2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

அரச உத்தியோகத்தர்கள் முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 31 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

-ஏ.எல்.எம்.சினாஸ்

“அரச உத்தியோகத்தர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டும்” என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.கணேஸ்வரன் தெரிவித்தார்.

கடற்கரையை அண்டிய கரையோரப் பிரதேசங்களை பாதுகாப்பது தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வு அம்பாறை மாவட்ட கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில், நேற்று (30) கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே சுகாதார வைத்திய அதிகாரி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கிராமப் புறங்களிலும் பார்க்க நகர்ப்புறம் தற்போது அதிகளவில் மாசடைந்து வருகிறது. நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் குப்பைகளை சேகரித்து வீதிகளில் வீசிவிடுகின்றனர். விசாரித்தால் மாநகரசபையின் குப்பை லொறி வரவில்லையென கூறுகின்றனர். எடுத்ததெற்கெல்லாம் குப்பைலொறியை எதிர்பார்க்கக்கூடாது.

ஆரம்ப காலங்களில் மக்கள் தமது வீட்டுக் குப்பைகளை வீட்டில் புதைத்து அல்லது எரித்துத் தான் வாழ்ந்தார்கள். அப்போது சுகாதாரப் பிரச்சினை குறைவாகத்தான் இருந்தது.

இன்று பொதுஇடங்களை யாரும் கவனிப்பதில்லை. பாடசாலை, முன்பள்ளி பாடசாலைகள் நடைபெறும் இடங்கள், கோயில்கள், மயானங்களை அண்டிய பகுதிகளில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. தூர இடங்களில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் குப்பைகளை கொண்டுவந்து வீசிவிட்டு செல்கின்றனர். தனிப்பட்ட முறையில் ஒருவர் செய்யும் வேலையால் எல்லோருக்கும் பிரச்சினையாக உள்ளது.

கடற்கரை ஓரங்களில் சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் குப்பைகளை வீசிவிடுகின்றனர். சில பகுதிகளில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு காணப்படுகிறது. இது உயிர்வாழ்வதற்கு ஆபத்தான ஒன்றாகும்.

எமது எதிர்கால சந்ததிகளுக்காக சிந்தித்து எமது சூழலை நாம் பாதுகாக்க வேண்டும். இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும் நாம் கடந்த காலங்களில் மக்களின் நன்மை கருதி சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்வரும் காலங்களில் சூழலுக்கு இச்சுறுத்தலாக செயற்படுபவர்களுக்கு எதிராக தகுதிநிலை பாராமல் உரிய சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளோம்.

அரச உத்தியோகத்தர்கள் தமது வீட்டுச்சூழலையும் பொது இடங்களையும் பாதுகாப்பதில் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். அரச உத்தியோகத்தர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். நமது இயற்கை வளத்தை சுத்தமாக பாதுகாத்தால் தான் எம்மால் சுத்தமாக நோயில்லாமல் வாழமுடியும் எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X