2024 மே 17, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான், இங்கிலாந்து தொடர் - டெஸ்ட் போட்டிகள் முன்னோட்டம்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையில் கிரிக்கெட் தொடர் மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 3 டுவென்டி டுவென்டி போட்டிகள் என இம்மாதம் 13ஆம் திகதி தொடர் ஆரம்பிக்கவுள்ளது. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு இந்தத் தொடர் நடைபெறவுள்ளது. அண்மைக்காலமாக பாகிஸ்தானின் சொந்த நாடாக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திலேயே போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்படி இந்த தொடரும் அவ்வாறே நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து - பாகிஸ்தானுக்கான தொடரை ஐக்கிய அரபு ராட்சியத்துக்கு மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்குமான நிலை என்று பார்க்கும் போது இங்கிலாந்து அணி பலமாகவே தெரிகின்றது. ஆஷஸ் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியதும், ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா அணியுடன் போராடிய விதமும் இவ்வாறு சொல்லக் காரணமாகவுள்ளது. 20-20 போட்டிகள் பற்றிய எதிர்வு கூறல் சரிவராத ஒரு விடயம். 

டெஸ்ட் போட்டிகள் மூன்றுமே முதலில் ஆரம்பிக்கவுள்ளது. பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் பலமான அணியே. இலங்கையில் வைத்து இலங்கை அணியை வென்று பலமாகவே உள்ளது. எனவே பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து எவ்வளவு பலமாக இருந்தாலும், மிகப் பெரிய சவாலை வழங்கும். கடுமையான போட்டி ஒன்று இந்தத் தொடரில் இருக்கும். இங்கிலாந்து அணியை பொறுத்தளவில் தங்கள் நாட்டிற்கு வெளியே, பொதுவாக ஆசிய ஆடுகளங்களில் விளையாடுவது என்றால் அவர்களுக்கு அது கடினமானதே. இரு அணிகளுமே முழுமை பெற்ற அணிகளே. எனவே பலம் சமநிலையில் உள்ளது.

கடந்த காலங்களிலும் இரு அணிகளும் கடுமையான போட்டியுடனேயே மோதியுள்ளன. 74 போட்டிகளில் 35 போட்டிகள் சமநிலையில் நிறைவாகியுள்ளன. மிகுதி 36 இல் இங்கிலாந்து அணி 22 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி 16 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஐக்கிய அரபு ராட்சியத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டிகளில் 47 போட்டிகளில் 20 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 9 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும், வென்றுள்ள அதேவேளை 18 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. பாகிஸ்தானில் நடைபெற்ற போட்டிகள் 24 இல் பாகிஸ்தான் அணி 4 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும் வென்றுள்ள அதேவேளை 18 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. ஆக இரு அணிகளும் தங்கள் நாடுகளிலும் பார்க்க எதிர் நாடுகளில் பலமாக இருந்துள்ளன. இந்தத் தொடர் நடைபெறவுள்ளது மூன்றாம் நாடாக இருக்கின்ற போதும் இலங்கை அணி மீதான தீவிர வாதிகளின் தாக்குதலின் பாகிஸ்தானின் சொந்த நாடாக கருதப்பட்டு ஐக்கிய அரபு ராட்சியதிலேயே போட்டிகள் நடைபெருகின்றன. பாகிஸ்தானுக்கும் சொந்த நாட்டிலும் பார்க்க அதுவே பலமானதாகவும் உள்ளது. ஐக்கிய அரபு ராட்சியத்தில் பாகிஸ்தான் அணி இதுவரை 22 போட்டிகளில் 11இல் வெற்றி பெற்றுள்ள அதேவேளை, 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. 6 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. இங்கே பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளையும், நியூசிலாந்து 3 போட்டிகளில் 1 போட்டியையும், தென் ஆபிரிக்கா 4 போட்டிகளில் 1 போட்டியையும், இலங்கை 6 போட்டிகளில் 1 போட்டியையும் வென்றுள்ளன.

கடந்த காலப் பெறுதிகள் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக இருந்தாலும், இங்கிலாந்து அணியின் தயார்ப்படுத்தல்கள் இம்முறை பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய சவாலை வழங்கும் என நம்பலாம். மஹேல ஜெயவர்த்தனவை தமது அணியுடன் துடுப்பாட்ட ஆலோசகராக இணைத்துள்ளனர். ஆசிய ஆடுகளங்களில் துடுப்பாடுவது தொடர்பாகவும், சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது தொடர்பாகவும் அவர் ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் இங்கிலாந்து அணிக்கு வழங்கி வருகின்றார். இது பெரிய பலமாக அவர்களுக்கு அமையும். பாகிஸ்தானின் தயார்ப்படுத்தல்கள் குறைவாக உள்ளன. சிம்பாவேயில் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வந்தமையே அதற்கான காரணம்.

பாகிஸ்தான் டெஸ்ட் அணி விவரம் 
மிஸ்பா உல் கக் (தலைவர்), அஹமட் செஷாட், ஷான் மசூட், ஆஸர் அலி, மொஹமட் ஹபீஸ், பவாட் அலாம், ஆசாத் ஷபீக், யூனுஸ் கான், சப்ராஸ் அஹமட், யசீர் ஷா, சுல்பிகார் பாபர், வஹாப் ரியாஸ், இம்ரான் கான், ரகாத் அலி, ஜுனைட் கான்  

அனுபவமான அணி. யூனுஸ் கான், மிஸ்பா உல் ஹக், மொஹமட் ஹபீஸ், ஆஷார் அலி ஆகியோர் முதல் நான்கு இடங்களில் பலமானவர்கள். தற்போது மிக அனுபவமானவர்களும் கூட. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஹமட் செஷாட் இலங்கை தொடரில் ஓரளவு பிரகாசித்து இருந்தார். அண்மைக்காலமாக முழுமையாக இல்லை என்றே சொல்லலாம். அணியின் பயிற்றுவிப்பாளர் வொக்கார் யூனுஸும், தானும் சொய்ப் மலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற விரும்புவதாகவும், ஒருநாள் போட்டிகளில் அவர் சிறப்பான போர்மில் இருப்பதனாலும் அவரின் பந்துவீச்சு மேலதிக பலம் என்பதனாலும் அவரை அணியில் இணைக்குமாறு அணியின் முகாமையாளர் எழுத்து மூலம் கேட்டு அவரை அணியில் இணைத்துள்ளனர். எனவே அவர் ஆறாமிடத்தில் களமிறங்கும் வாய்புகள் அதிகம் உள்ளது. இதனால் அணியில் மீண்டும் இணைக்கப்பட்ட பவாட் அலாம் அல்லது ஆசாட் சபிக்கின் இடம் இல்லாமல் போக வாய்புகள் உள்ளன. சபீக் அண்மைக்காலமாக அணியால் நிறுத்தப்படமுடியாதளவு சிறப்பாக துடுப்பாடியுள்ளார். எனவே அணியால் நீக்க முடியாது. எனவே ஆரம்ப வீரர் அஹமட் செஷாட்டை நீக்கி ஹபீஸ், ஆஷர் அலி ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்க வாய்புகள் உள்ளன. ஏழாமிடத்தில் விக்கெட் காப்பாளர் சப்ராஸ் அஹமட். அவரின் இடம் உறுதியானது. ஜுனைட் கான், வஹாப் ரியாஸ் ஆகியோர் வேகப் பந்துவீச்சாளர்களாக நிச்சயம் அணியில் இடம் பிடிப்பர். யசீர் ஷா எந்த கேள்வியும் இல்லாமல் அணியில் சுழல்ப்பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடிப்பார். அண்மைக்கால பெறுதிகளின் படி ரஹாத் அலி, இம்ரான் கான் ஆகியிருக்கு இடையில் போட்டி நிலவும். அண்மைக்கால போர்ம் பெறுதிகள் என்பனவற்றைப் பார்த்தல் ஜுனைட் கானை நீக்கி மற்றைய மூவரும் விளையாடலாம். இரண்டு முழு நேர சுழல்ப்பந்து வீச்சாளர்கள் விளையாடுவது சந்தேகம். ஹபீஸ், மலிக் இருவரும் சுழல்ப்பந்து வீசுபவர்கள். 

இந்த அணி பலமான சமநிலையான அணி. துடுப்பாட்டம் இங்கிலாந்திலும் பார்க்க பலமானது. அனுபவமும் கூடியது. மறுபுறம் பந்துவீச்சு, இங்கிலாந்து அணியிலும் பார்க்க அனுபவமும், பலமும்.  

அலஸ்டயர் குக் (தலைவர்), மூயேன் அலி, ஜேம்ஸ் அன்டர்சன், ஜொனி பெயர்ஸ்டோ, இயன் பெல், சடுவோர்ட் ப்ரோட், ஜோஸ் பட்லர், ஸ்டீபன் பின், அலெக்ஸ் கேல்ஸ், சமித் பட்டேல், லியாம் பிளங்கட், ஆதில் ரசீட், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ரெய்ளர், மார்க் வூட்.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசை பழைய, புதிய கலவை. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அணித் தலைவர் அலஸ்டயர் குக். தன்னுடன் மூயேன் அலி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என அறிவித்துள்ளார். புதிய முயற்சி. ஆனால் கை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச ரீதியில் இன்னுமொரு சனத் ஜெயசூரியா தயாராகின்றாரா என கேக்கத் தொன்றுகின்றது. 

சுழற்பந்துவீச்சாளராக அணிக்குள் வந்து சகல துறை வீரராக உருவெடுத்து எட்டாம், ஒன்பதாமிடங்களில் துடுப்பாடி வந்தவர் தற்போது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மாறியுள்ளார். இது பெரிய பலம். ஆரம்ப வீராக சாதித்துக் காட்டிவிட்டால் இங்கிலாந்து அணி மேலதிக துடுப்பாட்ட வீரர் அல்லது பந்து வீச்சாளருடன் களமிறங்க முடியும். இதுபோன்ற திட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பவன் நான். இந்திய அணியின் அஷ்வின் முன்வரிசையில் களமிறங்க வேண்டும் என்று கூறக்கூடியவன். இங்கிலாந்து அணியின் இந்த மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன். மூன்றாமிடத்தில் இயன் பெல். டெஸ்ட் போட்டிகளில் அண்மைக்காலமாக மிக மோசமாக விளையாடி வருவதனால் போர்மில் இருந்த ஒருநாள் போட்டிகளில் அணியில் சேர்க்காமல் விட ஓய்வை அறிவித்து டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார். இந்த தொடர் இவருக்கு வாழ்வா சாவா தொடரே.

நான்காமிடத்தில் ஜோ ரூட். இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட  பலம் இவரே. 54.66 என்ற உயரிய சராசரியில் ஓட்டங்களை குவித்துள்ளார். ஆசிய ஆடுகள சோதனை இவருக்கு சவால். இந்தியாவில் 2012ஆம் ஆண்டு அறிமுக போட்டியைத் தவிர அதன் பின்னர் ஆசிய கள நிலைமைகளில் விளையாடவில்லை. இந்த தொடரில் அவர் எவாறு துடுப்பாடப் போகின்றார் எனபதில் இவரின் சர்வதேச திறைமை அடங்கியுள்ளது. நல்ல முறையில் ஓட்டங்களை குவித்தால் அடுத்த பருவகால வீர்களாக இப்போது வர்ணிக்கப்படும் விராத் கோலி, ஸ்டீபன் ஸ்மித் ஆகியோருடன் ஐவரும் இணைந்து கொள்வார் என்பது உறுதி. ஐந்தாமிடம் பென் ஸ்டோக்ஸ் என கூறினாலும் ஆசஸ் தொடரை நல்ல முறையில் ஆரம்பித்து, மோசமாக நிறைவு செய்தமை அவரின் இடத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த 7 இன்னிங்ஸில் 20 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார். இவற்றுள் மூன்று 0 ஓட்டம். அடுத்த ஆறாமிடத்தில் முன்வரிசை வீரர் ஒருவருக்கு வாய்ப்புக்கிடைக்கும் என நம்பலாம். அலெக்ஸ் கேல்ஸ் அணியில் இருப்பதானால் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அடுத்த இடம் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லருக்கு. அந்த இடம் பலமான நம்பகமான இடம். 

எட்டாமிடத்தில் ஸ்டுவோர்ட் ப்ரோட். சகலதுறை வீரராக களமிறங்குவார். துடுப்பாட்டத்தில் ஓரளவு பலம் சேர்ப்பார். அடுத்த இடத்தில் ஆதில் ரசீத் அல்லது சமித் பட்டேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு உண்டு. இரண்டாவது சுழற்பந்துவீச்சாளருக்கான இடம். ஆதில் ரசீத்துக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஜேம்ஸ் அன்டர்சனுடன் ஆரம்ப பந்துவீச்சை பகிரப்போபவர் யார்? மார்க் வூட் மாத்திரமே வாய்ப்புகளை கொண்டவர். லியாம் பிளங்கட் ஒரு வருடத்தின் பின் மீண்டும் அணிக்குள் இடம் பிடித்துள்ளார். மார்க் வூட்டுக்கு பதிலாக இவரை இங்கிலாந்து அணியில் சேர்க்க வாய்ப்புகள் உண்டு. வூட் ஆரம்ப போட்டிகளில் சரியாக செயற்பட தவறின் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும். ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பந்துவீச்சு பகுதி நேரமாக கை கொடுக்கும்.

இந்த அணியில் நீண்ட துடுப்பாட்ட வரிசை உள்ளது. ஆனால், முழுமை பெறவில்லை. பல வீரர்கள் கேள்விக்குறியான நிலையில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக நல்ல முறையில் செயற்பட்டால் பாகிஸ்தானுக்கு சவால்களை வழங்கி சமநிலை நோக்கி செல்ல அதிக வாய்புகள் உள்ளன. பந்துவீச்சில் பலமான, அனுபவமான ஜேம்ஸ் அன்டர்சன், ஸ்டுவோர்ட் ப்ரோட் ஆகியோர் பலம். மூயேன் அலியின் சுழற்பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு சவால் மிக்கதாக இருக்குமா என்பது தொடர் முடியவே தெரியும். ஆசிய ஆடுகளங்களில் அல்லது அதற்கு ஒப்பான ஆடுகளங்களில் பந்துவீசவில்லை. தன்னை நிரூபித்துக்கொள்ள நல்ல வாய்ப்பு. பாகிஸ்தானிய வம்சாவழியை சேர்ந்தவரான இவர் பாகிஸ்தானுக்கு எதிராக எவ்வாறு விளையாடப்போகின்றார் என்பதும் சுவாரசியமே. 

தரப்படுத்தல்கள் இரு அணிகளுக்குமே முக்கியமானது. மூன்றாமிடத்தில் இங்கிலாந்து அணியும் நான்காமிடத்தில் பாக்கிஸ்தான் அணியும் உள்ளன. எந்த அணி தொடரை வெற்றி பெறுகின்றதோ அந்த அணி மூன்றாமிடத்தை பெற்றுக்கொள்ளும். சமநிலை முடிவு இரு அணிகளுக்கும் மாற்றத்தைத் தராது. ஆனால், தோல்வியடையும் அணி இந்திய அணியை தாண்டி ஐந்தாமிடத்துக்கு செல்லும். இந்திய அணி நான்காமிடத்தைப் பெற்றுக் கொள்ளும். இரண்டு போட்டிகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அணி அவுஸ்திரேலியா அணியை பின் தள்ளி இரண்டாமிடத்துக்கு முன்னேறும் அவ்வாறான நிலையில் தொல்வியுறும் அணி ஆறாமிடத்துக்கு பின் தள்ளப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .