2024 மே 17, வெள்ளிக்கிழமை

என்னதான் வேண்டும் அர்ஜுனவுக்கு?

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 27 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா திபான், கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இலங்கைக்கு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தவரும் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில், இலங்கை கிரிக்கெட் சபை பற்றியும் இலங்கையில் கிரிக்கெட் பற்றியும் தனது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கையின் சாதனை வீரரான முத்தையா முரளிதரனைத் "துரோகி"யாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அர்ஜுனவின் கலந்துரையாடல், முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், அர்ஜுனவின் வழக்கமான பாணியிலான முறைப்பாடுகளே, இதன்போது காணப்பட்டன.

"வெளிநாடுகளிலிருந்து வரும் பயிற்சியாளர்கள், தங்களுக்கான வருமானத்தைப் பெற்றுக் கொண்டு, எவ்வளவுக்குக் குறைந்த வேலை செய்யலாம் எனவே நினைக்கின்றனர்" என, அர்ஜுன தெரிவித்திருந்தார். ஆனால், இதே அர்ஜுனவின் தலைமையில் 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி வெல்வதற்கு, டேவ் வட்மோரும் முக்கியமான காரணமாவார். அவர் இலங்கையில் பிறந்திருந்தாலும், தனது 8 வயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குச் சென்று, அங்கே தனது வாழ்வின் பெரும்பகுதியை வாழ்ந்திருந்தார். அவரே, தன்னை இலங்கையர் என அடையாளப்படுத்துவார் என எண்ண முடியாது. அப்படியானவர் தான், இலங்கைக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

2007ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த - உலகில் தோன்றிய மிகவும் பலமான ஒருநாள் சர்வதேசப் போட்டி அணிகளுள் ஒன்றான - அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த போது, அணியின் பயிற்றுநராக இருந்தவர், அவுஸ்திரேலியரான டொம் மூடி. 2011ஆம் ஆண்டில், உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குச் சென்ற போது பயிற்றுநராக இருந்தவர், அவுஸ்திரேலியரான ட்ரெவர் பெய்லிஸ். 2014ஆம் ஆண்டில் உலக இருபதுக்கு-20 தொடரில் சம்பியனான போது பயிற்றுநராக இருந்த போது பயிற்றுநராக இருந்தவர், இங்கிலாந்தின் போல் பப்ரேஸ். 2012ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் இறுதிப் போட்டிக்கு நுழைந்த போது பயிற்றுநர்களாக இருந்தவர்கள் முறையே தென்னாபிரிக்காவின் கிரஹம் போர்ட், இங்கிலாந்தின் ட்ரெவர் பெய்லிஸ். இப்படியிருக்கையில், வெளிநாட்டவர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துதலென்பது, நகைப்புக்குரியது.

அத்தோடு, வெளிநாட்டவர்களால் வழங்கப்படும் பயிற்சிகள் போதாதென்றும், பயிற்சியின் போது குறைந்த ஓவர்களை வீசுமாறு கேட்டுவிட்டு, போட்டியில் அதிக ஓவர்களை வீசுமாறு கேட்பதாலேயே, பந்துவீச்சாளர்கள் காயமடைவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், அண்மைக்கால இலங்கை வரலாற்றில், இலங்கையின் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநர்களாக இருந்தவர்கள் அனைவரும் இலங்கையர்களே. பந்துவீச்சாளர்களுக்கான பயிற்சிகள், அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானிப்பது, பந்துவீச்சுப் பயிற்றுநர்களே. இவ்வாறான நிலையில், வெளிநாட்டுப் பயிற்றுநர்கள் மீது அதற்காகக் குற்றஞ்சாட்ட முடியுமா?

இலங்கையின் முன்னாள் வீரர்கள் பலரை அணுகுவதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை தவறிவிட்டதாகவும், அவர்களைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு அச்சபை செயற்பட்டதாகவும் அவர் இதன்போது குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால், பங்களாதேஷின் பயிற்றுநராகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சம்பிக்க ஹத்துருசிங்கவோடு முரண்பட்டுக் கொண்டு, அவரின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமற்செய்தது, அர்ஜுனவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்க.

சமிந்த வாஸ், வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராக இருந்தபோது, அவருடன் முரண்பாடுகளை வளர்த்ததும் அதே நிஷாந்த. மஹேல ஜெயவர்தனவும் குமார் சங்கக்காரவும் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களோடு முரண்பட்டதும் இதே நிஷாந்த. இதே நிஷாந்தவுடன் இணைந்து தான், இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தலில், ஒரே அணியில் போட்டியிட்டார் அர்ஜுன ரணதுங்க.

இலங்கை கிரிக்கெட் சபையை நடத்துவோருக்கு கிரிக்கெட் தெரியாது என்றும் விமர்சித்த அர்ஜுன, தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திலங்க சுமதிபால மீதான அவரது விமர்சனத்துக்கு, இருவருக்குமிடையிலான தனிப்பட்ட முரண்பாடுகளே காரணமாகும். அது, இருவரிடையிலான உறவைக் கவனிப்போருக்குத் தெளிவாகத் தெரியும்.

அத்தோடு, கிரிக்கெட் சபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற பின்னர், வென்ற அணி மீது தொடர்ச்சியாக விமர்சனங்களை வெளியிட்டு வருவதென்பது, தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அர்ஜுன செயற்படுகிறார் என்பதைக் காட்டுகிறதே தவிர, கிரிக்கெட் மீது அவருக்கு உண்மையில் காணப்படும் பற்றினால் அல்ல என்பதே தெரிகிறது. அத்தோடு, இதற்கு முன்னர் காணப்பட்ட நிஷாந்த ரணதுங்க முக்கிய புள்ளியாக இருந்த கிரிக்கெட் சபை, மிக மிக மோசமாகச் செயற்பட்டமையையும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் காணப்பட்டமையையும், அந்த கிரிக்கெட் சபையினால் நடத்தப்பட்ட உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்தே கிரிக்கெட் சபைக்கு இவ்வளவு அதிகமான கடன் எற்பட்டது என்பதையும் மறந்த அர்ஜுன, எவ்வாறு அவருடன் இணைந்து போட்டியிட முனைந்தார் என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு அவர் இன்னமும் தயாரில்லை என்பது, அர்ஜுனவின் நோக்கங்கள் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .