2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளைக் கோட்டைக்குள் கறுப்பு சிங்கங்கள்

A.P.Mathan   / 2012 மே 17 , மு.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஒருபக்க தொடராகவே இந்த தொடர் கருதப்படுகிறது. மிகப் பலமான நிலையில் உள்ள இங்கிலாந்துடன் அவர்கள் நாட்டில் மோதுவது இலகுவான விடயமா? அதுவும் மேற்கிந்திய தீவுகள் அணி. முதல் தர டெஸ்ட் அணியுடன் அவர்கள் மண்ணில் மோதுவது அவ்வளவு ஒன்றும் சுலபமல்ல. அண்மைக்காலமாக இங்கிலாந்தில் வைத்து குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ஒரு கை பார்த்த அணி இங்கிலாந்து அணி. 80களில் என்றால் இரண்டு தலைசிறந்த அணிகள் மோதப் போகின்றன. விறுவிறுப்பான போட்டிகள் காத்திருகின்றன என்று சொல்லலாம். அந்த நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி அவ்வளவு பலமாக இருந்தது. இப்போ? பதிலே சொல்ல முடியாத நிலையில் உள்ளது?

இங்கிலாந்து அணியைப் பொறுத்தளவில் முழுமையான அணியாக உள்ளது. இலங்கையில் வைத்து இறுதியாக டெஸ்ட் தொடரை சமப்படுத்தியது. அதற்கு முன்னர் பாகிஸ்தானுடன் தோல்விகள். என்னதான் பலமான அணி என்றாலும், முதல் தர அணி என்றாலும் அவர்கள் இன்னும் தங்களை நிரூபிக்க வேண்டியவர்களாக உள்ளனர். இந்த வருடத்தில் விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி மாத்திரமே. 4 போட்டிகளில் தோல்வி. அப்போட்டிகள் இங்கிலாந்துக்கு வெளியே விளையாடப்பட்ட போட்டிகள். தங்கள் பலத்தை தங்கள் நாட்டில் காட்ட, அணியை மீள கட்டி எழுப்ப இங்கிலாந்து அணிக்கு இது நல்ல வாய்ப்பே. கடந்த வருடத்தில், உலகின் தலை சிறந்த அணிகள் என்று சொல்லக் கூடிய அவுஸ்திரேலிய (அவுஸ்திரேலியாவில் வைத்து), இலங்கை, இந்திய அணிகள் இங்கிலாந்து அணியிடம் வாங்கிக் கட்டியவை. இவற்றுடன் பார்க்கும் போது மேற்கிந்திய தீவுகள் எங்கே என்று கேட்க  தோன்றுகிறதுதானே.
 

மறு புறத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி. தன்னை வளர்த்துக் கொள்ள, மீள எழ போராடி வருகிறது. இறுதியாக சொந்த நாட்டில் அவுஸ்திரேலிய அணியுடன் போராடி வெல்ல முடியாமல் தோற்றுப்போனது. விக்கெட் காப்பாளர் தினேஷ் ராம்டின், மர்லன் சாமுவேல் ஆகியோர் அணிக்குள் மீண்டும் வந்துள்ளனர். விளையாடப் போகும் அணி என்று பார்த்தால் குறை சொல்வதற்கில்லை. ஆனால் அணிக்குள் இணைப்பு, பிணைப்பு இல்லாமை முக்கிய காரணம் தோல்விக்கு. கடந்த வருடத்தில் பாகிஸ்தான் அணியுடன் பெற்ற ஒரு வெற்றி மாத்திரமே அவர்கள் சாதனை. இவ்வருடம் அவர்கள் விளையாடும் இரண்டாவது தொடர் இது.

இந்த இரண்டு அணிகளுக்கிடையிலான தொடர் 1928ஆம் ஆண்டு ஆரம்பமானது. மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது. பிற்காலங்களில் மேற்கிந்திய தீவுகளின் ஆதிக்கம் மேலோங்கியது. தொடர்ந்த காலங்களில் தங்கள் தங்கள் நாடுகளில் தொடர்களை கைப்பற்றி வந்தன. 33 தொடர்களில், 12 தொடர்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் 16 தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. 5 தொடர்கள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. இதில் ஒரு சிறப்பு 76ஆம் ஆண்டில் இருந்து 90ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து அணி ஒரு தொடரைத் தானும் சமப்படுத்தக் கூட இல்லை. 33 போட்டிகளில் ஒரு வெற்றி மாத்திரமே. அதுவும் 90ஆம் ஆண்டு. மேற்கிந்திய தீவுகள் அணியின் சரிவின் முதற்கட்ட காலம் என்று சொல்லலாம். அப்படி ஓர் ஆதிக்கம் இருந்த அணி இன்று காமெடி அணியாக மாறிவிட்டது. 2000ஆம் ஆண்டுக்கு பின் மேற்கிந்திய அணியின் நிலை மோசமாக வீழ்ச்சியடைய - இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. இறுதியாக இரண்டு அணிகளும் இங்கிலாந்தில் 2009ஆம் ஆண்டு சந்தித்தன. இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்கு வெற்றி. அதற்கு முன் 2008ஆம் ஆண்டு மேற்கிந்தியதீவுகளில் வைத்து 5 போட்டிளில் ஒரு வெற்றியை பெற்று மேற்கிந்திய தீவுகள் தொடரைக் கைப்பற்றியது.

இந்த இரண்டு அணிகளுக்குமிடையிலான மொத்தமாக விளையாடப்பட்ட டெஸ்ட் போட்டிகளின் படி இன்னமும் கூடுதலான வெற்றிகள் என்ற சாதனை மேற்கிந்திய தீவுகள் பக்கமாகவே உள்ளது. 145 போட்டிகளில் 53இல் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 43 போட்டிகளில் வெற்றி. 49 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.  இப்படி பல வரலாறுகள் உள்ள அணிகளுக்கு சாதனைகள் இல்லாமல் போகுமா?

துடுப்பாட்டத்தில் கூடுதலான ஓட்டங்கள் பெற்றவர்கள்
காபீல்ட் சோபஸ்                36    61     3214    226     66.64    10    13
பிரையன் லாரா                   30    51     2983    400*    62.14     7    11
விவியன் ரிச்சர்ட்ஸ்         36    50     2869    291     62.36     8    15
டெஸ்மன்ட் கெயின்ஸ்  36    59     2392    184     47.84     5    13
கோர்டன் கிரீனிட்ஜ்          32    48     2318     223     50.39     7    8

ஏழாம் எட்டாம் இடங்களில் இங்கிலாந்தின் ஜெப்ரி போய்கோட், கிரகாம் கூச் ஆகியோர் உள்ளனர். ஒன்பதாமிடத்தில் தற்சமயம் விளையாடும் சிவ்நரேன் சந்தர்போல் உள்ளார். அவரின் பெறுதிகள்     31     50     2124     147*     50.57    5    14     இவ்வாறு உள்ளன.  இங்கிலாந்து சார்பாக இந்த தொடரில் விளையாடுபவர்களில் அவர்களின் தலைவர் அன்று ஸ்ட்ரோஸ் கூடுதலான 1082 ஓட்டங்களை 15 போட்டிகளில் பெற்றுள்ளார்.

(போட்டிகள் , இன்னிங்க்ஸ், ஓட்டங்கள் , கூடுதலான ஓட்டங்கள் , சராசரி , சத்தங்கள் , அரைச்சதங்கள் – * ஆட்டமிழக்காமல்)


பந்துவீச்சிலும் மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
கேர்ட்லி அம்ப்ரூஸ்         34     63    3082    164    45/8      11/84          18.79
கொட்னி வோல்ஸ்           36     68    3683    145    74/6      117/10        25.40
மல்கம் மார்ஷல்                26    50    2436    127    22/7      92/10          19.18
காபீல்ட் சோபஸ்                36    62    3323    102    41/5       80/8            32.57
லான்ஸ் கிப்ஸ்                   26     47    2889    100    39/6     157/11        28.89

தற்சமயம் விளையாடுபவர்களில் பிடல் எட்வர்ட்ஸ் கூடுதலான விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.  15    27    1672    38    92/6    108/6        44.00

(போட்டிகள், இன்னிங்க்ஸ், கொடுத்த ஓட்டங்கள், விக்கெட்கள் , ஒரு இன்னிங்க்ஸின் சிறந்த பந்து வீச்சு, ஒரு போட்டியின் சிறந்த பந்து வீச்சு, சராசரி)


இந்த முறை அணிகளைப் பொறுத்த மட்டில்  இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் கெவின் பீற்றர்சனை அதிகம் எதிர் பார்க்கலாம் என தோன்றுகிறது. நல்ல போர்மில் உள்ளார். அடுத்த படியாக ஜோனதன் ட்ராட், அலிஸ்டயர் குக் ஆகியோர். பந்துவீச்சில் ஸ்டுவோர்ட் ப்ரோட் நிச்சயம் எதிர்பார்க்கலாம். குளிர் காலநிலை. அவரின் சுவிங் பந்துகள் பதம் பாக்கும். ஜேம்ஸ் அன்டர்சன் வழமை போலவே செயற்படுவார் என நம்பலாம்.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக வழமையான ரன் இயந்திரம் சந்தர்போலை நம்பலாம். தனித்து நின்று போராடுவார். டரின் பிராவோ எதிர்பார்ப்புக்குரியவர். கேர்க் எட்வேர்ட்ஸ் இன்னும் கொஞ்சம் அதிகம் நம்பப்படக்கூடியவர். 7 போட்டிகள் விளையாடிய நிலையிலேய உப தலைவர் பொறுப்பும் கிடைத்துவிட்டது. மர்லன் சமுவேல்சின் மீள் வருகை அணிக்கு துடுப்பாட்டத்தில் மட்டுமல்ல பந்து வீச்சிலும் பலம். பந்து வீச்சில் பிடல் எட்வேர்ட்ஸ், கிமர் ரோச் ஆகியோர் நிச்சயம் விளையாடுவார்கள். கொஞ்சமாவது அச்சுறுத்தல் கொடுப்பார்கள் என நம்பலாம். இங்கிலாந்து ஆடுகளங்கள் மித வேகப் பந்து வீச்சாளர்களுக்கு நல்ல முறையில் அமையும். எனவே டரின் சமிக்கு விக்கெட்களைக் கைப்பற்ற நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. நல்ல ஒற்றுமையாக விளையாடினால் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு சவால் கொடுக்கலாம். இங்கிலாந்து அணி அடிக்கப் போகும் வெள்ளையடிப்பில் இருந்து தப்புவார்களா மேற்கிந்திய தீவுகள்?. டெஸ்ட் தொடர் முடியும் வரை காத்திருப்போம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X