2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் விஜயம்

Niroshini   / 2021 ஜூன் 30 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், டி.விஜித்தா

வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மொஹமட் சாட் கட்டாக், இன்று (30) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு வருகை தந்தார்.

இதன்போது, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதனை பாகிஸ்தான் தூதுவர் மொஹமட் சாட் கட்டாக் சந்தித்து கலந்துரையாடினர்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி, சமகால நிலைமைகள் தொடர்பில், பாகிஸ்தான் தூதருக்கு காணொளி முறையில் மாவட்டச் செயலாளர், திணைக்கள தலைவர்களால் விளக்கமளிக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில், யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன், மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன், மேலதிக செயலாளர் (காணி) முரளிதரன், திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாண மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை செய்வதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தாரென்றும் கூறினார்.

அத்துடன், விவசாயம், கடற்றொழில், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காணப்படும் நெருக்கடிகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆராய்ந்தார் என்றும், அங்கஜன் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் வியாபாரிகளும் யாழ்ப்பாண வியாபாரிகளும் இணைந்து, எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்தலாம், எவ்வாறான பொருள்களை ஏற்றுமதி செய்யலாம் என பல்வேறு திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன என்றும், அவர் தெரிவித்தார்.

'அதேநேரம், முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களையும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முன்மொழிந்துள்ளார்.

'இதேவேளை, யாழ். மாவட்ட மாணவர்கள், பாகிஸ்தானில் சென்று உயர் கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில் திட்டங்களை வழங்குவதாகவும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரலாய இணையத்தளத்தில் அதற்குரிய விண்ணப்பங்கள் உள்ளன. எதிர்வரும் ஜுலை மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர், விண்ணப்பங்களை பூரணப்படுத்தி அனுப்பினால், அதனை பரீசிலணை செய்து, மாணவர்கள் முற்றுமுழுதாக புலமைப்பரிசிலில் கற்பதற்கான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்' என்றும், அங்கஜன் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .