந்தியாவின் நியுடெல்லி நகரிலும் இடம்பெறவுள்ளன. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள போட்டிகள் அபுதாபியின் யஸ்மெரீனா நகரிலும், அமெரிக்காவின் ஒஸ்டின் நகரிலும், இறுதிச்சுற்றுப் போட்டி பிரேசில் நாட்டின் சாவே பாலோ நகரிலும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளன.

போட்டி நடைபெறும் விதம்
ஒவ்வொரு போட்டியும் சுமார் 3 தினங்கள் வரை இடம்பெறும். இதில் முதலாவது தினம் பயிற்சிக்காக மூன்று ஒன்றறை மணி நேரங்கள் கொண்ட கால நேரம் வழங்கப்படும். இதன்போது அணிகள் தமது கார்களின் பொருத்தல் செயற்பாடுகள் குறித்த நகரின் ஓடுதளத்தில் காணப்படும் காலநிலைகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளனவா? டயர்களின் செயற்திறன், அணி வீரர்களுக்கு ஓடுதளம் குறித்த பயிற்சிகள் பெறல் போன்ற விடயங்கள் குறித்து அதிகளவு அக்கறை செலுத்தப்படும். முதலாவது நாள் இரு பயிற்சி நேரங்களும், இரண்டாவது நாள் ஒரு பயிற்சி நேரமும் வழங்கப்படும். இதனைத்தொடர்ந்து தகுதிகாண் (Qualifying) சுற்று நடைபெறும். போட்டித்தொடரில் பங்குபற்றும் அணிகள் மற்றும் கார்களின் எண்ணிக்கை போன்றவற்றை பொறுத்து இந்த தகுதிகாண் நேரம் தீர்மானிக்கப்படும். தற்போதுள்ள எண்ணிக்கைக்கு அமைய மொத்தம் 22 கார்கள் களத்தில் இறங்கும் என உறுதி செய்துள்ளன. மூன்று சுற்றுகளாக இடம்பெறும் இந்த தகுதிகாண் போட்டியில், முதலாவது தகுதி காண் சுற்றில் அனைத்து கார்களும் தமது விரைவான நேரத்தை பதிவு செய்யும் வகையில் ஓட்டத்தில் ஈடுபடும். 20 நிமிடங்கள் இதற்காக இவர்களுக்கு வழங்கப்படும். இந்த 20 நிமிடங்களின் நிறைவில் சிறந்த நேரங்களை பதிவு செய்யும் முதல் 16 வீரர்களும் இரண்டாம் தகுதிகாண் சுற்றுக்கான தகுதியை பெறுவார்கள். இரண்டாம் தகுதிகாண் சுற்று 15 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதோடு, இதிலிருந்து சிறப்பாக நேரங்களை பதிவு செய்த 10 கார்கள் மூன்றாவதும் இறுதியானதுமான சுற்றுக்கு தெரிவு செய்யப்படுவர். மூன்றுவாது தகுதிகாண் சுற்று 10 நிமிடங்களுக்கு மட்டுமே இடம்பெறும். விறுவிறுப்பாக அமையும் இந்த சுற்றில் சிறந்த நேரத்தை பதிவு செய்யும் கார், மறுநாள் (மூன்றாவது நாள்) போட்டி இடம்பெறும் போது, முதலாவது நிலையில் இருந்து தமது போட்டியை ஆரம்பிப்பதற்கான தகுதியை பெறுவார்.

பொதுவாக முதல்நிலையிலிருந்து போட்டியை ஆரம்பிப்பவர்கள் வெற்றிவாகை சூடுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக கருதப்படுகிறது. அத்துடன், ஆரம்ப நிலைகளிலிருந்து போட்டியை ஆரம்பிக்கும்போது, மத்தியநிலைகளில் போட்டியாளர்களிடையே ஏற்படக்கூடிய மோதல்களிலால் ஏற்படக்கூடிய பாதகமான சேதங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதிகம்.

எனினும், இந்த தகுதிகாண் சுற்று இடம்பெறும்போது முதலாவது தகுதிகாண் சுற்றின் சராசரியின் 107 வீத நேரத்தை பதிவு செய்ய தவறும் போட்டியாளர்கள் மறுநாள் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை இழந்தவர்களாக கருதப்படுவார்கள். ஆயினும், நடுவர்களின் தீர்ப்புக்கு அமைய இவர்கள் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும் போட்டி விதிமுறைகளை மீறும் வகையிலான கியர் கட்டமைப்பில் மாற்றம் செய்தல், தகுதிகாண் சுற்று நிறைவடைந்த பின்னர், கார் வாகன பராமரிப்பு (Pit Garage) பகுதிக்கு வந்ததும், போட்டி நடுவர்களுக்கு பரிசீலனை செய்ய போதியளவு எரிபொருளை கொண்டிராத சந்தர்ப்பங்கள் மற்றும் முந்தைய போட்டி, பயிற்சி, தகுதிகாண் சுற்றுகளின் போது ஒரு வீரர் அல்லது அணி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளை பொறுத்து இந்த தகுதிகாண் நிலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

இதேபோன்று போட்டி நடைபெறும்போது ஒவ்வொரு அணிகளின் மூலமும் கையாளப்படும் டயர் மாற்றல் நிறுத்தல் நேரங்கள், மொத்த நிறுத்தல் சந்தர்ப்பங்கள் மற்றும் டயர் தெரிவுகள் போன்ற உத்தி முறைகள் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன. இம்முறையும் உத்தியோகபூர்வ டயர்கள் வழங்குநராக பைரெலி (Pirelli) செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஓடுகளத்தின் தன்மை, காலநிலை போன்றவற்றை பொறுத்து ஒவ்வொரு போட்டிகளுக்கும் வெவ்வேறு வர்ணங்களில் அமைந்த டயர்கள் பைரெலி நிறுவனத்தின் மூலம் அறிவிக்கப்படும். அத்துடன், ஓர் அணிக்கு குறிப்பிட்டளவு டயர்களே பயன்படுத்த முடியும் என்ற விதிமுறைகளும் உண்டு.


இவ்வாண்டுக்கான அணி மற்றும் வீரர்கள் விபரங்கள்
இவ்வருடம் இந்த விளையாட்டில் மொத்தமாக 11 அணிகள் களமிறங்க தம்மை பதிவு செய்துள்ளன. ஜனவரி மாதம் பல அணிகள் தமது அணிக்கான புதிய கார்களை வெவ்வேறு நகரங்களில் அறிமுகம் செய்திருந்தன. இந்த வருடம் ரெட்புள் ரேசிங், மெக்லாரன் மேர்சடீஸ், ஃபெர்ராரி, லோடஸ் ரெனோல்ட், ஏஎம்ஜி பெட்ரேனாஸ் மேர்சடீஸ், ஃபோர்ஸ் இந்தியா, டொரோ ரொசோ, வில்லியம்ஸ், சௌபர், கட்டர்ஹம் மற்றும் மரூஷியா போன்ற அணிகள் களம் இறங்கவுள்ளன. அணி வீரர்களை பொறுத்தமட்டில் இம்முறை பலரினதும் கவனத்தை வென்ற மாற்றமாக, ஃபோர்மியுலா வன் போட்டிகளின் ஜாம்பவானாக திகழ்ந்த 7 தடவைகள் உலக சம்பியன்சிப் பட்டம் வென்ற மைக்கல் ஷுமேக்கர் தமது இரண்டாவது தடவை ஓய்வு பெறுவதை அறிவித்தததை தொடர்ந்து, கடந்த 5 வருடங்களாக மெக்லாரன் மேர்சடீஸ் அணியில் நட்சத்திரமாக விளங்கிய லூயிஸ் ஹமில்டன் (பிரித்தானியா) இம்முறை ஏஎம்ஜி பெட்ரேனாஸ் மேர்சடீஸ் அணியில் களமிறங்கவுள்ளார். இவரது இடத்தை மெக்லாரன் மேர்சடீஸ் அணியில் இரு வருடகாலம் முன்அனுபவம் வாய்ந்த இளம் வீரர் சேர்ஜியே பெரஸ் (மெக்சிகோ) இடம்பிடித்துள்ளார். இவருடன் மெக்லாரன் மேர்சடீஸ் அணியில் அனுபவம் வாய்ந்த முன்னாள் உலக சம்பியன் ஜென்சன் பட்டன் (பிரித்தானியா) களமிறங்குகிறார். ஏஎம்ஜி பெட்ரேனாஸ் மேர்சடீஸ் அணியில் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த நிகோ ரோஸ்பேர்க் உள்ளடங்கியுள்ளார். லோட்டஸ் ரெனோல்ட் அணியை பொறுத்தமட்டில் முன்னாள் உலக சம்பியனான பின்லாந்து நாட்டைச் சேர்ந்த கிமி ரைக்கனன் மற்றும் சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த ரொமெய்ன் கிரோஜோன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். உலகப்புகழ்பெற்றதும், அதிகளவு ஃபோர்மியுலா வன் ரசிகர்களையும் கொண்ட அணியான இத்தாலியின் ஃபெர்ராரி அணியில் முன்னாணி உலக சம்பியனும், கடந்த ஆண்டு இரண்டாம் நிலையை பிடித்தவருமான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெர்னான்டோ அலொன்சோ மற்றும் அனுபவ வீரரான பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிலிப்பே மாசா ஆகியோர் உள்ளடங்குகின்றனர். வில்லியம்ஸ் அணியை பொறுத்தமட்டில் வெனிசியுலா நாட்டைச் சேர்ந்த பஸ்டர் மல்டொனாடோ மற்றும் அறிமுக வீரராக பின்லாந்தை சேர்ந்த வொட்டேரி பொட்டாஸ் ஆகியோர் களமிறங்குகின்றனர். டொரோ ரொசோ அணியை பொறுத்தமட்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோன் எரிக் வேர்ன் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டானியல் ரிக்கார்டோ போன்றவர்கள் உள்ளடங்கியுள்ளனர். சௌபர் அணியில் ஜேர்மனியை சேர்ந்த நிகோ ஹல்கன்பேர்க் மற்றும் அறிமுக வீரராக மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் கிட்டர்ஸ் ஆகியோர் களமிறங்குகின்றனர். இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான விஜய் மால்யாவின் பங்குகளை கொண்ட ஃபோர்ஸ் இந்தியா அணியில் இதுவரை ஒரேயொரு வீரர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய வீரர் தொடர்பில் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்ட வீரராக பிரித்தானியாவின் போல் டி ரெஸ்டா திகழ்கிறார். கட்டர்ஹம் அணியில் பிரான்ஸ் நாட்டின் சார்ள்ஸ் பிக் மற்றும் டச் நாட்டின் அறிமுக வீரராக கிய்டோ வன்டர் கிரேட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மருஷியா அணியை பொறுத்தமட்டில் இரு புதிய அறிமுக வீரர்களாக பிரேசில் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் ரேசியா மற்றும் பிரித்தானியாவின் மக்ஸ் சில்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டும் உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள செபஸ்டியன் வெட்டல் (ஜேர்மனி) இம்முறையும் ரெட்புள் ரேசிங் அணியில் களமிறங்கவுள்ளார். இவருடன் இணைந்து அவுஸ்திரேலியாவின் மார்க் வெபர் களமிறங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இடம்பெறவுள்ள போட்டி தொடர்பான முழு விபரமும் போட்டி நிறைவடைந்தவுடன் உங்கள் தமிழ்மிரர் ஊடாக தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று ஒவ்வொரு போட்டி நிறைவிலும், அந்த போட்டி தொடர்பான முழு விமர்சனப்பார்வை தமிழ்மிரர் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

-ச.சேகர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .