2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

'உலமாக் கட்சி கூட்டிணைந்துள்ள அ.இ.ம.காங்கிரஸை கிழக்கு மாகாண மக்கள் பலப்படுத்த வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 26 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண மக்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஒதுக்கிவிட்டு உலமாக் கட்சி கூட்டிணைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையைப் பலப்படுத்தி அதற்கொரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டுமென உலமாக் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் 16 வருடங்களில் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அதற்கு வெளியிலுள்ள மக்களுக்கும் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. இதற்கு அக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களே சாட்சியாவார்கள்.

மு.கா.வின் தலைமை கிழக்கு மாகாணத்துக்கு வேண்டுமெனக் கூறும்; நீங்கள், அ.இ.ம.கா.வின்; தலைமை இம்மாகாணத்துக்கு வேண்டுமென்று ஏன் கேட்பதில்லையெனச் சிலர் எம்மிடம் கேட்கின்றனர்' என்றார்.

'மு.கா.வின் தலைமை கிழக்கு மாகாணத்துக்கு வேண்டுமென்பது உலமாக் கட்சியின் கோரிக்கை அல்ல. கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாக்குகளை விற்றுப் பிழைக்கும் மு.கா.வை அம்மாகாண மக்கள் குப்பையில் தூக்கிப்போட வேண்டுமென்றே உலமாக் கட்சி கூறி வருகிறது.

இந்நிலையில், கிழக்கைத் தலைமையாகவும் தளமாகவும் கொண்ட கட்சியை கிழக்கு மாகாண மக்கள்; பலப்படுத்தி, அக்கட்சி தேசிய தலைமைகளுடன் இணைந்து செல்வதன் மூலம் இம்மாகாணத்துக்கான சலுகைகள், உரிமைகள் போன்ற அரசியல் வெற்றிகளை பெறமுடியுமென்பது எமது கட்சிக்கொள்கையாகும். இந்த உண்மையின் ஒருபக்க உணர்வே கிழக்கின் எழுச்சியாகும்' என்றார்.

'மேலும், கிழக்கு மாகாண மக்களுக்கு மட்டும் ஒரு கட்சி தேவையென்பதோ, முஸ்லிம்களின் தலைவர் கிழக்கைச் சேர்ந்தவராக மட்டும் இருக்க வேண்டுமென்றோ நாம் கூறுவதில்லை. இருந்தபோதிலும், கிழக்கு மாகாணத்துக்கு  வெளியிலான அரசியல் தலைமகன் எவரும் அம்மாகாண முஸ்லிம்களின் தனியான உரிமை விடயத்தில் இதுவரையில் கவனம் செலுத்தவுமில்லை. எதையும் பெற்றுத்தரவுமில்லை என்பதே எமது குற்றச்சாட்டு. இதனை ஹக்கீமின் 16 வருடத்
தலைமை மிகப்பெரிய உதாரணமாகும்.

அ.இ.ம.கா. இன்னமும் பெரும்பான்மையான கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறாத நிலையிலும், அம்மாகாண மக்களின்; விடயத்தில் அதிக கரிசனையுடன் செயற்படுகிறது.

கிழக்கைத் தளமாகவும் தலைமையாகவும் கொண்ட உலமாக் கட்சி தேசிய அளவில் முஸ்லிம்களின் உரிமைக் குரலாக தனித்தும் கூட்டிணைந்தும் செயற்படுகிறது என்பதை முழு முஸ்லிம் சமூகமும் அறியும்' எனவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .