2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்

Mayu   / 2024 மார்ச் 27 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி கேப்பாப்புலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை புதன்கிழமை (27) முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள முல்லைத்தீவு கேப்பாப்புலவு இராணுவ படை தலைமையகத்திற்கு இலங்கையின் இராணுவ தளபதி வருகை தந்திருந்தார். அவரிடம் தமது சொந்த காணிகளை விடுவித்து தருமாறு கோரி மகஜர் கையளிக்க குறித்த இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக ஒன்று கூடி கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

எனினும் இராணுவ தளபதியை தற்போது சந்திக்க முடியாதெனவும் புதன்கிழமை (27) மாலை 3 மணியளவில் 5 நபர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு மேற்கொண்டு தருவதாகவும் இராணுவத்தினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த கவனயீர்ப்பினை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தனர்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கடந்த 11.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர். இதன்போது குறித்த கடிதத்தை தான் உரிய தரப்புக்களுக்கு அனுப்பி  பத்து நாட்களில் ஒரு பதிலை பெற்று வழங்குவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் திங்கட்கிழமை (25) கேப்பாபுலவு மக்கள் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடிய போது தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு இதுவரை கிடைக்கவில்லை என மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு  மக்கள் தெரிவித்திருந்தனர்.

கேப்பாப்புலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் , ஆலயங்கள் , தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது..

குறிப்பாக மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் பல குறித்த காணியிலேயே காணப்படுகின்றன. 62 நபர்களின் 171 ஏக்கர் காணிகள் தற்போது விடுவிக்கப்படாது இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X