2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

முதல் 30 போட்டிகளின் பின்னர் IPL 2013: IPL அலசல்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

IPL 2013 இன் 72 முதற் சுற்றுப் போட்டிகளில் 30 விளையாடப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த இந்த வருடத்தின் முதல் 30 போட்டிகளிலுமே சுவாரஸ்யம், விறுவிறுப்பு, திடீர்த் திருப்பங்களுக்குக் குறைவில்லாமலேயே இருந்திருக்கின்றன.

T20 போட்டிகள் என்றாலே இப்படித்தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இறுதி ஓவர் முடிவுகள், இறுதிப் பந்து வெற்றிகள், சமநிலையில் முடிவுற்று, சூப்பர் ஓவர்களால் தீர்மானிக்கப்பட்ட போட்டிகள் என்று தட தட, விறு விறு இரவுகள், பகல் இரவுகளாக IPL 2013 கிரிக்கெட் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கிறது.

இறுதியாக நேற்று (திங்கட்கிழமை) இரவு நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் குவிக்கப்பட்ட 360இற்கும் அதிகமான மொத்த ஓட்டங்களும், கடைசி ஓவர் வரை நீடித்த விறுவிறுப்பான மோதலும் IPL 2013 இன் பரபரப்பான அடையாளங்களுக்கு ஒரு சான்று.


இதிலே சுவாரஸ்யமான விடயம், இறுதியாக நடந்த இரு போட்டிகளுமே ஒரே அளவு ஓட்ட இலக்கு. பூனே வோரியர்ஸ் வைத்த 185ஐ பஞ்சாப் கிங்க்ஸ் XI இறுதிப் பந்து மீதமாக இருக்கக் கடந்தது. அதேபோல, நேற்று ராஜஸ்தான் அணி எடுத்த அதே ஓட்ட எண்ணிக்கையை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அதே மாதிரியாக ஒரு பந்து மீதம் இருக்கக் கடந்து வெற்றி ஈட்டியது.

முதலாவது போட்டியில் டேவிட் மில்லரும், இரண்டாவது போட்டியில் மைக் ஹசியும் தங்கள் அபார துரத்தியடித்தல் ஆட்டம் மூலமாக இமாலய இலக்குகளை தங்கள் அணிகள் கடக்க உதவியிருந்தார்கள்.

சாமான்ய ரசிகர்கள் நினைப்பதுபோல, இந்த IPL 2013 போட்டிகள் பேசி வைத்துத் தீர்மானித்ததைப் போல, 13 போட்டிகள் இறுதி ஓவரில் முடிவைத் தந்தன. இதில் இரு போட்டிகள் சமநிலையில் முடிவடைந்து சூப்பர் ஓவர் மூலமாக முடிவைப் பெற்றன.

இந்த இரு சூப்பர் ஓவர் போட்டிகளிலும் பெங்களூர் ரோயல் சல்லஞ்சர்ஸ் அணி விளையாடியது இன்னொரு சிறப்பம்சம்.


நேற்றைய இரவுப் போட்டியில் ராஜஸ்தான் சார்பாக அவுஸ்திரேலியாவின் ஷேன் வொட்சன் பெற்ற சதமே இந்த IPL 2013 இன் முதலாவது சதம். ஆனால் அவரது அணியை வெற்றிபெறவைக்க அது உதவவில்லை.

இதைத் தவிர மூன்று ஆட்டமிழக்காத 90களும் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன.

நடைபெற்ற 30 போட்டிகளில் கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளோர்


இதுவரை ஓட்ட மழை பொழிந்தோரில் ஒவ்வொரு வருடம் போலவும் இம்முறையும் அதிக சிக்சர்களைப் பொழிந்திருக்கிறார் கிரிஸ் கெயில். இவர் இதுவரை அடித்துள்ள ஆறு ஓட்டங்கள் 17. இவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா 15, விராட் கொஹ்லி 11 மற்றும் இலங்கை வீரர் திசர பெரேரா 9 என்று பட்டியல் தொடர்கிறது.


இலங்கை வீரர்களில் திசர மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் தவிர வேறு எவருமே பெரிதாக இதுவரை சோபிக்கவில்லை. இவர்களுக்கு அடுத்தபடியாக சுழல் பந்துவீச்சாளர் சச்சித்ர சேனநாயக்க தான் விளையாடியுள்ள 3 போட்டிகளில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி சிறப்பாக செய்துள்ளார்.

இந்த IPL 2013 தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சுனில் நரேனும், சன்ரைசர்ஸ் அணியின் அமித் மிஸ்ராவும் அடுத்தடுத்த தினங்களில் ஹட் ட்ரிக் சாதனைகளை நிகழ்த்தினர்.

இதில் மிஸ்ரா பெற்ற ஹட் ட்ரிக் ஆனது அவர் இந்த IPL சரித்திரத்தில் பெற்றுள்ள மூன்றாவது ஹட் ட்ரிக் ஆகும். இம்மூன்றையுமே அவர் மூன்று வேறு வேறு அணிகளுக்காகப் பெற்றுள்ளார் என்பது மற்றொரு முக்கிய விடயமாகும்.

ஆனால் ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் பலரும் பல விதமான யுக்திகளைப் பயன்படுத்துகின்றனர். இம்முறை ஆச்சரியப்படுத்தும் விதமாக லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

இதுவரை அதிக விக்கெட்டுக்களை எடுத்தோர்


தொடரில் தடுமாறி வரும் சச்சின் டெண்டுல்கர் - டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அரைச்சதம் பெற, அதே போட்டியில் இதுவரை பெரியளவில் பிரகாசிக்காத மேலும் இரு மூத்த வீரர்களான விரேந்தர் சேவாகும், மஹேல ஜயவர்தனவும் தமது பங்குக்கு அரைச் சதங்களை அபாரமாகப் பெற்றிருந்தார்கள்.

இதன்மூலமாக IPL 2013இல் தங்கள் முதல் வெற்றிக்காகத் தவம் கிடந்த டெல்லி டெயார் டெவில்ஸ் தங்கள் ஏழாவது போட்டியில் அதைப் பெற்றது.


மூத்த வீரர்களில் இதுவரை சோபிக்காத வீரராக அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கும் இருவர், ரிக்கி பொன்டிங் மற்றும் குமார் சங்கக்கார.

இதிலே சங்கக்கார தான் தலைமை தாங்கும் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடும் பதினொருவரிலிருந்து விலகி கமேரோன் வைட்டைத் தலைவராக்கி வெற்றிக்கான வழிவகையைக் கண்டறிந்துள்ளார்.

இதனால் தான் வழமையாக பாரம்பரியப் பலமான அணிகளாக இருந்துவரும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் சல்லஞ்சர்ஸ் ஆகிய அணிகளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிகர்த்து நிற்கிறது.

இதே வழிமுறையை மற்றொரு இலங்கைத் தலைவரான அஞ்சேலோ மத்தியூசும் பூனே வோரியர்ஸ் அணியில் கடைப்பிடிதுள்ளார்.


ஆனால், பொன்டிங் மும்பாய் இந்தியன்ஸ் அணியில் இதுவரை இப்படி யோசித்திருக்கவில்லை; அதற்கான காரணமாக தினேஷ் கார்த்திக் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் சிறப்பாக ஆடி அணியைக் காப்பாற்றி வருவது காரணமாக இருக்கலாம்.

மற்றொரு ஆச்சரியப்படுத்தும் அணியாக இம்முறை ராகுல் டிராவிடின் ராஜஸ்தான் ரோயல்ஸ் காணப்படுகிறது.

இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றுமே இறுதிக்கட்டமாக இடம்பெறவுள்ள தெரிவுப் போட்டிகளுக்கு அணிகளை அழைத்துச் செல்லப்போகின்ற முக்கிய போட்டிகளாக அமையப் போகின்றன.

ஓட்டங்களும் விக்கேட்டுக்களும் புள்ளிகளும் இனி அதிகம் பேசப்படுகிற, அவதானிக்கப்படுகிற விடயங்களாக அமையும்.

இனி வரும் IPL இரவுகள் மேலும் விறுவிறு, பரபர போட்டிகளைக் கொண்டுவரும் என்பது திண்ணம்.

இதுவரை நடந்த மேலும் சில சுவாரஸ்யங்கள் தொடர்ந்து இதே பகுதியில் வரும்; எதிர்பாருங்கள்.

www.arvloshan.com

  Comments - 0

  • Rohan Tuesday, 23 April 2013 08:06 AM

    ஆமிட் மிச்ட்ரவும் ஹட்ரிக் எடுத்துள்ளார் .

    Reply : 0       0

    Satheez Tuesday, 23 April 2013 08:16 AM

    அருமையான ஆய்வு.. தொடரட்டும்...

    Reply : 0       0

    S.Ananthan Tuesday, 23 April 2013 08:19 AM

    ஹட்ரிக் எடுத்தது சண்ரைசர்ஸ் அணியின் அமித் மிஸ்ரா எதிர் புனே வரியர்ஸ் 17/04/2013

    Reply : 0       0

    Nirathan Tuesday, 23 April 2013 08:31 AM

    //சுனில் நரேன் கைப்பற்றியுள்ள ஒரே ஒரு ஹட் ட்ரிக் மட்டுமே பந்து வீச்சாளர்களின் பெரிய சாதனை.//

    அமித் மிஸ்ரா ஹட்ரிக் அடங்கலாக 5 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது மிகச்சிறந்த பெறுதி

    Reply : 0       0

    லோஷன் Wednesday, 24 April 2013 06:35 PM

    தவறு விட்டிருந்தேன்; சுட்டிக்காட்டியமைக்கு. நன்றிகள்.
    இப்போது திருத்தியவடிவம் உள்ளது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X