Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 12 , மு.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம், 'சங்கா கிண்ணம்' என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம்.
கிறிஸ் கெயில் பெற்ற இரட்டைச்சதம், டீ வில்லியர்சின் அபார சதம் என்று ஆரம்பத்தில் கலக்கியவர்களைத் தொடர்ந்து, கடந்த வாரம் சங்கக்காரவின் கலக்கல் என்று முன்னைய கட்டுரையில் எழுதியிருந்தேன்.
இந்தவாரம் இன்னொரு புதியவரா என்று கேட்ட வினாவுக்கு சங்கக்காரவின் பதிலாக தொடர்ந்து அவர் குவித்துவரும் சதங்களும் சாதனைகளும் அமைந்திருக்கின்றன.
4ஆவது தொடர்ச்சியான சதத்தை நேற்று ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக பெற்ற குமார் சங்கக்கார, உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டுமன்றி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலேயே யாரும் நிகழ்த்தாத ஒரு சாதனையை, முழு கிரிக்கெட் உலகமே வியந்து வாழ்த்தும் அளவுக்குப் படைத்திருக்கிறார்.
3 சதங்களை சங்கக்கார பெற்றிருந்த போதே, அதற்கு முதல் பலர் அவ்வாறு 3 சதங்களைத் தொடர்ச்சியாகப் பெற்றிருந்தாலும், உலகக்கிண்ணத்தில் மூன்று சதங்களை அடுத்தடுத்துப் பெற்ற முதல்வராக சங்கா பெருமை பெற்றார்.
நேற்று நான்காவது.
அத்துடன் ஒரே உலகக்கிண்ணத் தொடரில் 3 சதங்களைப் பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. மத்தியூ ஹெய்டன் (2007), சௌரவ் கங்குலி (2003) & மார்க் வோ (1996) - 3
அதையும் சங்கக்கார முறியடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் வசமுள்ள இன்னும் இரு உலகக்கிண்ண சாதனைகளும், சங்கக்காரவின் இந்த அபார ஓட்டக்குவிப்பால் உடையக்கூடிய அபாயத்தில் உள்ளன.
1.உலகக்கிண்ணங்களில் பெறப்பட்ட கூடிய சதங்கள். சச்சின் பெற்றது 6. சங்கக்கார இப்போது ரிக்கி பொன்டிங்கை சமன் செய்து 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
2. ஓர் உலகக்கிண்ணத் தொடரில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள். சச்சின் 2003 தொடரில் 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ்களில் 673 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இவருக்கு அடுத்தபடியாக 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவின் மத்தியூ ஹெய்டன் 11 போட்டிகள், 10 இன்னிங்ஸ்களில் 659 ஓட்டங்கள்.
இலங்கை சார்பாக இதுவரை ஓர் உலகக்கிண்ணத் தொடரில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்றவர் மஹேல ஜெயவர்த்தன. 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் 548 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
குமார் சங்கக்கார இப்போதைக்கு இந்த உலகக்கிண்ணத்தில் 6 போட்டிகள், 6 இன்னிங்ஸ்களில் 4 சதங்களோடு 496 ஓட்டங்கள்.
இலங்கை இறுதிப் போட்டி வரை பயணித்தால், (இன்னும் மூன்று போட்டிகள் இருக்கும்) இது சாத்தியமாகும் வாய்ப்பு இருக்கிறது.
சங்கக்காரவும் மஹெலவும் உலக T20 வெற்றிகளோடு T20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதைப் போல, உலகக்கிண்ண வெற்றியுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுவதையும், சங்கக்கார சாதனைகளுடன் விடைபெறுவதையும் சாத்தியமாக்க இலங்கை அணி இன்னும் கடுமையாக போராடவேண்டும்.
எனினும் சச்சின் டெண்டுல்கரின் 96 அரைச் சதங்கள் என்ற சாதனை, சங்காவின் சதங்கள் குவிக்கும் அபார ஓட்டங்களால் முறியடிக்கப்பட முடியாமலே போகலாம்.
இப்போது சங்கக்கார பெற்றுள்ள 25 ஒருநாள் சதங்களுடன், இந்த வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்துவகைப் போட்டிகளிலும் (ஒருநாள் + டெஸ்ட் + T20) 1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் சங்கக்கார பெற்றுக்கொண்டார்.
நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 900 ஓட்டங்களுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார்.
விக்கெட் காப்பிலும் நேற்று சங்கா புதிய சாதனைகளைப் படைத்திருந்தார்.
500 ஆட்டமிழப்புக்களை செய்த முதல் வீரர் என்பதுடன், உலகக்கிண்ணத்தில் அதிக ஆட்டமிழப்புக்களை செய்திருந்த (52) அடம் கில்க்ரிஸ்ட்டின் சாதனையையும் தாண்டினார் சங்கா.
இந்த சாதனை இப்போதைக்கு யாராலும் முறியடிக்கப்பட இயலாத ஒன்று என்பது உறுதி. பட்டியலைப் பாருங்கள் புரியும்.
நேற்றும் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதைத் தனதாக்கிய சங்கா, சர்வதேசப் போட்டிகளில் பெற்ற 50ஆவது போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதாகும்.
அதேபோல அவுஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் சங்கக்காரா 2,038 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். வெளிநாட்டு வீரர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் பெற்ற மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள் இவையாகும்.
மேற்கிந்திய தீவுகளின் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 3,067 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், விவ் ரிச்சர்ட்ஸ் 2,769 ஓட்டங்களுடன் 2ஆம் இடத்தில் உள்ள நிலையில் சங்கா இப்போது 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இலங்கை அணியின் மூன்றாம் இலக்கம் என்றால் துடுப்பாட்ட முதுகெலும்பாகவே மாறி நிற்கும் சங்கா, இந்த உலகக்கிண்ணம் முழுவதுமே 2ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாக ஓட்ட மழையைப் பொழிவதன் முக்கிய காரணமாக நிற்கிறார்.
டில்ஷானுடன் 210, 195 மற்றும் 130, திரிமன்னேயுடன் 212 என்று இணைப்பாட்டங்களும் சங்காவின் சாதனைகள் பேசும்.
நாடுகள் தாண்டி, வயது வரம்பு தாண்டி எல்லா கிரிக்கெட் ரசிகர் மட்டுமன்றி, முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களுமே 'சங்கா, சங்கா' என்று ஒரு புதிய கிரிக்கெட் கடவுளாகவே சங்கக்காரவை ஏற்றி உயர்த்தி வழிபட்டாலும், சங்கா அதே பணிவோடு அணி உலகக்கிண்ணம் கைப்பற்றவேண்டும், அது தான் முதல் நோக்கம் என்கிறார்.
ஆனால், ரசிகர்களின் ஆதங்கம் எல்லாம், இந்தத் தொடரே தனது இறுதி ஒருநாள் தொடர் என்று அறிவித்துள்ள சங்கக்கார ஏன் அந்த முடிவை மட்டும் மீள் பரிசீலனை செய்யக்கூடாது என்பதே...
ரசிகர்கள் மட்டுமன்றி இலங்கை அணித் தலைவர் மத்தியூசின் நிலையம் அதே... "காலில் விழாக்குறையாக சங்காவை ஓய்வு பெறவேண்டாம் என்று கேட்டுவிட்டேன்" என்று சொல்கிறார் அஞ்செலோ.
இன்னும் சங்கா குவிக்கவுள்ள ஓட்ட மழை, சதங்களின் குவியல், சாதனைகளின் பட்டியல்கள் என்பவற்றுக்காகவும் வாழ்த்துக்களோடு காத்திருப்போம்.
கூடவே 29ஆம் திகதி இறுதிப் போட்டியில் இலங்கை விளையாடுமா என்று பார்க்கவும், சங்கக்கார தனது ஓய்வு முடிவை இத்தனை ஆயிரம் ரசிகர்களுக்காகவும் தனது சக வீரர்களுக்காகவும் மறு பரிசீலனை செய்வாரா என்று அறிந்துகொள்ளவும்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
ajith - vijay Wednesday, 18 March 2015 09:56 AM
சாதனைகளின் மறு பெயர் முக்கிய போட்டியில் சொதப்பி விட்டதே. அதிக ஆர்ப்பாட்டம் அழிவை தரும். காலிறுதியில் கொட்டம் அடங்கியது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago