சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் இடம்பெறும் கசிப்பு உற்பத்தி, விற்பனை தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக கூறி, திங்கட்கிழமை (26) இரவு வாள், கத்தி, பொல்லுகளுடன் வந்த 15க்கும் மேற்பட்டோர், இரண்டு வீடுகளையும் வீட்டிலுள்ள பொருட்களையும் சேதமாக்கியுள்ளனர்.
முட்கொம்பன் கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கசிப்பு உற்பத்தி, விற்பனைகளால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுவது தொடர்பிலும் இதைக் கட்டுப்படுத்துமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர், மாவட்ட அரச அதிபர், பொலிஸ் உயர்பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு கிராமமட்ட அமைப்புகளால் மகஜர்களும் கையளிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், கசிப்பு உற்பத்தி குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகத் தெரிவித்து, வாள்கள், கத்தி, தடிகள் என்பவற்றுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த 15 க்கும் மேற்பட்டோர், இரண்டு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் வீட்டில் இருந்த பெருமதியான பொருட்களையும் சேதப் படுத்தியுள்ளனர். இதன்போது வீட்டில் இருந்தவர்கள், அயலவர்களின் வீடுகளில் பாதுகாப்பு தேடி ஓடியிருந்தனர்.
அக்கராயன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.