2024 மே 17, வெள்ளிக்கிழமை

துணை அங்கத்துவ நாடுகளின் கையில் அவமானப்படும் ஐசிசி

Kanagaraj   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே ஆகியன சர்வதேச கிரிக்கெட் சபையின் முழு அங்கத்துவமுடைய நாடுகளாகக் காணப்படுகின்றன. இவை டெஸ்ற் விளையாடும் தகுதியையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவற்றிற்கு மேலதிகமாக 38 நாடுகளை சர்வதேச கிரிக்கெட் சபையானது துணை அங்கத்துவ நாடுகளாக அங்கீகரித்துள்ளது. இந்த 38 நாடுகளில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஹொங் கொங், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகள் ஒருநாள் சர்வதேச அந்தஸ்தினைக் கொண்ட துணை அங்கத்துவ நாடுகளாகக் காணப்படுகின்றன.

இரண்டாயிரத்துப் பதினொராம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ணத்தினைத் தொடர்ந்து 2015, 2019ம் ஆண்டுக்கான உலகக்கிண்ணங்களில் முழு அங்கத்துவ நாடுகளான 10 நாடுகள் மாத்திரம் பங்குபற்றும் என சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்தது. இது 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் அயர்லாந்து அணி சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியதன் பின்னர் எடுக்கப்பட்டிருந்தமை ஆச்சரியம் தந்தது. குறிப்பாக, பங்களாதேஷிற்கெதிராக அவ்வணி போராடி 27 ஓட்டங்களால் மாத்திரம் தோல்வியடைந்ததோடு, இங்கிலாந்து அணிக்கெதிராக 327 ஓட்டங்களைத் துரத்தி வெற்றிபெற்றிருந்தது. ஆகவே, சர்வதேச கிரிக்கெட் சபையின் இந்த முடிவு விமர்சனங்களைச் சந்தித்ததோடு, அயர்லாந்து கிரிக்கெட் சபையே இதற்கெதிராக உத்தியோகபூர்வமாக எதிர்ப்பை வெளியிட்ட துணை அங்கத்துவ நாடாக அமைந்தது. இந்த விமர்சனங்கள், எதிர்ப்புகளைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் 10 முழு அங்கத்துவ நாடுகளோடு, 4 துணை அங்கத்துவ நாடுகளை இணைத்துக்கொள்ள சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்தது. அதன்படி, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன தகுதிபெற்றிருந்தன. 

அடுத்த உலகக்கிண்ணத்தில் 10 நாடுகள் மாத்திரம் பங்குகொள்ளவுள்ளதோடு, அவற்றில் உலக சர்வதேச ஒருநாள் சர்வதேசப் போட்டித் தரவரிசையில் முதல் 8 இடங்களிலுள்ள அணிகள் நேரடியாகத் தகுதிபெறவுள்ளதோடு, அடுத்த 2 அணிகளும் உலகக்கிண்ண தகுதிச் சுற்றொன்றின் மூலம் தகுதிபெறவுள்ளன. இதன்காரணமாக, துணை அங்கத்துவ நாடுகள் இல்லாத உலகக்கிண்ணமாக அடுத்த உலகக்கிண்ணம் மாறுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக, இந்த உலகக்கிண்ண ஆரம்பத்தில் சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்சனின் கருத்து அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. முழு அங்கத்துவ நாடுகள் அதிக போட்டித்தன்மையுள்ள போட்டிகளை வழங்குகின்றன என்ற அடிப்படையிலும், துணை அங்கத்துவ நாடுகள் அந்தப் போட்டித்தன்மையைக் குறைக்கின்றன என்ற அடிப்படையிலும் அவரது கருத்து அமைந்திருந்தது. இது அதிக கவனத்தை மாத்திரமல்லாது, சில மட்டங்களிலும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே உலகக்கிண்ணம் ஆரம்பித்துவிட்ட நிலையில், அயர்லாந்து போன்ற பலமான துணை அங்கத்துவ நாடுகள் கருத்துக்கள் எவற்றையும் வெளிப்படுத்தாது அமைதியைப் பேணின. ஆனால், பதிலை அவை தங்களது திறமைகள் மூலமாக இதுவரை வழங்கியுள்ளன.

உலகக்கிண்ணப் போட்டிகள் கடந்த 14ம் திகதி ஆரம்பித்திருந்த நிலையில், முதல் 9 நாட்களில் இடம்பெற்றுள்ள போட்டிகளில் துணை அங்கத்துவ நாடுகள் மிகச்சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளமை சர்வதேச கிரிக்கெட் சபைக்கான சிறப்பான பதிலாக அமைந்துள்ள அதேவேளை, இந்த உலகக்கிண்ணத்தை இதுவரை போட்டித்தன்மையாக வைத்துள்ள பெருமை அவையையே சாருமென்றால் அது மிகையாகாது.

உலகக்கிண்ணப் பயிற்சிப் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் 313 ஓட்டங்களைப் பெற, ஸ்கொட்லாந்து அணி 310 ஓட்டங்களைப் பெற்று மூன்றே மூன்று ஓட்டங்களால் மாத்திரம் தோல்வியடைந்தது. பெப்ரவரி 12ம் திகதி இடம்பெற்ற மற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியை அயர்லாந்து அணி 4 விக்கெட்டுக்களால் தோற்கடித்திருந்தது. ஆப்கானிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி மிகுந்த போட்டித்தன்மையாக அமைந்திருந்தது.

உலகக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பித்ததன் பின்னர், முதல் நாள் போட்டிகளில் இலங்கையை நியூசிலாந்து அணி 98 ஓட்டங்களாலும், இங்கிலாந்து அணியை அவுஸ்திரேலிய அணி 111 ஓட்டங்களாலும் இலகுவாக வெற்றிபெற்றிருந்தன. இரண்டாம் நாள் போட்டிகளில் தென்னாபிரிக்க, இந்திய அணிகள் முறையே சிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளை இலகுவாக (சிம்பாப்வே அணி ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவிற்கு அழுத்தத்தை வழங்கியிருந்தது) வெற்றிகொண்டிருந்தன. போட்டித்தன்மையற்ற உலகக்கிண்ணத்திற்கான அச்சத்தை இப்போட்டிகள் வழங்கியிருந்தன.

ஆனால், 5வது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் - அயர்லாந்து அணிகள் மோத, அப்போட்டியில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றிருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியை 87 இற்கு 5 விக்கெட்டுக்கள் என்ற நிலையில் அழுத்தத்திற்குள்ளாக்கிய அயர்லாந்து, அதன் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் சுதாகரித்து 304 ஓட்டங்களைப் பெற்றாலும், ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு அந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றிருந்தது. ஓரளவு இலகுவான வெற்றியாகவே அது அமைந்திருந்தது. மறுநாள் இடம்பெற்ற நியூசிலாந்திற்கெதிரான போட்டியில் ஸ்கொட்லாந்து அணி தோல்வியடைந்திருந்தாலும், அவ்வணிக்கு மிகுந்த போட்டியை வழங்கியிருந்தது. இந்த உலகக்கிண்ணத்தை வெற்றிகொள்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாகக் கருதப்படும் நியூசிலாந்து அணி ஸ்கொட்லாந்து அணியை 142 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. ஆனால், நியூசிலாந்திற்குக் கடுமையான போட்டியை வழங்கிய ஸ்கொட்லாந்து அணி, நியூசிலாந்தின் 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி முழுமையான அழுத்தத்தை வழங்கியதோடு, நியூசிலாந்தின் துடுப்பாட்டம் தொடர்பான கேள்விகளையும் எழுப்பியிருந்தது. 

ஐக்கிய அரபு அமீரகம் - சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியும் மிகவும் போட்டித்தன்மையானதாக அமைந்தது. ஐக்கிய அரபு அமீரகம் 285 ஓட்டங்களைப் பெற, சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 48வது ஓவரின் முடிவில் அந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது.

ஆனால், மறுதினம் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 123 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் அந்த இலக்கை இலகுவாக அடைந்தது. மிகவும் ஒருதலைப்பட்சமான போட்டியாக அப்போட்டி அமைந்திருந்தது. அதற்கடுத்த தினத்திலும் பாகிஸ்தான் அணியை மேற்கிந்தியத் தீவுகள் அணி 150 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது. மற்றொரு ஒருதலைப்பட்சமான போட்டியாக அமைந்தது.

அதன் பின்னர் இன்று இடம்பெற்ற இரண்டு போட்டிகள் துணை அங்கத்துவ நாடுகள் இந்த உலகக்கிண்ணத்தில் எவ்வளவு முக்கியமானவை என்பதை வெளிப்படுத்தின. முதலாவது போட்டியில் இலங்கை அணிக்கெதிராக தனது முதலாவது உலகக்கிண்ணத் தொடரில் பங்குபற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான திறமை வெளிப்பாடு. ஆப்கானிஸ்தான் அணி 232 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தாலும், பந்துவீச்சில் கலக்கியிருந்தது ஆப்கானிஸ்தான். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் வரலாற்றில் ஓர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் தாங்கள் சந்தித்த முதலாவது பந்திலேயே ஆட்டமிழந்த இரண்டாவது சந்தர்ப்பத்தை லஹிரு திரிமன்ன, திலகரட்ண டில்ஷான் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து இன்று ஏற்படுத்திய ஆப்கானிஸ்தான், 4 விக்கெட்டுக்களுக்கு 51 ஓட்டங்கள் என்ற நிலையில் இலங்கை அணியைத் தடுமாறச் செய்தது. அதன் பின்னர் இறுதிக்கட்டத்தில் இலங்கை அணியைத் தடுமாறச் செய்த அவ்வணி, 4 விக்கெட்டுக்களை மாத்திரம் கொண்டிருந்த இலங்கை அணி இறுதி 48 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது. இறுதியில் திஸர பெரேராவின் அதிரடியால் இலங்கை அணி தப்பித்த போதிலும், ஆப்கானிஸ்தான் இன்றைய போட்டியில் இலங்கைக்கு வழங்கிய அழுத்தம் என்பது துணை அங்கத்துவ நாடுகள் இத்தொடரில் வெளிக்காட்டிவரும் திறமை வெளிப்பாடுகளுக்கு சான்றாக அமைந்தது. மறுபுறத்தில் இந்திய - தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 130 ஓட்டங்களால் வெற்றிபெற்று, ஒருதலைப்பட்சமான போட்டியாக அமைந்தது.

துணை அங்கத்துவ நாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மிகக்குறைவானதாகக் காணப்படுகின்ற நிலையில், முழு அங்கத்துவ நாடுகளுக்கெதிராக துணை அங்கத்துவ நாடுகள் அடிக்கடி விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ள நிலையில், துணை அங்கத்துவ நாடுகளுக்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை முன்வருவதற்குப் பின்னடித்துவரும் நிலையில், முதல் 9 நாட்களில் துணை அங்கத்துவ நாடுகளின் பெறுபேறுகள் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதோடு, அவற்றின் திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ள அதேவேளை, இந்த உலகக்கிண்ணத்தை இதுவரை சுவாரசியமாக வைத்திருப்பது அந்நாடுகளே என்பது மறுக்க முடியாத உண்மை. இது அந்நாடுகளை ஒதுக்க நினைக்கும் சர்வதேச கிரிக்கெட் சபையின் முகத்தில் கரி பூசுவதாகவே அமைந்துள்ளது.

இன்றைய போட்டியின் முடிவில் மஹேல தெரிவித்த விடயமொன்று முக்கியமானது. 'ஜதுடுப்பெடுத்தாடுவதுஸ கடினமாகவிருந்தபோது அவர்கள் (ஆப்கானிஸ்தான்) சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினார்கள். அவர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள். முன்னணி நாடுகளுக்கும், ஏனைய நாடுகளுக்குமிடையில் அவ்வளவு பெரிய வித்தியாசம் கிடையாது'. ஆமாம், பெரிய வித்தியாசமில்லை என்பதை அவர்கள் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .