2024 மே 17, வெள்ளிக்கிழமை

சாதனை வெற்றியாளர்களைத் தந்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு ஆண்டினதும் முதலாவது டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் ஆக இடம்பெறும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் மெல்பேர்னில் முடிவுக்கு வந்தன.

இந்த சுற்றுப்போட்டிகள் ஆரம்பிக்கு முன்னரேயே ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பட்டங்களை வெல்ல யாருக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று கணிக்கப்பட்டு முதல் நிலை seed வழங்கப்பட்டனரோ, அந்த இருவரே தங்கள் சாதனைப் பட்டங்களை வசப்படுத்திக்கொண்டனர் என்பது விசேடமானது.

அவுஸ்திரேலிய பகிரங்க ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஐந்தாவது தடவை தன் வசப்படுத்திய நோவாக் ஜோக்கோவிக், பகிரங்க டென்னிஸ் விளையாட்டு ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதிக தடவை அவுஸ்திரேலிய பட்டத்தை வென்றவர் ஆகிறார்.

இதேவேளை அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் மகுடத்தை அதிக தரம் வென்ற அவுஸ்திரேலிய முன்னாள் டென்னிஸ் ஜாம்பவானான ரோய் எமேர்சனின் கரங்களாலேயே வெற்றிப்பட்டத்தை நேற்று பெற்றுக்கொண்டார் என்பது சிறப்பு.

ஆடவர் பிரிவின் கடந்த ஆண்டு சம்பியன் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா இம்முறை சாம்பியனான ஜோக்கோவிக்கிடமே அரையிறுதியில் தோற்று வெளியேறினார். 

செர்பிய வீரர் ஜோக்கோவிக் பெற்றுள்ள 8ஆவது கிராண்ட் ஸ்லாம் இது.

அண்மைக்காலமாக தொடர் வெற்றிகளைப் பெற்றுவரும் ஜோக்கோவிக், தொடர்ந்தும் தரப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கிறார். முன்னாள் முதலிட நட்சத்திரங்கள் ரோஜர் பெடரர், ரபயெல் நடால் ஆகியோர் இரண்டாம் மூன்றாம் இடங்களில் இருக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவ்விருவரும் முறையே மூன்றாம் சுற்று, காலிறுதி ஆகிய சுற்றுக்களில் தோல்வியுற்று வெளியேறியிருந்தனர்.

ஜோக்கொவிக்கை இறுதிப்போட்டியில் சந்தித்த பிரித்தானிய வீரரான அண்டி மறே தற்போது நான்காம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

மறேயை நான்கு செட்களில் வீழ்த்தி ஜோக்கோவிக் மகுடம் சூடிக்கொண்டார்.

மகளிர் பிரிவில் மிகப் பொருத்தமாக தர நிலைப்படுத்தப்பட்ட முதலாம், இரண்டாம் நிலை வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரப்போவா ஆகியோர் இறுதிப்போட்டியில் சந்தித்தனர்..

கடந்த ஆண்டின் சம்பியன், சீனாவின் லீ நா, கடந்த செப்டெம்பரில் ஓய்வு பெற்றிருந்தார்.

ஓர் ஆடவனுக்குரிய வேகத்தில் பந்துகளை உறுதியுடன் பரிமாறி, மிக ஆவேசத்தோடு விளையாடிய செரீனா, நேரடி செட்களில் ரஷ்ய வீராங்கனை ஷரப்போவாவை வீழ்த்தினார்.

34 வயதாகும் செரீனா பெற்ற ஆறாவது அவுஸ்திரேலிய பகிரங்கப் பட்டம் இதுவாகும். அத்துடன் அவர் வென்றுள்ள 19ஆவது சாதனைக்குரிய கிராண்ட் ஸ்லாம். அதிக கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்களில் செரீனா தற்போது மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

இதன்மூலம் மீண்டும் ஒரு தடவை மகளிர் தரப்படுத்தலில் முதலாம் இடத்தைக் கைப்பற்றியுள்ள செரீனா, மகளிர் தரப்படுத்தலில் அதிக வயதில் முதலாம் இடம் பெற்றவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

சாதனைக்கு மேல் சாதனை நிகழ்த்திவரும் செரீனா, டென்னிஸ் வரலாற்றின் மிகச்சிறந்த வீராங்கனையாக பெருமை பெற்றுள்ளார் என்று தயங்காமல் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டது.

இதேவேளை ஆடவர் இரட்டையர் பட்டத்தை இத்தாலிய ஜோடியான சைமன் போலேல்லி, பாபியோ பொக்னினி ஜோடியும், மகளிர் இரட்டையர் பட்டத்தை அமெரிக்காவின் பெட்டனி சான்ட்ஸ், ரஷ்யாவின் லூசி சபரோவா ஜோடியும் வென்றெடுத்தனர்.

கலப்பு இரட்டையர் பட்டம் இந்தியாவின் லியாண்டர பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் சேர்ந்து விளையாடி பெற்றுக்கொண்டனர்.

http://www.arvloshan.com/


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .