2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இந்தியா - இங்கிலாந்து தொடர்; இந்திய அணிக்கு உண்மையான வெற்றியா?

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இந்தியாவில் நிறைவடைந்துள்ளது. இந்தியா தொடரை 3 - 2 என்ற ரீதியில் வெற்றி பெற்றுள்ளது. டெஸ்ட் தொடருக்கு பழி தீர்க்கும் தொடர் என கூறப்பட்ட தொடரிலேயே இந்தியா அணி வென்றுள்ளது. ஆனாலும் பழி தீர்த்துள்ளதா? இந்த வெற்றி போதுமானதா? இங்கிலாந்தின் ஆதிக்கம் இந்தியாவில் மிக வலுவாக இருக்கின்றது என்பது அண்மைக்காலமாக ஏற்றுக் கொள்ளவேண்டியதாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி தொடர் வெற்றியைப் பெற்றுக் கொண்டது. டுவென்டி 20 தொடர் சமநிலையில் நிறைவடைந்தது. இவ்விரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளைப் பெற்றுக்கொண்டன. ஒருநாள்ப் போட்டித் தொடரில் இந்திய அணியால் இலகுவாக வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இங்கிலாந்து அணி மிகுந்த சவாலை வழங்கியது. இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுக்கொண்டது. இந்த தொடர் வெற்றி, தென்ஆபிரிக்க அணியின் தோல்வி என்பன இந்திய அணிக்கு தரப்படுத்தல்களில் முதலிடத்தைக் கொடுத்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து இரண்டு அணிகளும் 119 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளன. இந்திய அணி தசமப் புள்ளிகளில் முன்னிலை பெற்று முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியா தொடர் ஆரம்பிக்கும் வேளையில் முதலிடத்தில் இருந்தது என்பதும், இந்தியா மூன்றாமிடத்தில் இருந்தது என்பதும் முக்கிய விடயம்.

பெறுதிகள், பெறுபேறுகள் என்பனவற்றைத் தாண்டி விளையாடிய விதம், வீரர்களின் திறமை என்று பார்க்கும்போது இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்று சொல்ல முடியாது. உலகச் சம்பியன் ஆகி இரண்டு வருடங்கள் கூட இன்னும் ஆகவில்லை. சொந்த நாட்டில் இப்படி விளையாடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை. இந்திய அணியானது இங்கிலாந்து அணி மீது ஆதிக்கம் செலுத்தியது என்று சொல்வதற்கில்லை. மாறாக இங்கிலாந்து அணி, இந்திய அணி மீது அழுத்தங்களை செலுத்திய போதும் அதிர்ஷ்டவசமாக இந்திய அணி வென்றுவிட்டது என்றே சொல்லக் கூடியதாக உள்ளது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் இரண்டு வீரர்களே நல்ல முறையில் துடுப்பாடி ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். ரெய்னா, டோனி ஆகியோரே துடுப்பாட்டத்தில் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர்கள். இந்திய அணியின் ஆரம்பம் மிக மோசமாக உள்ளது. செவாக் அணியால் தூக்கப்பட்ட நிலையில் மாற்று வீரர் யார் என்ற கேள்வி இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. அஜிங்கையா ரெஹானே மூன்று போட்டிகளுடன் நிறுத்தப்பட்டு ரோஹித் ஷர்மாவிற்கு ஆரம்ப வீரர் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. நான்காவது போட்டியில் அவர் விளையாடிய விதம் அவரை ஆரம்ப வீரராக களமிறக்கலாம் என்ற நம்பிக்கையை தந்தபோதும் அடுத்த இறுதிப் போட்டியில் ஏமாற்றிவிட்டார். கெளதம் கம்பீரின் நிலையும் மோசமாகவே உள்ளது. ஓர் அரைச் சதம் மாத்திரமே. இப்படியே போனால் அணியில் இடம் கேள்விக் குறியாகிவிடும். விராத் கோலி ஒரு போட்டியில் மாத்திரமே சிறப்பாக செயற்பட்டார். இள வயது வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி நல்ல முறையில் ஓட்டங்களைக் குவித்த பின்னர் அவர்களின் போம் இழக்கப்படும் போது யார் மீண்டு வருகிறார்களோ அவர்களே சிறந்த வீரர்களாக தொடர்வார்கள். அந்தக் கட்டம் இப்போது கோலிக்கு. மிகப் பெரிய அளவில் ஏமாற்றியவர் யுவராஜ் சிங். நல்ல மீல்வருகையினை அவரால் வழங்க முடியவில்லை. உள்ளூர்ப் போட்டிகளில் ஓட்டங்களை குவித்த போதும் சர்வதேசப் போட்டிகளில் தடுமாறுகிறார். முதல் மூன்று போட்டிகளிலும் சராசரியாக துடுப்பாடினாலும் இறுதி இரண்டு போட்டிகளும் மிக மோசமாக மாறிப்போனது. முதற்ப் போட்டியில் அரைச் சதம் அடித்தது மாத்திரமே அவரின் பங்கு. டோனி, ரெய்னா ஆகிய இருவருமே அணியைக் காப்பாற்றியவர்கள். டோனி வழமையான பாணி. ரெய்னா மிக சிறப்பாகவும், அதிரடியாகவும் விளையாடி தொடர்ச்சியாக நான்கு அரைச் சதங்களைப் பெற்றுக் கொண்டார். இருவரும் இந்திய அணியின் இன்னிங்சை  நிறைவு செய்யும் துடுப்பாட்ட தூண்கள் என்றே சொல்ல வேண்டும். ரவீந்தர் ஜடேஜாவிற்க்கு இனி இந்திய அணியில் நிரந்த இடம் உண்டு. துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என மூன்று பக்கமும் மிக சிறப்பாக செயற்பட்டுள்ளார். இப்படியே தொடர்ந்தால் இந்திய அணிக்கு மிகப் பெரிய பலம். பந்து வீச்சில் அஷ்வினுக்கு இங்கிலாந்து தொடரே மிக மோசமானதாகப் போய்விட்டது. பந்து வீச்சில் அவர் நிறையவே செய்ய வேண்டியதுள்ளது. ஓட்டங்களையும் ஏராளமாக வழங்கி இருந்தார் என்பதும் முக்கிய பிரச்சினை. இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் நல்ல மீள் வருகை. சிறப்பாக பந்து வீசியிருந்தார். வேகம், நிதானம் என்பன நல்ல முறையில் தென்பட்டது. புவனேஸ்வர் குமார் நல்ல சகலதுறை வீரர் என்று சொல்லலாம். பந்துவீச்சாளர், துடுப்பாடக்கூடியவர். இவரின் பந்துவீச்சே முக்கியம். ஆனால் இவரைப் பாவிக்கும் முறையில்தான் கேள்விகள் இருக்கின்றன. ஆரம்பத்திலேய பந்து வீசி ஓவர்களை நிறைவு செய்வது வேகப் பந்து வீச்சுக்கு எந்தளவு பயன் தரும் என்பது புரியவில்லை. தோனியின் யுக்தி அதுவாக இருந்துள்ளது. முதற்ப் போட்டியில் அவரை சரியாக பாவிக்காததன் விளைவு சிறப்பாக தென்பட்டது. ஷமி அஹமட் சிறப்பாக பந்து வீசுகின்றார். ஆனாலும் அச்சுறுத்தும் வகையில் பந்து வீச்சு இருப்பது போல் தென்படவில்லை. இர்பான் பதான் குணமடைந்து அணிக்குள் மீள வந்தால் இவரின் இடம் பறி போகும் நிலையிலேயே உள்ளது. ஆக இந்திய அணி புதிய வேகப் பந்துவீச்சாளர்கள் மூவருடன் தொடரை நிறைவு செய்துள்ளது. இவர்களை தாண்டி அசோக் டின்டா முதற்ப் போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்திய போதும் ஓட்டங்களை அதிகமாக கொடுக்கும் காரணத்தால் நீக்கப்பட்டார். அணிக்குள் கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் அணிக்குள் இணைக்கப்பட்ட செற்றேஸ்வர் புஜாரவிற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. இறுதிப் போட்டியில் கெளதம் கம்பீரின் இடம் அல்லது யுவராஜ் சிங்கின் இடம் அவருக்கு வழங்கப்பட்டு இருந்தால் அவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து இருக்கும். தொடரை கைப்பற்றிய பின்னரும் வீரர்களுக்கு வாய்ப்புக்கள் ஏன் வழங்கவில்லை என்பது டோனிக்கே வெளிச்சம்.

டோனியை நல்ல தலைவர் என்று போற்றக் காரணமாக அமைந்தது துணிச்சலான முடிவுகள் எடுத்தமை. போட்டியின் போக்கை அவை மாற்றுவனவாக அமைந்தன. அது அதிர்ஷ்டம் என்று கூட சொல்லாம். ஆனாலும் அது தொடந்து கை கொடுக்குமா என்பது கேள்வி. அண்மைக்காலமாக அவரின் முடிவுகள் போட்டியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளன. ஆனால் அவை அவரின் வழமையான பாணியில் எடுக்கப்பட்டதாக தென்படவில்லை. குறிப்பாக முதற்ப் போட்டியில் ரெய்னா சிறப்பாக பந்து வீசி ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்களைக் கைப்பற்றிக்கொடுக்க 5 ஓவர்களுடன் அவரை நிறுத்தியது. புவனேஸ்வர் குமார் 5 ஓவர்கள் மட்டும் பந்து வீசிய நிலையில் 48ஆவது ஓவரில் அவரை பந்து வீச்சுக்கு அழைத்தமை. அந்த ஓவரை அவர் சிறப்பாக வீசினாலும் இறுதி ஓவரில் ஏராளமான ஓட்டங்களை வழங்கினார். அடுத்த நான்கு போட்டிகளிலும் முதலிலேயே அவரின் ஓவர்கள் நிறைவு செய்யப்பட்டன. யுவராஜ் சிங் அழைக்கப்படவே இல்லை என்றே சொல்ல வேண்டும் இந்த தொடரில். சிறப்பாக பந்து வீசக் கூடியவராக இருந்தும் வெறும் 6 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இறுதிப் போட்டியில் வீரர்களிற்கு சரியான வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. இப்படியான குறிப்பிடும் படியான காரணங்களையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இவற்றையும் செய்தால் இன்னும் சிறப்பான தலைவராக அவரை போற்ற முடியும். 

இந்திய அணியின் நிலைமைகள் இப்படி அமைந்துள்ளன. இந்திய அணியின் எதிர்கால அணி என்று சொல்லக் கூடிய அணி அமைய ஆரம்பித்துள்ளது. இனி இந்திய அணி ஒருநாள்ப் போட்டிகளில் விளையாடப்போவது இங்கிலாந்தில் வைத்து மினி உலகக்கிண்ணம் என்று அழைக்கப்படும் ICC சம்பியன்ஸ் ட்ரோபி தொடரில். அதற்கிடையில் IPL தொடர் வந்து எத்தனை உபாதைகளை தரப்போகிறதோ? எத்தனை மாற்றங்களை அணியில் தரப் போகிறதோ? என்பது மிகப் பெரிய கேள்வி. இந்தியாவின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு இந்த IPL தொடர் மிக முக்கியமான விடயம் என்பது எல்லோராலும் இப்போது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இங்கிலாந்து அணியை பொறுத்த மட்டில் இந்த தோல்வி பெரிய தோல்வி என்று சொல்ல முடியாது. மிக மோசமான தொடர் தோல்விகளை இந்தியாவில் வைத்து சந்தித்து வந்த இங்கிலாந்து அணிக்கு இந்த தொடரில் பெற்ற வெற்றிகள் என்பது மிகப் பெரியவையே. 2001ஆம் ஆண்டு தொடருக்கு பின் ஒரு தொடரில் கூடிய வெற்றிகளை பெற்றது இதுவே முதற் தடவை. அதற்க்கு பின் மூன்று தொடர்களில் இரண்டு தொடர்களில் வெற்றிகள் கிடைக்கவே இல்லை. ஒரு தொடரில் ஒரு வெற்றி மாத்திரமே. அதைவிட 2005 -2006 பருவ காலத்தில் பெற்ற வெற்றிக்கு பின் இப்போதுதான் இந்தியாவில் வைத்து இங்கிலாந்து அணி ஒரு போட்டியை வெற்றி பெற்றதே. சுழல்ப் பந்து வீச்சாளர்களுக்கு சாதகம் தரும் ஆடுகளங்களில் அனுபவமற்ற சுழல்ப் பந்து வீச்சாளர்களை வைத்து சாதித்துக் காட்டியதும் நிச்சயம் அவர்களின் வெற்றியே. இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி காட்டிய மோசமான துடுப்பாட்ட பெறுதிகள் அவர்களுக்கு இந்த தொடரில் பின்னடைவை உருவாக்கின. ஆனாலும் அணியாகவும் வீரர்கள் என்ற நிலையிலும் நல்ல திறைமைகளை வெளிக்காட்டிய தொடராக இங்கிலாந்து அணிக்கு இந்த தொடர் அமைந்தது.

முழுமையான இங்கிலாந்து அணி என்று இந்த அணியை சொல்லிவிட முடியாது. அவர்களின் முழுமையான அணி அல்லது முக்கிய வீரர்கள் சிலர் உபாதைகள் காரணமாக விளையாடாமல் போனது பின்னடைவு தந்துள்ளது. ஆனாலும் அதை காரணமாக கூறிவிட முடியாது என்றாலும் இரண்டாம் தர அணி ஒன்றை வைத்து சிறப்பாக செயற்ப்பட்டமை பாராட்டுக்குரியதே. 

முதலாமிடம் என்ற நிலையில் வந்து அதை இழந்துள்ளார்கள். துடுப்பாட்ட பக்கமாக முழுமையான பலமில்லாமல் போனது இவர்களின் தோல்விகளுக்கு முக்கிய காரணமானது. குறிப்பாக இயன் பெல் அண்மைக்காலமாக ஓட்டங்களை அள்ளிக் குவித்து வரும் ஒருவர். முதற்ப் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் ஓட்டங்களை பெற்றார். இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ஆட்டம் காண வைத்த அலிஸ்டயர் குக் ஒரு நாள்ப் போட்டிகளில் அந்த அளவிற்கு செய்ய முடியாமல் போனது. சராசரியான பெறுதியையே காட்ட முடிந்தது. கெவின் பீற்றர்சன் அச்சுறுத்தக் கூடியளவில் துடுப்பாடவில்லை. இந்தியாவின் துடுப்பாட்ட ஆடுகளங்களில் அவர் அடித்தாடி வேகமாக ஓட்டங்களை குவித்து இருந்தால் இன்னும் பலமாக இருந்து இருக்கும். ஒய்ன் மோர்கன் துடுப்பாட்டத்தில் ஏமாற்றி விட்டார். அணிக்குள் புதிதாக வந்த ஜோ ரூட் நல்ல ஆரம்பம் என்று சொல்லுமளவிற்கு செயற்பட்டார். சுழல்ப் பந்து வீசக் கூடியவர் என்றாலும் பந்து வீச்சில் ஒரு விக்கெட்டை தானும் கைப்பற்ற முடியவில்லை. விக்கெட் காப்பாளர் கிரெய்க் கியூஸ்வெட்டர் துடுப்பாட்டத்தில் சாதிக்காமல் போக இறுதி இரண்டு போட்டிகளிற்கும் ஜோஸ் பட்லர் இணைத்துக் கொள்ளபப்பட்டார். அவரும் பெரியளவில் செய்யவில்லை. எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் இங்கிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டம் பந்து வீச்சு என இரு பக்கமும் ஏமாற்றியவர் சமிட் பட்டேல். துடுப்பாட்டம் கை கொடுக்கவில்லை. நல்ல ஆரம்பம் போட்டிகளை இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தன. முடித்து வைத்தல் அவர்களுக்கு பிரச்சினையாக மாறிப்போனது. சகல துறை வீரர் என கருதப்படும் டிம் பிரஸ்னனும் துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சும் அதே நிலைதான். ஆனாலும் இறுதிப் போட்டியில் அவர் கைப்பற்றிய 4 விக்கெட்கள் வெற்றிக்கு உதவியாக அமைந்தன. ஜேம்ஸ் ட்ரெட்வெல் மிக சிறப்பாக பந்து வீசினார். யாரும் எதிர்பார்க்காதளவிற்கு சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை அச்சுறுத்தினார். ஸ்டீபன் பின் சராசரியாக சிறப்பாக பந்து வீசியிருந்தார். ஓட்டங்களை கட்டுப்படுத்த அவரின் பந்து வீச்சு உதவியது. ஜேட் டேர்ன்பக், இந்திய அணியால் மிகப் பெரிய தாக்குதலிற்கு உட்பட்டார்.

ஆக சமநிலை இல்லாத அலல்து முழுமை பெறாத இங்கிலாந்து அணி தோல்விகளை சந்திக்கக் காரணமாக அமைந்தது. அணி சமநிலை நிச்சயம் ஓர் அணிக்குத் தேவை. அது இங்கிலாந்து அணியிடம் இல்லை என்றே தோன்றியது. நிலைத்து நின்று துடுப்பாடக் கூடிய ஜொனதன் ட்ரொட் போன்றவர்கள் இலலாமல் போனதும் கூட துடுப்பாட்ட பின்னடைவிற்கு காரணமாக அமைந்து இருக்கலாம். ஆனாலும் இங்கிலாந்தின் ஒருநாள்ப் போட்டி அணியானது இந்தளவு பலமாக இருந்தது மிக நீண்ட நாட்களிற்கு முன் என்றே சொல்ல வேண்டும். பலமான அணியாக மாறி ஆசிய ஆடுகளங்களில் ஆசிய நாடுகளிற்கு அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளமை நிச்சயம் பாராட்டப்படவேண்டும்.

கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள்
சுரேஷ் ரெய்னா               5    4    277       89*    92.33       91.11    0    4   
இயன் பெல்                       5    5    234    113*     58.50       74.76    1    1
அலிஸ்டையர் குக்        5    5    207       76      41.40       72.88    0    2
கெவின் பீற்றர்சன்         5    5    185       76      37.00       86.44    0    1
ஜோ ரூட்                            5    4    163       57*    54.33       81.09    0    1
விராட் கோலி                  5    5    155       77*    38.75       82.01    0    1
M.S டோணி                       5    5    148       72      37.00    100.68    0    1
ரவீந்தர் ஜடேஜா             5    4    128       61*    64.00        92.75    0    1
கெளதம் கம்பீர்               5     5    127       52      25.40       72.15    0    1
யுவராஜ் சிங்                     5    5    126       61      25.20       96.18    0    1
(போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதம் அரைச் சதம் )

கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவார்கள்
ஜேம்ஸ் ட்ரெட்வெல்         5    5    47.0    200    11    44/4    18.18    4.25
ரவீந்தர் ஜடேஜா                   5    5    40.4    142    09    19/3    15.77    3.49
டிம் பிரஸ்னன்                      4    4    34.4    202    07    45/4    28.85    5.82
ஸ்டீபன் பின்                          5    5    49.1    230    07    27/2    32.85    4.67
ரவிச்சந்திரன் அஷ்வின்   5     5    46.0    250    07    39/3    35.71    4.43
இஷாந்த் ஷர்மா                  5     5    41.0    227    05    29/2    45.40    5.53
ஜேட் டேன்பக்                        4    4    33.3    246      5    69/2    49.20    7.34
(போட்டிகள், இன்னிங்ஸ், ஓவர்கள், ஓட்டங்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி ஓட்ட வேகம்)

You May Also Like

  Comments - 0

  • ALEX Monday, 04 February 2013 11:26 AM

    இந்தியாவிலும் worldcup win பண்ணும் போது இருந்த முக்கிய வீரர்கள்
    1.செவாக்
    2.சகீர் கான்
    3.டெண்டுல்கர்
    4.ஹர்பஜன் சிங்
    5.பிரவீன் குமார்

    finalல் உங்கள் டீம்க்கு எதிராக டோனி முன்னதாக இறங்கியது சரியான?

    தயவு செய்து இந்தியாவை மட்டும் மட்டம் தட்டுவதை நிறுத்தவும் ,

    நடுநிலமையாக விமர்சனம் செய்யம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X